பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என்று முடிவெடுத்து என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் இன்று மாலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு சென்றார்.
முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ''என்னுடைய 28 ஆண்டுகால வேதனைக்கும், வலிக்கும் விடுதலை கிடைத்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க விடுதலை என்று நினைக்கிறேன். சிறையில் இருப்போரின் வலி்யையும், வேதனையையும் அதிமுக அரசு உணர்ந்துள்ளது. ஆகவே 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்துள்ளது. 7 பேரின் குடும்பத்தினருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது முதல்வரின் முடிவு. 7 பேர் விடுதலைக்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது மகனை என்னுடம் சேர்த்து வைப்பார் முதல்வர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பேரறிவாளன் விரைவில் சிறையில் இருந்து வருவார் என்று முதல்வர் எனக்கு ஆறுதல் கூறினார். அதற்கு ஆளூநர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.
7 பேரின் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்''என்ற அற்புதம்மாள், ''7 பேரின் விடுதலைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 7 பேரின் விடுதலையை யாரும் அரசியலாக்க வேண்டாம்''என்று வேண்டுகோள் விடுத்தார் .
No comments:
Post a Comment