மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கான கடப்பாட்டை ஏற்றுள்ள அரசாங்கம் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்று பரவலாகக் குறை கூறப்படுகின்றது. சாதாரண குறை கூறுதலாக இல்லாமல், அழுத்தமான குற்றச்சாட்டாகவே அந்த அதிருப்தி முன்வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
பொறுப்புக்கூறும் விடயத்தில் முக்கியமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கடப்பாட்டை நிறைவேற்றுகின்ற பொறுப்பை அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளது என்பது முக்கியமானது. இந்தச் சட்டத்தை இல்லாமற் செய்வதற்கு அரசாங்கத்திற்கு விருப்பமில்லை. எனவே, அது அந்தச் சட்டத்தை ஒழிக்கப்போவதில்லை என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் போராடி வருபவர்கள் அடித்துக் கூறியிருக்கின்றார்கள்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலர் விசாரணைகளின்றி பல வருடங்களாக சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒரு தொகுதியினர் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டிருந்தபோதிலும், விடுதலையின்றியும், சட்ட ரீதியான துரித நடவடிக்கைகள் இல்லாமலும் இன்னும் ஒரு தொகுதியினர் சிறைச்சாலைகளில் சொல்லொணா துயரங்கள், கஷ்டங்களுக்கு மத்தியில் வாடுகின்றார்கள். அவர்களின் விடுதலைக்காக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும், அவர்களுக்கு ஆதரவான அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் போராடி வருகின்றனர்.
அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் அக்கறையற்ற போக்கையே கடைப்பிடித்து வருகின்றது என்பதை வெளிப்படுத்துவதற்கு இந்தத் தொடர்ச்சியான போராட்டமும் முக்கியமான நடைமுறைச் சாட்சியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவதாக சர்வதேச அரங்காகிய ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட 30-/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக இலங்கை அரசு ஒப்புதல் அளித்து, இணை அனுசரணை வழங்கியிருந்தது. அது மட்டுமல்லாமல், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற கைங்கரியத்தின் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட்ட ஐ.நா.வின் 34-/1 தீர்மானத்தின் பரிந்துரைகளையும் நிபந்தனைகளையும் அரசு ஏற்றுக்கொண்டிருந்தது. அதற்கும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. இதன் மூலம் ஐ.நா.வின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக அரசுக்கு மேலும் 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
சர்வதேச மட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு பொறுப்புக்கூறும் விடயத்தில் நிலைமாறுகால நீதியை நிலை நாட்டுவதாகவும், அதற்கான 4 பொறிமுறைகளை உருவாக்கிச் செயற்படுத்துவதாகவும் விரிவான முறையில் அந்த இணக்கப்பாட்டை அரசு ஏற்றுக்கொண்டிருந்தது.
ஆனால் நடைமுறையில் அந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும், அவரைத் தொடர்ந்து மனித உரிமை தொடர்பான பல்வேறு பிரிவுகளுக்கான விசேட ஐ.நா. அறிக்கையாளர்களும் இலங்கைக்கான தமது விஜயங்களின் பின்னர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயங்களின்போது ஐ.நா. மனித உரிமை சார்ந்த விசேட அறிக்கையாளர்கள் நாட்டின் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, உண்மையான அடிமட்ட நிலைமைகள் என்ன என்பதை அறிந்திருந்தார்கள். அந்த விஜயங்கள் ஆய்வு ரீதியான விஜயங்கள் என்பதை அந்த விஜயங்களின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகள் உணர்த்தியிருக்கின்றன.
அரசாங்கம் ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்த போதிலும், அவற்றை நிறைவேற்றுவதில் போதிய அக்கறையோ கரிசனையோ காட்டவில்லை என்பதை இந்த அறிக்கைகள் நிரூபித்திருக்கின்றன. சுருக்கமாகக் கூறுவதானால் யுத்தத்தின் பின்னர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்த ஆட்சி மாற்றம் ஏமாற்றத்தையே பரிசாக அளித்திருக்கின்றது என்ற பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை இந்த அறிக்கைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
சர்வதேச அரங்கில் கூறுவதை களத்தில் - உள்நாட்டில் நிறைவேற்றுவதற்குரிய சூழலை ஏற்படுத்தவோ அல்லது அவற்றை முக்கியமாகக் கருதி, அரசியல் வெளிக்கு அப்பால் நின்று செயற்படுத்தவோ அரசாங்கம் ஒருபோதும் முயன்றதில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சர்வதேச விசாரணை என்ற அம்சத்தை (முழுமையான சர்வதேச விசாரணையாகவோ அல்லது சர்வதேசத்தின் பங்களிப்புடன்கூடிய விசாரணையாகவோ நடத்தி பொறுப்புக்கூறுவதற்கு) ஏற்றுக்கொண்டிருந்தாலும்கூட, நாட்டில் அந்த நிலைப்பாட்டுக்கு முரணான வகையிலேயே அரசாங்கம் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது. அத்தகைய கருத்துக்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றது. இது ஒரு வகையில் சர்வதேசத்தை – குறிப்பாக ஐ.நா. உரிமைப் பேரவைக்கு, போக்குக்காட்டுகின்ற ஒரு செயற்பாடாகவே அமைந்துள்ளது. அத்துடன் சர்வதேசத்தை ஏமாற்றுகின்ற ஒரு நடவடிக்கையாகவும் காணப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் பயங்கரவாதத் தடைச்சட்டம் ஏன்?
