அரசியல் தீர்வு, அபிவிருத்தி உட்பட அனைத்து விடயங்களையும் ஆழமாக சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் கொள்கை அடிப்படையில் எனக்கும் சுரேஷ்பிரேமச்சந்திரனுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட சில தரப்புக்களுக்கிடையில் ஒற்றுமைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வீரகேசரி வாரவெளியீட்டுக்கு பிரத்தியேகமாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்:
தனியான பயணமா?
நான் வடமாகாண மக்களுடன் இருப்பதாக உறுதியளித்துள்ளேன். அவர்கள் என்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் அபிலாஷைகளுக்கு காத்திரமான பணியை ஆற்றவேண்டிய கடமை உள்ளதை உணர்கின்றேன். தனியாக பயணிப்பது பற்றி தீர்மானிக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் கொள்கை, அரசியல் தீர்வு, அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் அண்மைக்காலமாக சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து வருகின்றேன்.
கலந்துரையாடல்களிலும் ஈடுபடுகின்றேன். வடமாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு இன்னமும் ஒன்றரை மாதங்கள் இருக்கின்றன. அதேநேரம் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறுமா என்பது குறித்தும் உறுதியாக கூறமுடியாதுள்ளது. ஆகவே தற்போது அவசரப்படவேண்டியதில்லை. உரிய தருணத்தில் பொருத்தமான அறிவிப்புக்களைச் செய்யவுள்ளேன்.
செயலணி கூட்டத்தால் முரண்பாடு வலுக்கிறதா?
ஜனாதிபதி செயலணியில் பங்கேற்க வேண்டாம் என நான் கோரியிருந்தேன். இருப்பினும் அதில் பங்கேற்பதென்று ஏகமனதாக அவர்கள் தீர்மானம் எடுத்துள்ளார்கள். எனது கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. நான் யதார்த்தத்தினையே குறிப்பிட்டேன். இந்த விடயத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது பகிரங்கமான விடயமாகும்.
சுரேசும் கஜனும் ஒன்றுபடுவார்களா?
தமிழ் மக்கள் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரமே எமது மக்கள் வடக்கு மாகாண சபையில் ஆணையை வழங்கியுள்ளார்கள். அவர்கள் வழங்கிய அடிப்படைக்கொள்கையின் பிரகாரம் பார்க்கின்றபோது எனக்கும், சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும், கஜேந்திரகுமாருக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் எவையும் இருப்பதாக நான் உணரவில்லை. ஏறக்குறைய ஒரேகொள்கையில் தான் இருக்கின்றோம் என்றே கருதுகின்றேன் என்றார்.
No comments:
Post a Comment