மாற்றங்களினூடாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி அதனூடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே சிறந்த வழிமுறையாகும். எனவே, மாற்றங்களின்றி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. மாற்றங்களின்றி நல்லிணக்கம் ஏற்பட முடியாது. நல்லுறவும் இன ஐக்கியமும் நிலையான சமாதானமும்கூட சாத்தியமில்லை.
இந்த வகையில்தானோ என்னவோ அரசியலமைப்பை மாற்றியமைப்பதினூடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அணுகுமுறையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைப்பதற்கான நோக்கங்கள் ஒருமுகமானவையா என்பதில் தெளிவில்லை. அது கேள்விக்குறிக்கு உரியது என்று கூட கூறலாம்.
பல தசாப்தங்களாகத் தீர்வு காணப்படாத காரணத்தால் நாட்டில் இனப்பிரச்சினை புரையோடிப் போயிருக்கின்றது. அரசியல் தளத்தில் இந்தப் பிரச்சினை ஆழமான இன முறுகலாக உருமாற்றம் பெற்றிருக்கின்றது. சிறுபான்மை தேசிய இனத்தின் அரசியல் உரிமைகளைப் பங்கிட்டுக் கொள்வதற்கு பேரினவாதிகளுக்கு விருப்பமில்லை.
இந்த நாடும் இந்த நாட்டின் ஆட்சி உரிமைகளும் அரசியல் மயமான மதக் கொள்கையும் தனக்கு மட்டுமே சொந்தமானவை என்ற ஆழமான மனப்பாங்கில் பெரும்பான்மை இனம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த அரசியல் உளவியல் நிலைப்பாடானது வெறுமனே பேரின அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்லாமல் பெரும்பான்மையினத்தின் சாதாரண மக்களுடைய மனங்களிலும் ஆழமாக வேரூன்றச் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நிலைமை மோசமானது, ஆபத்தானது என்பதை மாறி மாறி ஆட்சிசெய்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் வரலாற்றுச் செயல்முறைகள் அனுபவ ரீதியாக உணர்த்தியிருக்கின்றன.
நவீன ,விஞ்ஞான தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் உலக ஒழுங்கு முறை பல மாற்றங்களுக்குள்ளாகி வளர்ச்சியடைந்துள்ள போதிலும் அந்த உலக நீரோட்டத்தில் இலங்கை இணையவில்லை என்றே கூற வேண்டும். இதன் காரணமாகவே மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமான சட்ட நடைமுறைகள் என்பவற்றை உலக ஒழுங்குக்கு அமைவாகச் செயற்பட அது மறுத்து வருகின்றது.
இலங்கையின் ஆட்சியுரிமை என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் மாத்திரமே பரம்பரைச் சொத்தாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கட்சிகளே மாறி – மாறி ஆட்சி நடத்தி வருகின்ற போக்கு இந்த அரசியல் சொத்துரிமைப் போக்கை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியே தமது செல்வாக்குக்கு ஏற்ற வகையிலும் தமது கட்சியின் எதிர்கால சுயநலன்களின் அடிப்படையிலும் நாட்டின் அரசியலமைப்பை மாற்றி எழுதியிருக்கின்றன.
அந்த வகையில் 1972 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் 1978 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியும் இருவேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்கியிருந்தன. ஆங்கிலேயரிடமிருந்து 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திர நாடாக, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஓர் அங்கமாக அதன் முதலாவது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
பிரித்தானிய ஏகாதியத்தியத்தில் கட்டுண்டிருந்த இலங்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1972 ஆம் ஆண்டு உருவாக்கிய புதிய அரசியலமைப்பின் மூலம் குடியரசாக மாற்றியமைத்தது. அதற்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கியது. அந்த வகையில் ஜனநாயக சோஷலிசக் குடியரசாகிய இலங்கையில் 3 தடவைகள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு கடந்த 40 வருடங்களில் 19 தடவைகள் திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து 20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை, தற்போது 4 ஆவது தடவையாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
முன்னைய நடவடிக்கைகளைப் போன்று அல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கிய இரு கட்சி அரசு அல்லது கூட்டு அரசாங்கத்தின் கீழ் இந்த இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லை கடந்த அதிகாரப் பிரயோகம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியின் பிதாமகராகிய ஜே.ஆர்.ஜயவர்தனவும் அவருக்குப் பின்னர், மஹிந்த ராஜபக் ஷவும் அந்த ஆட்சி முறையின் உச்சக்கட்ட அதிகாரங்களைப் பயன்படுத்திச் செயற்பட்டிருந்தனர். ஜே.ஆர்.ஜயவர்தனவின் பின்னர் பிரேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிகளாகப் பதவியேற்றிருந்த போதிலும் அந்தப் பதவியின் உச்சக்கட்ட அதிகார பலத்தை அவர்கள் பிரயோகித்திருக்கவில்லை.