மனித உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கும் பொறுப்புக் கூறுவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான முறையில் நீதி வழங்கி, நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்நாட்டில் ஆயுத முரண்பாடு ஒன்று மீண்டும் ஏற்படாத வகையில் நிலைமைகளை உறுதிப்படுத்துவது என்பதே சர்வதேசத்திற்கு அரசு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படை அம்சங்களாகும்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்பது அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு. யுத்தமோதல்கள் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் பயங்கரவாதச் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்று அரசாங்கமே அறிவித்திருக்கின்றது. நாட்டில் பயங்கரவாத நிலைமைகள் தொடர்பில் அரசாங்கம் முழுமையான அளவில் திருப்தி கொண்டிருப்பதையே இந்த அறிவிப்பு சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது.
ஆனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்ட ஓரிடத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் ஏன் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பது தெரியவில்லை. பயங்கரவாதம் இல்லையென்றால், பயங்கரவாதத்தை இல்லாமல் ஒழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கிவிடுவதே நியாயமான செயற்பாடாகும்.
பயங்கரவாதம் இல்லாத இடத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இன்னும் வைத்திருப்பதையும், அதனை நடைமுறைப்படுத்துவதையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும் என்று தெரியவில்லை.
பயங்கரவாதத் தடைச்சட்டமும், அதற்கு உறுதுணையாக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டமும், பாதுகாப்புப் படையினருக்கும் பொலிஸாருக்கும் வழங்கிய அளவற்ற அதிகாரங்களே, மனித உரிமை மீறல்களுக்கும், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கும் அடிப்படை காரணங்களாக அமைந்தன. பயங்கரவாதத்தை ஒழித்துவிட வேண்டும் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டைவிட எப்படியும் பயங்கரவாதத்தை ஒழித்துவிட வேண்டும் என்பதிலேயே முன்னைய அரச தலைவர் மஹிந்த ராஜபக் ்ஷவும், அவருடைய சகோதரராகிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக் ்ஷவும் முனைப்புக்கொண்டு செயற்பட்டிருந்தார்கள். அரச தரப்பு அரசியல்வாதிகளும், பௌத்த சிங்களத் தேசிய வாதிகளும், பௌத்த மத தீவிர போக்குடைய பௌத்த மதத்தலைவர்களும் இவர்களிலும் பார்க்க தீவிரமாக இருந்து ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தார்கள்.
நீண்டகாலமாக அடக்குமுறைக்கும், அடிப்படை உரிமை மறுப்புக்கும் உள்ளாகியிருந்த தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டமே பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு, அடித்து நொறுக்கி இல்லாமல் செய்யப்பட்டது என்பது இந்தப் பின்னணியில் கவனத்திற்கொள்ள வேண்டியது முக்கியம். பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் இறைமையையும், இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியிலான அடிப்படை அரசியல் உரிமைகளையும் இல்லாமற் செய்வதையே அரச தரப்பினர் நோக்கமாகக்கொண்டிருந்தனர்.
அந்த நோக்கம் இன்னும் தொடர்கின்றது என்பதையே நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஆட்சி மாற்றத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி செலுத்துகின்ற இன்றைய அரச தரப்பினரது செயற்பாடுகளும் பிரதிபலிக்கின்றன.
