கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டது! அது இனி ஒரு தெரிவு இல்லை என்கிறார் விக்கி!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, August 31, 2018

கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டது! அது இனி ஒரு தெரிவு இல்லை என்கிறார் விக்கி!!

வரலாறு உங்களுக்கு வழங்க முன்வந்துள்ள தலைமைப் பாத்திரத்தை நீங்கள் ஏற்று முன்னெடுக்கத் தயாரா என தமிழ் மக்கள் பேரவையும் மக்களும் நீண்ட காலமாக என்னிடம் கேட்டு வருகின்றார்கள். இதற்குப் பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதை ஏற்றுக் கொள்கின்றேன்” என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரசியலிருந்து ஒதுங்குவதா அல்லது புதுக் கட்சி ஆரம்பிப்பதா என்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றார். அதனை அவரே நேற்று அறிவித்தார்.


தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய அவர், தனக்கு முன்பாக தற்போது 4 தெரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். அவற்றுள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பயணிப்பதை ஒரு தெரிவாக முன்வைக்கவில்லை.

தமிழ் மக்கள் பேரவையின் நிரந்தர அலுவலகம் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடச் சந்திக்கு அண்மையாக இன்று (31) வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. அதனைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களின் ஒருவரான முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.




அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஒரு முக்கியமான கால கட்டத்தில் நாம் இங்கு கூடியுள்ளோம். மாகாண சபைத் தேர்தல்கள் வரப் போகின்றன.பலரும் உங்கள் இணைத்தலைவரின் வருங்கால அரசியல்ப் பயணம் பற்றிய கேள்வியை விடுத்த வண்ணமே உள்ளார்கள். இன்று கூட பத்திரிகையொன்று தனது ‘இனி’ என்ற தலையங்கத்தின் கீழ் தரும் குறுங் கட்டுரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தமது நடவடிக்கைகளால் முதலமைச்சர் தொடங்கும் கட்சிக்கு ஆதரவு திரட்டித் தந்து விடுவார்கள் என்று கூறியுள்ளது.

நான்கு தெரிவுகள் உள்ளன

என்னிடம் தற்போது நான்கு மாற்றுவழிகள் தரப்பட்டுள்ளன. ஒன்று திரும்ப என் வீட்டிற்குச் சென்று எனது ஓய்வு வாழ்க்கையைத் தொடர்வது. மற்றையது ஒரு கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் நிற்பது.

மூன்றாவது புதிய கட்சி ஒன்றைத் தொடங்குவது. நான்காவது கட்சி அரசியலைவிட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசுடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்துப் பெற முயற்சிப்பது.

பேரவை குறித்து சிந்திக்கின்றேன்

உண்மையில் நான்காவதாகக் கூறப்பட்ட விடயம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் என் நண்பர் ஒருவரால் முன்வைக்கப்பட்டது. அவருக்கும் கட்சி அரசியலுக்கும் இடையில் வெகு தூரம்.

என்னைக் கட்சி அரசியல் வானில் இருந்து வெளியேற்ற அவர் கொண்டுவந்த ஒரு சதிக்கருத்தே இது என்று அதனை என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை. ஆனால் நான்காவது மாற்று வழி என்னைச் சிந்திக்க வைத்துள்ளது.

கட்சி சாரா பேரியக்கங்கள் பல நாடுகளில் மக்களின் ஒத்துழைப்புடன் பல அரசியல் மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றன. அதைப்பற்றி இன்றைய கூட்டத்தின் போது எனதினிய தமிழ் மக்கட் பேரவை உறுப்பினர்கள் சிந்தித்துக் கருத்துரை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

புதிய கட்சி தொடங்க ஆலாசனை தாருங்கள்

அத்துடன் புதிய கட்சி தொடங்குவது பற்றியும் உங்கள் எல்லோரதும் கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன். கட்சி தொடங்குவது இலகுவானது, அதை நடாத்துவது சிரமமானது. மேலும் கட்சிகளைப் பதிவு செய்யப் பல காலம் எடுக்கும். தேர்தல்கள் வந்தால் எந்தச் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற கேள்வி எழும்.

எனினும் 2009இல் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அதன் அணுகுமுறை போன்றவற்றில் அது தோல்வி அடைந்துவிட்டது என்றே கூற வேண்டியுள்ளது.

வரலாறு உங்களுக்கு வழங்க முன்வந்துள்ள தலைமைப் பாத்திரத்தை நீங்கள் ஏற்று முன்னெடுக்கத் தயாரா என தமிழ் மக்கள் பேரவையும் மக்களும் நீண்ட காலமாக என்னிடம் கேட்டு வருகின்றார்கள். இதற்குப் பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதை ஏற்றுக் கொள்கின்றேன்.

60 வருடத்துக்கு மேற்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் போராட்ட வரலாறு எனக்கு வகுத்து அளித்திருக்கும் பொறுப்பை நான் தெளிவாக உணர்ந்திருக்கின்றேன். இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். ஆனால் 2013ம் ஆண்டில் இருந்து ஆரம்பித்த வடக்கு மாகாண சபை தலைமைப் பதவி அதிகாரபூர்வமாக இன்னமும் சில வாரங்களில் முடிவுக்கு வருகிறது.