ஆனால், ஜே.ஆர்.ஜயவர்தனவிலும் பார்க்க பல படிகள் முன்னேறிச் சென்று ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார பலத்தை மஹிந்த ராஜபக் ஷ பயன்படுத்தி இருந்தார். அவருடைய அதிகாரப் பிரயோக நடவடிக்கைகள் எல்லை மீறிய வகையில் காணப்பட்டன. அத்துடன் அந்தப் பதவிக்கு மேலும் அதிகார பலத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர் துணிந்து மேற்கொண்டிருந்தார்.
அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியொருவர் எதேச்சாதிகாரப் போக்கில் காலடியெடுத்து வைப்பதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த அரசியலமைப்புச் சட்ட விதிகள் மாற்றியமைக்கப்பட்டன.
இரண்டு தடவைகள் மட்டுமே ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என்ற அரசியலமைப்பு விதியை இரண்டு தடவைகளுக்கு மேலேயும் பதவி வகிக்க முடியும் என்று திருத்தச் சட்டத்தின் மூலம் மாற்றியமைத்து 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாத ஜனாதிபதி தேர்தலில் அவர் களமிறங்கியிருந்தார். அதேநேரம் வெல்ல முடியாதது எனக் கருதப்பட்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அவர் அடைந்த வெற்றியை அரசியல் முதலீடாக்கி தனது குடும்பச் செல்வாக்கை அரசியல் அதிகார பலத்தில் நிலைநிறுத்துவதற்கான சுய அரசியல் இலாப நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்திருந்தார்.
ஜனநாயகக் குடியரசு என்ற அரசியலமைப்பின் தத்துவம் இதன்மூலம் தகர்க்கப்பட்டு எதேச்சாதிகாரப் போக்கு தலையெடுத்திருந்தது. இதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ஜனநாயக சக்திகள் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டிருந்தன. அந்த வகையிலேயே எதிரும் புதிருமான ஆட்சி அரசியல் போக்கைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் மூலம் ஆட்சியமைத்தன. அந்தக் கூட்டாட்சியே புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இணக்கமில்லாத அரசியல் களம்
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பேரின அரசியல்வாதிகள் ஒரு நோக்கத்தையும் சிறுபான்மை அரச தலைவர்கள் வேறொரு நோக்கத்தையும் கொண்டிருக்கின்றார்கள். இரு தரப்பினரும் ஏகமனதான தீர்மானங்களின் அடிப்படையில் இந்த மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கவில்லை.
இரு தரப்பினரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொதுவான நோக்கத்தைக் கொண்டிருந்தாலும் பேரின அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாமல் செய்ய வேண்டும், தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். சிறுபான்மை இன மக்களின் சார்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்கள்.
பேரின அரசியல்வாதிகள் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான நகர்வுகளை முன்னெடுக்கின்றபோது அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே தமிழ் அரசியல் தலைவர்களின் விருப்பமாகும். ஏனெனில் ஒற்றையாட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட நடைமுறை அரசியலமைப்புக்கு உட்பட்ட நிலையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பதற்கு வாய்ப்பில்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையின் கீழ் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தமிழ்த் தலைவர்களின் நிலைப்பாடாகும். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலமே இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற அடிப்படையில் அவர்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு உற்சாகமான ஆதரவை வழங்கியிருகின்றார்கள்.