பயங்கரவாதத் தடைச்சட்டம் இல்லாமற் செய்யப்பட வேண்டும் என்பது ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். அந்த சட்டம் மனிதாபிமானத்துக்கு முரணான அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றது. அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற அதிகாரங்களைப் படையினருக்கு வழங்கியிருக்கின்றது. இதனாலேயே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வலியுறுத்தியிருக்கின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் தன்மைகள்
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அளவற்ற அதிகாரங்களை பயங்கரவாதத் தடைச்சட்டம் வழங்குகின்றது. பயங்கரவாதத்திடமிருந்தும் பயங்கரவாதச் செயற்பாடுகளிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதற்காகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், தமிழர்கள் பெரும்பான்மையாகவும் வரலாற்று ரீதியாகப் பாரம்பரியமாகவும் வாழ்கின்ற பிரதேசங்களாகிய வடக்கிலும் கிழக்கிலுமே அது முழு அளவில் பயன்படுத்தப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிராக – குறிப்பாக தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு எதிராக மட்டும் என்ற போக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் கோலோச்சியவருமாகிய ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் 1979ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக 'பயங்கரவாதத் தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அது பின்னர் 1982ஆம் ஆண்டு நிரந்தர சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றார். அல்லது தேசிய பாதுகாப்புக்கு எதிராகச் செயற்படுகின்றார் என்று வெறுமனே சந்தேகித்தாலே ஒருவரை படையினர் கைது செய்ய முடியும். அதற்கான அதிகாரத்தை பயங்கரவாதத் தடைச்சட்டம் வழங்கியுள்ளது. சந்தேகத்திற்கு உரியவர்கள் நடமாடுவதாகக் கருதப்படுகின்ற இடங்கள், அவர்கள் இருக்கின்ற இடங்கள் என்பனவற்றைச் சுற்றிவளைத்து சோதனையிடவும், அவர்களைக் கைது செய்யவும், விசாரணைகளுக்காக அவர்களைத் தடுத்து வைக்கவும் இந்தச் சட்டம் படையினருக்கு அதிகாரம் அளித்திருக்கின்றது.
பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதிகள் என்றும் பரவலாகவும் பெரிதுபடுத்தியும் நாட்டில் பேசப்படுகின்றது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான இராணுவ நடவடிக்கையை உள்ளடக்கிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால், பயங்கரவாதம் பற்றிய அச்சம் நீக்கப்படவில்லை. பயங்கரவாதிகள் பற்றிய அச்சுறுத்தலும் நீக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக இந்த அச்சமும், அச்சுறுத்தலும் திட்டமிட்ட வகையிலான செயற்பாடுகளின் மூலம் ஆட்சியாளர்களினாலும் சிங்கள பௌத்த தேசியவாதிகளினாலும் இன்னும் உயிரோட்டமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அந்தச் சட்டத்தில் பயங்கரவாதிகள் என்றால் யார், பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு வரைவிலக்கணம் கொடுக்கப்படவில்லை. வெறுமனே தேசிய பாதுகாப்புக்கும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்ற சந்தேகத்திற்கு உரியவர்களையும், அத்தகைய எதிர் நடவடிக்கைகள் என விபரிக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களையும் கைது செய்து விசாரணை செய்து தண்டிப்பதற்கே பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பயன்படுத்தப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை விசாரணைகளுக்காக, நீதிமன்றத்தின் உத்தரவின்றி தடுத்து வைத்திருப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 18 மாதங்கள் - ஒன்றரை வருடத்திற்கு பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரைத் தடுத்து வைப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வேடிக்கையான நிலைமைகள்
நாட்டில் மக்களுடைய பாதுகாப்பையும் அரசாங்கத்தின் பாதுகாப்பையும் பேணிப்பாதுகாப்பதற்கென பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன. அதற்கான சட்டங்கள் அதிகார பலமுள்ளவையாகவும், நீதித்துறையின் நடவடிக்கைகளுடன் இணைந்தவையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டங்கள் குற்றம் புரிபவர்களுக்கு எதிராகக் குற்றச்செயல்களின் தன்மைக்கு ஏற்ற வகையில் விசாரணை செய்வதற்கும், விசாரணைகளின் முடிவில் நீதிமன்றத்தின் ஊடாக சட்டரீதியாக உரிய தண்டனைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் இருக்கின்றன. அந்த ஏற்பாடுகளில் குற்றச் செயல் ஒன்றில் சம்பந்தப்பட்டிருக்கின்றார் அல்லது குற்றம் ஒன்றைப் புரிந்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த சட்டங்கள் வலியுறுத்துகின்றன. அந்த விதியை மீறுபவர்கள் நீதிமன்றத்தினால் கேள்விக்கும் விசாரணைக்கும் உள்ளாக்கப்படுவார்கள்.
ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்ற ஒருவர் உண்மையில் பயங்கரவாதத்துடன் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்தும்வரையில் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமலே தடுத்து வைப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கின்றது.
ஆரம்ப நிலையாகிய ஒன்றரை வருடங்கள் தடுத்து வைத்திருக்க முடியும் என்பதற்கும் அப்பால், அவரைத் தொடர்ந்தும் விசாரணைக்காகத் தடுத்து வைத்திருக்க வேண்டுமானால், அதற்கான அனுமதியை வழங்குவதற்குரிய அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பாதுகாப்பு அமைச்சரின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள் எதுவானாலும் அதனை விசாரித்து நீதி வழங்கும் பொறுப்பு நீதிப்பொறிமுறைக்கே உள்ளது. பக்கச்சார்பின்றி நியாயமான முறையில் விசாரணை நடத்தி நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே நீதிப்பொறிமுறையின் கீழ் நீதிமன்றங்களும் ஏனைய கட்டமைப்புக்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது, முறைப்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தலும், ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாப்பது உள்ளிட்டவை மட்டுமல்லாமல், குற்றம் புரிந்தார் என்ற சந்தேகத்திற்கு உரியவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் நீதிப்பொறிமுறையின் தலையாய பொறுப்பாகும். இந்த நடவடிக்கைகள் பக்கச்சார்பின்றி, அரசியல் கலப்பின்றி, அரசியல் நலன்கள் சார்ந்த செயற்பாடுகளின்றி நடுநிலையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர் ஒருவரைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கான உத்தரவை வழங்குவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைப் பதவி வழியாக நீதிவான் அல்லது நீதிபதி ஒருவரைப் போன்று நடுநிலையானவர் என்று கருத முடியாது. ஏனெனில் அந்தப் பதவியே அரசியல் மயமானது. ஆளும் கட்சியினுடைய செல்வாக்கின் அடிப்படையில் அந்தப் பதவிக்கு உரியவர் நியமிக்கப்படுகின்றார்.
நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள ஒரு கைங்கரியத்தை அரசியல் சார்ந்த பதவி வகிக்கின்ற அதிகாரி ஒருவரிடம் ஒப்படைப்பதை பயங்கரவாதத் தடைச்சட்டம் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அந்தச்சட்டத்தின் கீழ் உண்மையான குற்றவாளிகள் மட்டுமே கையாளப்படுகின்றார்கள் என்று கொள்ள முடியாது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் சந்தேகத்திற்குரியவர்கள் மீதே அதிகமாகப் பாய்ந்துள்ளது. அந்தப் பாய்ச்சல் அரசியல் ரீதியானது. அதனால் அந்தச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் வாடுபவர்கள் அரசியல் ரீதியாகவே சம்பந்தப்படுகின்றார்கள். எனவே, அரசிய லுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் அரசியல் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். அவர்களை சாதாரண குற்ற வாளிகளைப் போல அல்லது சமூகச்சீர்கேட்டு குற்றவாளிகளைப்போல நடத்துவது ஏற் புடையதல்ல. அந்த நடவடிக்கையை நியா யமானது என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
இந்த நிலைமைகளின் பின்னணியி லேயே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமற் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன், ஐ.நா.விடம் கையளித்துள்ள அண் மைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளிலுள்ள அரசியல் கைதிகளின் நிலைமைகளை கிரமமான விஜயங்களின் மூலம் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு பார்வையிட்டு, அவர்களின் உரிமைகள் பேணப்படுவதற்கான அதிகாரங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று அவருடைய அறிக்கையின் ஊடாக ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கை திகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், நீதிமன்ற விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களையும் தண்டனைக் கைதிகளையும், அவரவர்களுடைய சொந்த இடங்களுக்கு அண்மையிலுள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புக்குரிய புதிய சட்டம் சர்வதேச நியமங்களுக்கும் ஐ.நா. மன்ற நியதிகளுக்கும் அமைவாக உருவாக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் செயலகம் தாமதமின்றி 30/-1 பிரேரணையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் இன்றைய ஸ்திரமற்ற அரசியல் சூழலில் அரசாங்கம் ஐ.நா.வின் வேண்டு கோள்களையும், பரிந்துரைகளையும், அதே போன்று உரிமை மீறல்களுக்கு உடனடி யாகப் பொறுப்புக்கூற வேண்டும் என்ற பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வேண்டுகோள் களையும் கருத்திற் கொள்ளுமா என்பது தெரியவில்லை. கவனத்திற்கொண்டு செயற் படுமா என்பதும் தெரியவில்லை.
No comments:
Post a Comment