இதை அடுத்து தமிழ் தேசிய அரசியல் தொடர்பில் நான் ஆழமாக ஆராய்ந்து வருகின்றேன். இது தொடர்பில் உங்களுடனும் (பேரவை) அனைத்து தமிழ் தேசிய கொள்கை சார் அமைப்புக்களுடனும் இணைந்து உரிய முடிவை விரைவில் அறிவிக்கவே உங்கள் கருத்தறிய ஆவலாய் உள்ளேன்.

எது எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் பேரவை ஒரு கட்சிசாரா, கட்சி அரசியலில் ஈடுபடாத இயக்கமாகவே தொடர்ந்து இயங்கி வருகின்றது. ஆனால் எமது நடவடிக்கைகள் காலத்திற்குக் காலம் முளைக்கும் காளான்கள் போன்று திடீரென்று வந்து மறைவதான இயல்பையே கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவை பல கோணங்களில் இருந்தும் தமிழ்ப் பேசும் மக்களின் நிலையை ஆராய வேண்டியுள்ளது.

கட்சி அரசியல் என்பது வேறு. மக்கள் அரசியல் என்பது வேறு. தேர்தல்கள், கட்சிகள், அவைசார்ந்த சட்ட திட்டங்கள் என்பன மக்கள் நலனுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும் அவை ஒரு குறுகிய வட்டத்தினுள் இயங்கும் அலகுகள்.

கட்சிகள் அடுத்த தேர்தலில் யார் வரவேண்டும், யாருடன் கூட்டுச் சேர வேண்டும். யாரை வெட்ட வேண்டும், யாரைப் புகழ வேண்டும் என்று தமது கட்சி நலன் சார்ந்தே சிந்திக்கின்றன. மக்கள் நலம் வேறு கட்சி நலம் வேறு. மக்கள் எனும் போது இளைஞர் யுவதிகளையும் அதனுள் சேர்த்தே குறிப்பிடுகின்றேன்.

மக்களின் பிரச்சினைகள் பல உள்ளன

மக்களைப் பொறுத்த வரையில் நாங்கள் பல விடயங்களைக் கவனத்திற்கு எடுக்க வேண்டியுள்ளது. மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளைப் பொதுவாகப் பார்ப்போமானால் அவை இடத்திற்கு இடம் மாறும் தன்மையுடையன.

உதாரணத்திற்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் முஸ்லிம் மக்களால் மனவருத்தம் அடைந்துள்ளனர். வடமாகாணத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இல்லை. எமக்கு அரச குடியேற்றம், நிர்வாகத்தில் அரச கட்டுப்பாடுகள், தொடரும் இராணுவ இடத் தங்கல் போன்றவை கவனத்திற்கு எடுக்க வேண்டியுள்ளன.

காணாமற்போனோர் பற்றிய விளக்க நிலை, முன்னைய போராளிகளின் வாழ்வு முன்னேற்றம், கைம்பெண்களின் கவலைகள், மீன் பிடிப்போர் பிரச்சனைகள் என்று பலதையும் ஆராய வேண்டியுள்ளது.

இளையோருக்கு வேலைவாய்ப்பு அவசியம்

இளையோர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் கூட மக்களின் பிரச்சினைதான். அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? பெரியளவிலான ஆலைகளை நிர்மாணித்து அவற்றில் அவர்களை வேலையில் சேர்க்கப் போகின்றோமா அல்லது சுய தொழில்களில் எம் இளையோர்கள் ஈடுபட நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமா?

ஆலைகளை யார் நிர்மாணிக்கப் போகின்றார்கள்? வெளியார் ஆக்கிரமிப்புக்கு அவை இடமளிக்குமா? அண்மையில் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர்; ‘நான் வடக்கை வளம் படுத்த எடுத்த திட்டங்களை அரசு நிராகரித்தது’ என்று கூறினார்.

வடக்கில் முதலீடுகளைச் செய்ய தெற்கத்தையாரை அழைத்துவர முயற்சி

அதாவது தெற்கில்தான் அவர் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறி வடக்கில் அவர் செய்யவிருந்த திட்டங்களை அவர்கள் நிராகரித்தார்கள் என்றும் கூறினார். ஆகவே எம்மவரை புறந்தள்ளிவிட்டு தெற்கத்தையோரைக் கொண்டு வந்து இங்கு முதலீடு செய்யப் பார்க்கின்றார்கள் போல் தெரிகிறது.

அடுத்து இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் போதைப் பொருள் பாவனை, அவற்றின் விநியோகம் போன்றவற்றில் ஈடுபடுவதையும் எவ்வாறு தடுக்கப் போகின்றோம்? இவர்களை அடையாளம் காண எமக்கிருக்கும் அனுசரணைகள் எவை?

