மாகாணசபைத் தேர்தல் விவகாரமானது தொடர்ச்சியாக தாமதமடைந்து செல்லும் நிலைமையே காணப்படுகின்றது. தேர்தலை விரைவாக நடத்தவேண்டுமென அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தேர்தல் ஆணைக்குழுவும் வலியுறுத்தி வருகின்றபோதிலும் தேர்தல் தொடர்ந்து தாமதமடையும் சமிக்ஞையையே வெளிக்காட்டி வருகிறது. புதிய தேர்தல் முறைமையில் அடுத்துவரும் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டியிருப்பதே தற்போதைய தேர்தல்களை நடத்துவதில் காணப்படும் தாமதத்துக்கு பிரதான காரணம் என்று கூறப்பட்டு வருகின்றது. எவ்வாறெனினும் இந்த விடயத்தை காரணம் காட்டி தொடர்ந்து தேர்தலை தாமதப்படுத்தக்கூடாது.
13ஆவது திருத்த சட்டத்தில் அமைந்த மாகாணசபைகளின் கீழ் பல்வேறு நிர்வாக செயற்பாடுகள் காணப்படுகின்றன. அவை தொடர்பில் ஆராய்ந்து சாதக பாதக நிலைமை குறித்து விவாதித்து தீர்மானம் எடுப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மாகாணசபைகள் இயங்க வேண்டியது அவசியமாகும். மாறாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் செயற்படும் நிலைமை நீடிப்பது ஆரோக்கியமாக அமையாது. இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற கட்சி தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டமும் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுபான்மை கட்சி பிரதிநிதிகள் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்த வேண்டும் என மிகவும் வலுவான முறையில் வலியுறுத்திய நிலையில் தீர்மானம் எதுவுமின்றியே இந்த கலந்துரையாடல் நிறைவடைந்தது. அதுமட்டுமன்றி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாது கூட்டு எதிரணியும் மக்கள் விடுதலை முன்னணியும் புறக்கணித்திருந்தன. அத்துடன் பிரதமர் தலைமையிலான கட்சி தலைவர் கூட்டத்துக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்த கூட்டு எதிரணி அரசாங்கம் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.
இது இவ்வாறிருக்க தேர்தல் இவ்வாறு தாமதப்பட்டுக்கொண்டு செல்வது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியின் முக்கியஸ்தர் டிலான் பெரேரா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில் விருப்புவாக்கு முறைமையை அகற்றி புதிய தேர்தல் முறைமையை கொண்டுவரவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகின்றது. எமது முயற்சியினால்தான் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறை புதிய முறைமைக்கு வந்தது. அந்தவகையிலேயே மாகாணசபைத் தேர்தல் முறைமையையும் மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன்படி புதிய முறைமைக்கு ஏற்ப எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அது தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியவராக காணப்படுகின்றார். ஆனால் இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக சர்ச்சை நிலைமையை நீடித்துவருகின்றனர் என்றும் சுதந்திரக்கட்சியின் மாற்று அணியின் முக்கியஸ்தர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி பார்க்கும்போது மாகாண சபை த்தேர்தலை தாமதப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றமை தெளிவாகின்றது. ஆனால் இவ்வாறு தேர்தலை தாமதப்படுத்தாமல் விரைவில் புதிய முறைமையில் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுதந்திரக்கட்சியின் சுயாதீன அணியின் முக்கியஸ்தர் டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை புதிய முறைமையிலேயே தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் எந்த முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பது குறித்து முதலில் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பழைய முறையிலா அல்லது புதிய முறையிலா தேர்தலை நடத்துவது என்பது குறித்து அரசாங்கமே இன்னும் தீர்மானம் எடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. பிரதான கட்சிகளே முரண்பாடுகளுடன் மோதிக்கொண்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகமே எமக்கு உள்ளது. கடந்த கட்சி தலைவர் கூட்டத்திலும் நாம் எமது தரப்பு காரணிகளை முன்வைத்தும் எந்தவிதமான நிலைப்பாடும் எட்டப்படவில்லை. கட்சி தலைவர் கூட்டங்களை கூட்டி வாத விவாதம் செய்வதில் எந்த பயனும் இல்லை. விவாதம் செய்து தேர்தலை நடத்த முடியாது எனவும் விஜித்த ஹேரத் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேர்தலை நடத்தாது பிற்போட அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. இரண்டு கட்சிகளும் இருவேறு நிலைப்பாடுகளில் இருந்துகொண்டு மக்களின் வாக்குரிமையை பறித்து வருகின்றன. எம்மைப் பொறுத்தவரையில் தேர்தலை நடத்த வேண்டும், உரிய நேரத்தில் தேர்தல்கள் எந்த முறையிலாவது நடத்தப்பட வேண்டும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க மாகாணசபைகள் நிறுவப்பட வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இவ்வாறு இருக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் புதிய தேர்தல் முறைமையின் ஊடாக சிறிய கட்சிகளுக்கு ஒருபோதும் ஆசனங்கள் குறைவடையாது. அந்த கட்சிகள் பெறும் வாக்குகளுக்கு ஏற்ப ஆசனம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. .
