சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் எழுதிய ‘செய்தியின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆற்றிய உரை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை என்பது அதனுடைய பங்களிப்பு என்ன? அதன் பிரதிபலன் என்ன என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 1990ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவொன்று மாத்திரமே இருந்தது. 2004ஆம் ஆண்டுக்குப் பின்னரே இது பேரவையாக உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் இப்படி ஒரு பொறிமுறைகூட இருக்கவில்லை. போர் முடிவுற்ற பின்னரே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எங்களுடைய பல விடயங்கள் பற்றி பேசப்பட்டது. உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு குழுவொன்றாக உருவாக்கப்பட்டு பின்னர் பேரவையாக மாற்றப்பட்டது. இதில் வாக்களிக்க தகுதி பெற்ற 47 உறுப்பு நாடுகள் சேர்ந்து பேரவையின் தீர்மானங்களை செயற்படுத்துகின்றன. இந்த நாடுகள் தங்களுடைய நாட்டின் நலனை கருத்திற்கொண்டே செயற்படுகின்றன.
மனித உரிமை மீறல் எனும்போது ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் குற்றவாளியாக நிற்கின்றன. அத்தகைய நாடுகளே மனித உரிமை தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்கின்றன. அவ்வாறு ஆராயப்படும் விடயங்கள் தொடர்பில் ஏனைய நாடுகள் தங்களுக்கும் இத்தகைய குற்றச்சாட்டு வந்துவிடுமோ என்ற அச்சத்தோடு தமது காய்நகர்த்தல்களை முன்னெடுக்கும்.
மனித உரிமை உயர்ஸ்தானிகராலயம் என்ற அமைப்பு மனித உரிமை பாதுகாப்புக்கென்றே அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய அறிக்கைகள் சற்று வித்தியாசமானவையாகும். எனவே உறுப்பு நாடுகள் தங்களுடைய நலன்களையும் இவ்வமைப்பின் அறிக்கைகளையும் சமப்படுத்தியே தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும். இப்படியொரு பொறிமுறையைத்தான் நாம் உபயோகிக்க கையிலெடுத்தோம்.
தங்களுடைய நாடுகளிலேயே மனித உரிமைகளை மீறுகின்ற அரசாங்கங்களைக் கொண்ட ஓர் அமைப்பில்தான் இப்படியொரு பொறிமுறை வேண்டும் என்றோம். பாதுகாப்பு சபையைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. ஆமாம் அங்கிருந்து எமக்கு எவ்வித நிவாரணமும் வரப்போவதில்லை. இங்கு பல நாடுகளின் கரிசனைகளை உள்ளடக்கிய அறிக்கைகள் வெளிவரும்போது சர்வதேசத்தில் தமது நாட்டுக்கு களங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே நாடுகள் தமது போக்குகளை சற்று மாற்றியமைக்கின்றன. அவ்வாறே நாமும் உபயோகித்திருக்கின்றோம்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை தொடர்பான 34.1 என்ற தீர்மானத்தின் காலம் முடிவடையப் போகிறது. நிறைவடையும் போது அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி எழக்கூடும். அந்தச் சமயம் இன்னும் ஒரு கால அவகாசம் வேண்டுமென கேட்பீர்களா என்ற கேள்வி வரும். அதற்கு இப்போதே உண்மை நிலைப்பாட்டை எடுத்துக் கூறுவது சிறப்பானது.
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியமானது. அதற்கு முன்பதாக 2012 ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2013இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது பிரகடன தீர்மானம்.
2014ஆம் ஆண்டு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், அதை சர்வதேச மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை இலங்கை அரசாங்கம் எதிர்த்தபோதிலும் வாக்களிப்பினால் அது நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவ்வாறே விசாரணை நடந்தது. ஆனால் உள்நாட்டு பங்களிப்பு இல்லாத முற்றுமுழுதான சர்வதேச விசாரணையாகும்.
