சப்ரகமுவ மாகாணத்தின் மாகாண கல்வி அமைச்சின் நிர்வாகத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் நூற்றி நான்கும், கேகாலை மாவட்டத்தில் அறுபத்தொன்பதுமாக மொத்தம் நூற்றி எழுபத்தி மூன்று தமிழ்ப் பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் மத்திய கல்வியமைச்சின் நிர்வாகத்துக்குட்பட்ட தேசிய பாடசாலை ஒன்றும் இல்லாததுடன் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பில் கலை, கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய நான்கு பிரிவுகளையும் கொண்ட 1 ஏபி தரத்திலான ஒரு பாடசாலையும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு மாவட்டங்களும் நாட்டின் கல்வித் தரத்தில் உயர்ந்தவைகளாக மதிப்பீடு செய்யப்பட்டிருப்பினும் தமிழ் பாடசாலைகளின் நிலையை நோக்கும்போது அவை பின்னடைந்த நிலையிலேயேயுள்ளன.
இவற்றில் கேகாலை மாவட்ட தமிழ்ப் பாடசாலைகளை ஆய்வு செய்யும்போது அம்மாவட்டத்திலுள்ள அப்பாடசாலைகள் பெரும்பாலானவை பாடசாலைக் கட்டமைப்புக்குத் தேவையான அடிப்படைப் பௌதீக வளங்களையும், ஆசிரிய ஆளணி வளங்களையும் கொண்டவையாக இல்லாமை வெளிப்படுகின்றது. இம்மாவட்டத்திலுள்ள மூன்று கல்வி வலயங்களான கேகாலை , தெஹியோவிட்ட, மாவனெல்ல ஆகியவற்றில் முறையே பன்னிரெண்டு, ஐம்பத்தாறு, ஒன்று என்ற அடிப்படையில் அவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
கேகாலை கல்வி வலயத்திலுள்ள பன்னிரெண்டு தமிழ்ப் பாடசாலைகளில் சென். மேரீஸ் தமிழ் மகா வித்தியாலயம் 1 சீ தரம் கொண்ட கல்விப் பொதுத் தராதரப் பத்திர வகுப்பில் கலை, வர்த்தகம் ஆகிய இரு பிரிவுகளைக் கொண்டதாகவுள்ளது. இரு பாடசாலைகள் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண வகுப்புவரை கொண்டவையாகவும் ஏனைய ஒன்பது பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாகவும் இயங்குகின்றன.
தெஹியோவிட்ட கல்வி வலயத்திலுள்ள ஐம்பத்தாறு பாடசாலைகளில் எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயம், புளத்கொஹுப்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயம், ஸ்ரீவாணி தமிழ் மகா வித்தியாலயம், தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம், தெரணியகல கதிரேசன் மகா வித்தியாலயம் , சப்புமல்கந்த தமிழ் மகா வித்தியாலயம் ஆறும், உயர்தர வகுப்புகள் கொண்ட 1 சீ தரப் பாடசாலைகளாகவும் பன்னிரெண்டு பாடசாலைகள் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரம்வரை கொண்ட டீ. 2 தரப் பாடசாலைகளாகவும் உள்ள நிலையில் ஏனைய முப்பத்து நான்கு பாடசாலைகள் ஆரம்ப பாடசாலை என்றே டீ. 3 தரத்திலேயேயுள்ளன.
மாவனெல்ல கல்விவலயத்திலுள்ள ஒரே தமிழ்ப் பாடசாலை ஆரம்ப தரத்திலான பாடசாலையாகவே தரப்படுத்தப்பட்டுள்ளது. கேகாலை கல்வி வலயத்துக்குட்பட்ட வரக்காபொல பிரதேசத்தில் கணிசமான அளவில் தமிழ் மக்கள் வாழ்ந்த போதிலும் அப்பிரதேசத்தில் ஒரு தமிழ்ப் பாடசாலை கூட இல்லாத நிலையில் அங்குள்ள பிள்ளைகள் மாற்று சமூக மற்றும் மாற்று மொழிப் பாடசாலைகளில் இணைந்து கற்கும் கட்டாய நிலை காணப்படுகின்றது.