புதிய முறைமையில் தேர்தல் இடம்பெறவேண்டும். அதன் மூலமே வன்முறைகளை குறைக்கலாம். செலவினங்களை குறைக்கலாம். வேட்பாளர்களுக்கிடையில் போட்டித்தன்மை ஏற்படாது எனவும் பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் முறைமை தொடர்பாக அண்மைக்காலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த கூட்டங்களின்போது எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. மக்கள் விடுதலை முன்னணியும் சுதந்திரக் கட்சியும் புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிவருகின்ற நிலையில் சிறுபான்மை கட்சிகள் பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இதனிடையில் புதிய முறைமையின் கீழ் சிறுபான்மை கட்சிகளுக்கு அநீதி ஏற்படாது என்பதை கூறிக்கொண்டிருக்காமல் ஏன் புதிய முறைமை பாதகமாக அமைந்துள்ளது என்பதற்கான காரணத்தை ஆராயவேண்டும். அதனை தவிர்த்து சிறுபான்மை கட்சிகளுக்கு புதிய தேர்தல் முறைமை பாதகமாக அமையாது என்று தொடர்ந்து கூறுவது ஆரோக்கியமாக அமையாது. சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் புதிய தேர்தல் முறைமை குறித்து ஆராய்ந்துவிட்டே அதனூடாக தமக்கான பாதகம் குறித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். எனவே அரசாங்கம் புதிய தேர்தல் முறைமைக்கு செல்லுமாக இருந்தால் அது அனைத்துத் தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் உருவாக்கப்படவேண்டும். அதேபோன்று அந்த விடயத்தை காரணம் காட்டி தேர்தலை தாமதப்படுத்திக்கொண்டிருக்கக்கூடாது. உள்ளூராட்சி மன்றங்களைப் போன்று மாகாணசபைகளும் மக்களுடன் நேரடியாக ஈடுபடும் அமைப்புக்களாகும். எனவே அவற்றுக்கான தேர்தல்கள் உரிய முறையில் நடத்தப்பட்டால் மட்டுமே அதனூடாக மக்கள் தமக்குத் தேவையான பிரதிநிதிகளை தெரிவுசெய்யக்கூடிய வாய்ப்பு கிட்டும்.
எனவே இந்த விடயத்தை அரசாங்கம் கவனத்தில் கொண்டு தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது குறித்து விரைவாக ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டும். இங்கு தேர்தல் முறைமையானது எந்தவொரு தரப்புக்கும் அநீதியை இழைக்கக்கூடாது என்பதையும் தேர்தல் நடைபெறுவதை இழுத்தடிக்கக்கூடாது என்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான தேர்தலானது உரிய நேரத்தில் எவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் நடத்தப்படவேண்டியது மிகவும் அவசியமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
No comments:
Post a Comment