வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் நேற்று கொழும்பில் வைத்து சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
கடந்த வருடம் வவுனியா, ஈரப்பெரிய புலம் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ் வில் தேசியக் கொடி ஏற்றாமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விசாரணை தொடர்பில் பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டபோதும் முறையான பெயர், விபரங்கள் குறிப்பிடப்படாத நிலையில் நேற்று நடைபெற்றது. காலை 9.30 ஆரம்பமான விசாரணைகள் பிற்பகல் 3 மணிக்கே நிறைவு பெற்றன.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
தேசியக் கொடி ஏற்றாமைக்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு நான், மாகாண அமைச்சரை மாகாண கொடி ஏற்றவே அழைப்பார்கள். ஆனால் அந்தப் பாடசாலையில் மாகாண கொடியைக் காணவில்லை. தேசியக் கொடியை ஏற்றுமாறு அழைப்பு விடுத்தபோது அங்கிருந்த பணிப்பாளரை ஏற்றுமாறே கூறினேன். இதற்கு அவர்கள் உங்கள் பெயரைக் கூறித்தானே அழைத்தார்கள் என்றனர். அதற்கு நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா இந்தக் கொடியை ஏற்றுக்கொள்ளவில்லை. மூவின மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் சமத்துவமாக இந்தக் கொடி அமையவில்லை. இதனால் இக் கொடியை ஏற்கவில்லை.
இதற்காகவே கொடி ஏற்றுவதில்லை என்ற கொள்கையை தமிழரசுக் கட்சி வைத்துள்ளது. தமிழரசு கட்சியின் சின்னத்தில் நான் தேர்தலில் போட்டியிட்டேன். எனவே அந்தக் கொள்கையின் அடிப்படையில் நானும் அக் கட்சியின் கொள்கையை ஏற்று கையெழுத்திட்டு தேர்தலில் போட்டியிட்டமையினால் இக்கொடியை ஏற்றவில்லை. மேலும் யாப்பை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் தானே எனக் கேட்டார்கள். ஆம். யாப்பை ஏற்றுக்கொண்டு தான் கையெழுத்திட்டு மாகாண சபை உறுப்பினரானோம். இதனைத் தொடர்ந்தும் பல கேள்வி கள் கேட்கப்பட்டன. குறிப்பாக யாப்பை ஏற்றுக்கொண்டுதான் கையெழுத்து இடுகின் றோம். இதன் பின்னர் தான் அந்த யாப்பில் பல திருத்தங்களை படிப்படியாக செய்து வருகின்றோம். தற்போதும் இதற்காகத்தான் பாராளுமன்றம் அரசியல் யாப்பு சபையாக மாற்றம் பெற்றுள்ளது. பல மாற்றங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. சத்தியப்பிரமாணம் எடுத்த பின் னர் தான் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறு பல கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு முறையாக பதில்கள் கூறினேன் என்றார்.
No comments:
Post a Comment