பத்தாயிரம் வரையான மாணவ, மாணவியர் தமிழ்ப் பாடசாலைகளில் கற்கும் நிலையில் மூவாயிரம் வரையான தமிழ்ப் பிள்ளைகள் வேற்று சமூக பாடசாலைகளில் கற்று வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தேசிய கல்விக் கொள்கைக்கமைய பிற சமூக பாடசாலைகள் பலவற்றில் குறிப்பாக சிங்கள பாடசாலைகளில் கற்போர் இந்து சமயத்தைக் கற்க முடியாத நிலையிலுள்ளனர். இந்நிலை மத மாற்றத்திற்கும் மொழி மாற்றத்திற்கும் வித்திடும் நிலையில் இன மாற்றத்திற்கும் வழி திறந்து விடுகின்றது.
கேகாலை மாவட்டத்திலுள்ள ஆரம்பப் பாடசாலைகளில் தமிழரோ இந்துக்கள் அல்லாதோரே பெரும்பாலும் ஆசிரியர்களாகக் கடமையாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. அத்துடன் பல ஆரம்ப பாடசாலைகளில் சிங்கள ஆசிரியர்களும் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்ப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியைப் பெறும் தமிழ், இந்துப் பிள்ளைகளுக்கு தாய்மொழியான தமிழையோ இந்து சமயத்தையோ கற்கும் உரிமை மறுக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர வகுப்பிலும் அதற்குரிய பொதுப் பரீட்சையிலும் கட்டாய பாடங்கள் ஆறில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இன்றியே பல தமிழ்ப் பாடசாலைகளில் கற்கும் மற்றும் பரீட்சைக்குத் தோற்றும் நிலைமையும் காணப்படுகின்றது. அநேகமாகத் தமிழ்ப் பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிப்போர் சிங்கள ஆசிரியர்களாகவேயுள்ளனர்.
உயர்தர வகுப்பில் கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகள் உள்ள பாடசாலைகளில் அப்பாடங்களைக் கற்பிக்கும் தகைமை பெற்ற ஆசிரியர்கள் இல்லாமையும் குறிப்பிடத்தக்க குறைபாடாயுள்ளது.
ஒரு பாடசாலைக்கான கட்டமைப்பு என்பது பாடசாலைக் கட்டடம் மட்டுமல்ல. பெயரும் அல்ல. ஒரு பாடசாலை முறையாகச் செயற்பட கட்டட வசதிகளும் ஆசிரிய ஆளணியும் தேவையென்பதற்கப்பால் அதன் சூழலும் தேவைகளும் பேணப்பட வேண்டும். இம்மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் பெரும்பான்மையானவற்றில் போதிய மலசலகூட வசதிகள், தண்ணீர் வசதிகள், குடிநீர் வசதிகள் என்பன தேவையான அளவில் இல்லாமை பாடசாலை மாணவ, மாணவியருக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் வசதியின்மையை ஏற்படுத்துகின்றன.
பாடசாலைகளின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. பெரும்பாலான தமிழ்ப் பாடசாலைகளுக்கு எல்லைகளிடப்படாத நிலையும் சிலவற்றிற்கு எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டிருப் பினும் சுற்று மதிலோ, வேலியோ அமைக்கப்படாத நிலையும் காணப்படுகின்றது. இந்நிலை பாடசாலைக்குரிய காணிகளை வெளியார் ஆக்கிரமிக்கவும் வழி செய்கின்றது.
த. மனோகரன்
[துணைத் தலைவரும், கல்விக் குழுச் செயலாளரும் அகில இலங்கை இந்து மாமன்றம்]
No comments:
Post a Comment