ஆட்சி மாற்றத்துக்குப் பேருதவி புரிந்த தமிழ்த் தலைவர்களுக்குக் கைமாறாக புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காணலாம் என்பது பேரின அரசியல்வாதிகளின் இணக்கப்பாடு. ஆனால், அந்த அரசியல் தீர்வு எப்படியானது என்பதில் இருதரப்பினருக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இந்த விடயத்தில் இரு தரப்பினரும் எட்டாத தொலைவிலேயே இருக்கின்றனர்.
ஒற்றையாட்சி முறைமை மாற்றப்பட வேண்டும். சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இறைமையுடன் கூடியதாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது தமிழர் தரப்பின் கோரிக்கையாகும். ஆனால் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒற்றையாட்சியை ஒருபோதும் மாற்ற முடியாது என்பது பேரின அரசியல்வாதிகளின் நிலைப்பாடாகும். இரண்டு நிலைப்பாடுகளுக்குமிடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது. இந்த இடைவெளியைக் கடந்து இரு தரப்பினரும் ஒன்றிணைவதனூடாகத்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குரிய மாற்றத்தைக் காண முடியும்.
இந்த நிலைமைகள் ஒருபுறமிருக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு இணக்கப்பாடான ஓர் அரசியல் களம் காணப்படுகின்றதா என்பதும் கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது. இணைந்த ஆட்சியை உருவாக்கும்போது இரண்டு கட்சிகளினதும் தலைவர்களிடம் காணப்பட்ட ஒன்றிணைந்த செயற்பாட்டுக்கான அரசியல் மனநிலை புதிய அரசியலமைப்புக்கான முக்கியமான முடிவுகளை மேற்கொள்கின்ற இச் சந்தர்ப்பத்தில் காணப்படவில்லை. மாறாக முரண்பாடான அரசியல் களத்திலிருந்தே அந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகின்றது.
இரண்டு கட்சிகளும் இணைந்து தோற்கடித்த மஹிந்த தரப்பினர் உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர்களாக எதிர்வரும் தேர்தல் பந்தயத்தில் முன்னணியில் திகழ்வதற்கான அரசியல் கள அறிகுறிகளே காணப்படுகின்றன.
அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலும் அதனைத் தொடர்ந்து நடைபெற வேண்டிய ஜனாதிபதி தேர்தலுடன் பொதுத் தேர்தலும் இரு தரப்பினரையும் அரசியல் ரீதியான பதற்ற நிலைமைக்கே தள்ளியிருக்கின்றது.
தேர்தல் பரபரப்பில் தீர்வு முயற்சிகள்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது அரசியல் ரீதியாக மிகுந்த பொறுப்புமிக்க பணியாகும். அதற்கு முதலில் நிதானமும் அரசியல் விட்டுக்கொடுப்புக்குரிய தன்மையும் இணக்கப்பாட்டுடன் கூடிய பரஸ்பர நம்பிக்கை மிகுந்த மனநிலையும் அவசியம். ஆனால், அரசியல் தீர்வுக்கான புதிய அரசியமைப்பை உருவாக்குகின்ற பணியில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் அத்தகைய சூழல் காணப்படவில்லை.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் தொடர்ந்து வந்த பொதுத் தேர்தலிலும் படுதோல்வியைத் தழுவிய மஹிந்த ராஜபக் ஷ 3 ஆண்டுகளில் அரசியல் பலம் வாய்ந்தவராக மக்கள் மத்தியில் மீள் எழுச்சி பெறுவார் என்று கூட்டு அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆட்சி அதிகாரத்திலுள்ள கூட்டுக்கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஐக்கிய தேசிய கட்சியையும் உள்ளூராட்சித் தேர்தலில் அவர் மண் கௌவச் செய்ததையடுத்து இந்த இரண்டு தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். "அடுத்தடுத்த தேர்தல்களில் தங்களுடைய நிலைப்பாடு என்னவாகும்..? என்னவாகப் போகின்றது..?" என்ற அரசியல் ரீதியான அச்சத்துக்கும் அவர்கள் ஆளாகியிருக்கின்றார்கள்.
ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டார்கள். குறிப்பாக ஊழல்களை ஒழித்து ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்ற வாக்குறுதிக்கு முரணாக நல்லாட்சியில் உள்ளவர்களே மோசடிகளிலும் ஊழல்களிலும் ஈடுபட்டிருந்தார்கள் என்று வெளியாகிய தகவல்கள் அவர்களை ஆதரித்த மக்களை அதிருப்தியடையவும் வெறுப்படையவும் செய்துள்ளது.
"எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்று" நல்லாட்சி அரசாங்கம் என்ற கூட்டாட்சி அரசாங்கம் சிறுபான்மை இன மக்களுடன் நட்புக்கொண்டு செயற்படுவதாக மஹிந்த ராஜபக் ஷ முன்னெடுத்த பிரசாரமும் சிங்கள மக்களுடைய இந்த உணர்வுக்கு மேலும் உரமூட்டி அரசு மீது வெறுப்படையச் செய்துள்ளது.
அதேநேரம் ஆட்சி மாற்றத்துக்கும் அதன் பின்னரான சூழலிலும் நிபந்தனையற்ற முறையில் அரசுக்கு ஆதரவு வழங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாத காரணத்தால் அரசியல் ரீதியான தனது ஏமாற்றத்தையும் எரிச்சலையும் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டது.
மறுபுறத்தில் நியாயமான முறையில் தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மீது நம்பிக்கை கொண்டிருந்த தமிழ் மக்களும் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கப்பட்டு அதனால் அவர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துள்ள நிலைமையும் காணப்படுகின்றது.
மும்முனை போட்டியுள்ள ஒரு தேர்தல் களத்தில் இருவேறு தரப்புக்களாகக் களமிறங்கத் தயாராகிக் கொண்டிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஓர் இக்கட்டான அரசியல் நிலையிலேயே காணப்படுகின்றார்கள்.
தங்களுக்கு ஆதரவு வழங்கக் கூடிய சிறுபான்மை இன மக்களைத் தங்கள் பக்கத்தில் தக்க வைத்துக் கொள்கின்ற அதேவேளை சிறுபான்மையினருடன் தாங்கள் அரசியல் சிநேகம் கொண்டிருக்கின்றோம் என்ற தமது அரசியல் நலன்களுக்குப் பாதகமான நிலைப்பாட்டிலுள்ள சிங்கள மக்களுடைய மனங்களை வெல்லவேண்டிய கட்டாய நிலைமைக்கும் அவர்கள் ஆளாகியிருக்கின்றார்கள்.
"ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம்.. இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.." என்ற சங்கடமான ஒரு நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள்.
இத்தகைய ஒரு நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத்தக்க அம்சங்களை உள்ளடக்கியதாகப் புதிய அரசியலமைப்புக்கான வரைபைத் தயார் செய்வது இலகுவான காரியமல்ல.
எதிர்க்கட்சிப் பதவியைக் கொண்டிருந்த போதிலும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, அரசுக்கு உறுதுணையாகச் செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நேரடியாகவும் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாடுகளினூடாகவும் அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இந்த அழுத்தங்களுக்குட்பட்டு தேர்தல் அரசியல் ரீதியான பதற்றமான ஓர் அரசியல் கள நிலைமையில் இனப்பிரச்சினைக்கு மிகுந்த பொறுப்போடு, நிதானத்துடன் கூடிய, அரசியல் விட்டுக்கொடுப்புக்குரிய இணக்கப்பாட்டுடன் பரஸ்பர நம்பிக்கைக்குரிய மனநிலையில் அரசியல் தீர்வுக்குரிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை அரச தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னெடுப்பார்களா, முன்னெடுக்க முடியுமா என்பது தெரியவில்லை.
No comments:
Post a Comment