2014ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேறியபோது பி.பி.சி. தமிழ்ச்சேவையினர் சம்பந்தன் ஐயாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டனர். அதில் சர்வதேச விசாரணை இல்லை, அப்படியாயின் ஏன் இதனை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது ஐயா விசாரணையை நடத்தியது உள்நாட்டவரா என்று கேட்டார். அத்துடன் பேட்டி முடிந்தது.
அந்த விசாரைணை அறிக்கை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவர தயாராக இருந்த நிலையில் புதிய அரசாங்கம் அதனை வெளியிட தாமதிக்குமாறு கேட்டது. பின்னர் 2015 செப்டெம்பர் 16ஆம் திகதி ஜெனிவாவில் அல் ஹுசை னால் அறிக்கை வெளியிடப்பட்டது.
அப்போது ஊடகவியலாளர் ஒருவர் இதில் இனப்படுகொலை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதா எனக் கேட்டபோது அது தொடர்பில் சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என்ற பதில் வந்தது.
சர்வதேச குற்றங்களில் மிக மோசமானதே இனப்படுகொலைதான். ஆனால் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகம் பிழையானது. துன்புறுத்தல் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது. நிரூபிக்க கடினமானவற்றை அதில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2015 செப்டெம்பர் 16ஆம் திகதி அறிக்கை வெளிவந்த பின்னர் 30.1 என்ற முக்கியமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது. 2014ஆம் ஆண்டு இலங்கை குறித்த தீர்மானத்துக்கு நாடுகள் வாக்களித்ததுடன் இலங்கை அதற்கு எதிராக செயற்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சர்வ தேச விசாரணை இடம்பெற்றது.
ஆனால் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசின் இணை அனுசரணையோடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒரு நாட்டையும் கட்டுப்படுத்துவது கிடையாது. ஆனால் அந்நாட்டின் இணை அனுசரணையின்றி நிறைவேற்ற முடியாது. 30.1 எனும் தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
இலங்கை ஒன்றரை வருட காலத்திற்குப் பிறகு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 34.1 என்ற இரண்டாவது தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியுள்ளது. இது உலகத்திற்கு கொடுத்த வாக்குறுதியாகும்.
30.1 தீர்மானத்தில் 18 மாத காலத்திற்கு இதனை மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் மேற்பார்வை செய்ய வேண்டும். 9 மாத காலத்திற்குப் பின் வாய் மூல அறிக்கையும் 18 மாத காலத்திற்குப் பின் எழுத்து மூல அறிக்கையும் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது.
அதன்பின் சர்வதேசத்தின் பார்வை இருக்காது என்ற காரணத்தினால்தான் இன்னுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றோம். அதற்கு கால அவகாசம் கொடுத்ததால் அடுத்த இரண்டு வருடத்திற்கு சர்வதேசத்தின் பார்வை நீடிக்க வேண்டும். எனவே 2017 மார்ச்சில் நீடிக்கப்பட்டது சர்வதேசத்தின் மேற்பார்வையே தவிர சர்வதேசத்தின் கால அவகாசம் அல்ல.
இது தொடர்பில் எந்தவொரு ஊடகமும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை. என்னைக் கேட்டால் இன்னும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். சர்வதேசத்தின் கால அவகாசம் நீடிக்க வேண்டும். பிரதான விடயங்கள் நிறைவேறும் வரை சர்வதேசத்தின் மேற்பார்வையும் நீடிக்க வேண்டும்.
சர்வதேசத்தினால் அழுத்தம் மட்டுமே கொடுக்க முடியும். கட்டுப்படுத்த முடியாது. எனவே அரசாங்கம் நாட்டின் பேருக்குப் பங்கம் இல்லாத வகையில் செயற்பட கால அவகாசத்தை நீடித்துக் கொண்டே செல்லும். இந்நிலையில் பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனரே தவிர மாற்று வழிமுறைகளை ஒருவரும் முன்வைப்பதில்லை. இருக்கின்றதை ஆளுமையுடன் பிரயோகிக்கத் தெரியாமல் எதற்காக தடுமாற வேண்டும்.
No comments:
Post a Comment