பொலிஸ் அதிகாரம் சட்டப்படி எமக்கு ஓரளவு இருந்தும் நடைமுறையில் இல்லாதிருக்கின்றது. அவர்கள் ஊடாக இளையோர்களை அடையாளப்படுத்துவது எத்துணை நம்பிக்கையுடையன என்பதை அலசி ஆராய வேண்டியிருக்கின்றது.

எமது பொருளாதார விருத்திக்கு அரசை நம்பி இருப்பதா? அல்லது நாமே எமக்கான திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமா?

எமது மண்ணில் தேங்கி நிற்கும் இராணுவத்தினர் சம்பந்தமாக என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

குடும்பங்கள் சீரழிந்து செல்கின்றன, குடிக்கு ஆளாகிய கணவன்மார், குழந்தைகளை பராமரிக்க முடியாத தாய்மார், மனைவியை விட்டுப் பிரிந்து பிறிதொருவருடன் வாழ்க்கை நடத்தும் கணவன்மார்கள், அதே போல் குழந்தைகளை விட்டுவிட்டு வேற்று நபருடன் குடும்பம் நடத்தும் சில பெண்கள் இவ்வாறு பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எமது பிரச்சனைகளை நாம் அடையாளம் கண்டோமானால்த்தான் நாம் அவற்றிற்குப் பரிகாரம் தேடலாம். ஆகவே இவையாவும் எம்மால் அலசி ஆராயப்பட வேண்டும். இவை சம்பந்தமாகப் நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட வேண்டும்.

இன்று என்னிடம் கோரப்பட்ட விடயம் அடுத்த மாதக் கடைசியில் இளைஞர் பேரணி ஒன்று கூடவிருக்கின்றது. அது சம்பந்தமான எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே.அத்துடன் ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடக்கும் கூட்டம் பற்றியும் ஐக்கிய நாடுகளின் அடுத்த செயல்ப்பாடு பற்றியும் எவ்வாறான ஒரு கருத்தை நாம் முன் வைக்க வேண்டும் என்பது.

இளைஞர்கள் ஒன்று கூடல் என்பது எமக்கு இன்றியமையாதது. இன்னுமொரு 15, 20 வருடங்களில் எம்மில் எத்தனை பேர் உயிருடன் இருப்பார்களோ தெரியாது. உயிருடன் இருந்தாலும் எம்மால் எந்த அளவுக்கு ஓடியாடிச் செயல்பட முடியும் என்பதும் ஒரு பிரச்சினை.

ஆகவே இளைஞர்கள் ஒன்றுபடுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு அரசியல் நாட்டம் பிறக்க வேண்டும். அரசியல் ரீதியாக ஒருமித்த சிந்தனை அவர்கள் மத்தியில் வெளிவர நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்த முனைய வேண்டும்.

ஒருமித்த சிந்தனை எனும் போது அரசியல் தீர்வு, அதன் தன்மை, அதைப் பெறும் வழிமுறைகள் பற்றி கலந்தாலோசித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு நாம் வரவேண்டும்.

ஆனால் எம்மிடையே இருக்கும் சில குறைபாடுகள் பற்றி நாம் உணர்ந்து வைத்திருக்க வேண்டும். முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களில் குடியேற காணி இருந்தும், வீடு கட்ட வசதிகள் தருவதாக அறிவிக்கப்பட்டும் அங்கு குடியேற எமது இளையோர்கள் முன்வருகின்றார்கள் இல்லை. அரச உத்தியோகங்களை எதிர்பார்க்கின்றார்கள்.

தொழில் சார் அறிவைப் பெற்ற பின் இளையோர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றார்கள். இங்கு வேலையாட்கள் தட்டுப்பாடு தொடர்ந்து இருக்கின்றது.

அதே போல் படித்த மருத்துவர்கள், தாதியர் சேவையில் ஈடுபட்டோர் போன்ற பலரின் சேவைகள் வடமாகாணத்திற்கு வேண்டியிருக்கின்றது. ஆனால் விண்ணப்பிக்க நம்மவர்கள் இல்லை. வெறும் இலேசான பாடங்களைக் கற்றுவிட்டுப் பட்டம் வாங்கிவிட்டு அரச தொழில்களையே எதிர்பார்க்கின்றார்கள் எமது பட்டதாரி இளைஞர்கள் பலர்.

நம்மை நாமே ஆளும் திறனை எமது இளையோர்கள் முதலில் பெற வேண்டும். அதற்கு அவர்கள் தொழில் மீதும் இனம் மீதும் கரிசனை பிறக்க வேண்டும். மேலும் பல விடயங்கள் பற்றி அடுத்த இளைஞர் கூட்டத்தில் பேச வேண்டும்.

1 comment:

  1. Democratic politics feast on difference of opinion. New parties, new ideas should be welcome. It is suspicion, misunderstanding and mystery gave rise to violent outcomes such as Tamil and Sinhalese massacres of the past. Jaffna Tamil is no longer a puzzle for us.

    ReplyDelete

Post Bottom Ad