பிரகாஷை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமை சரியானதா? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 11, 2018

பிரகாஷை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமை சரியானதா?

வலி.தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமாகிய தியாகராசா பிரகாஷ் அவர்களை, தவிசாளர் தெரிவில் நின்றமைக்காக கட்சி உறுப்பினர் பதவியில் இருந்தும் பிரதேசசபை உறுப்பினர் பதவியில் இருந்தும் தமிழரசுக் கட்சி நீக்கி அறிவுறுத்தல் பிரகாஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கட்சி செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய உதவித் தேர்தல் ஆணையாளராலும் பிரகாஷை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்தல் பிரகாஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் சார்ந்த கட்சியின் முடிவை விமர்சிப்பது தவறென்றாலும், சரியான காரணங்கள் ஏதுமின்றி எனது நண்பரை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து ஜனநாயக விரோதமாக நீக்குகின்றமை தொடர்பில் - கட்சி விட்ட தவறுகளை - எனக்குள்ள ஜனநாயக உரிமையோடு - ஓர் ஊடகவியலாளனுக்குரிய கருத்துச் சுதந்திர உரிமையோடு -  தெரிவிப்பதில் தவறில்லை என்பதால் சில கருத்துக்களை இங்கு தெரிவிக்கின்றேன்.


2018 ஆம் ஆண்டு ஜனவரி நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திட்டமிட்டு பழிவாங்கப்பட்ட ஓர் உறுப்பினர் பிரகாஷ். 2011 ஆம் ஆண்டுத் தேர்தலில் வலி.தெற்கில் அதிக விருப்பு வாக்குகள் பெற்று பிரதேசத்தின் பிதாவாகத் தெரிவுசெய்யப்பட்ட பிரகாஷ், தனது சிறப்பான சபை நடவடிக்கை மூலம் கட்சிக்குப் பெருமையைத் தேடிக்கொடுத்த ஒருவர். வலி.தெற்கின்; தலைவராக அவர் இருந்த அந்த பொற்காலத்தை எவரும் குறைகூறுதல் ஆகாது. அவ்வாறான ஒரு சிறந்த தலைவர் 2018 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனது வட்டாரத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றும் பழிவாங்கப்பட்டார் என்றே கூறவேண்டும்.


2011 - 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறப்பாக பிரகாஷால் வழிநடத்தப்பட்ட வலி.தெற்கு, 2018 தேர்தலில் தகுதியற்ற - ஆளுமையற்ற - செயற்றிறனற்ற - தலைமைத்துவமற்ற ஒருவர் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் செல்லவுள்ளது என்பதையுணர்ந்த மக்கள் பிரகாஷை தவிசாளர் தேர்வில் நிறுத்துமாறு ஒவ்வொரு வட்டாரங்களில் இருந்தும் வெற்றிபெற்ற உறுப்பினரை வேண்டினர். அதனடிப்படையில் அவர்கள் பிரகாஷை தேர்வு செய்தனர். தேர்தலில் தற்போது தவிசாளராக உள்ளவருக்கு 12 வாக்குகள். மக்கள் விருப்பத்துக்கமைய தெரிவுசெய்யப்பட்ட பிரகாஷுக்கும் 12 வாக்குகள். திருவுளச் சீட்டில் தர்சன் தவிசாளர் ஆகினார். ஆனால், மக்கள பயந்தமை போன்று வலி.தெற்கு பிரதேச சபை இன்று அதளபாதாளத்தை நோக்கிச் செல்வதை மக்களும் கட்சித் தலைமையும் இந்த 6 மாதங்களிலேயே உணரத் தலைப்பட்டுவிட்டார்கள்.

பிரகாஷ் தன்னைக் கட்சியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியமை தவறு என்று யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் நேற்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக வழக்குத் தாக்கல் செய்து, அது மன்றால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரது உறுப்புரிமை நீக்கத்துக்கு எதிராக இடைக்காலத் தடை நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ளது.. இந்த விடயத்தில் பிரகாஷை முறையற்று நீக்கியமை தொடர்பாக சில விடயங்களை இப்பத்தியில் ஆராயலாம் என்று எண்ணுகின்றேன்.

01. இந்தமுறை தேர்தல் முறையில் சில குழப்பங்கள் உள்ளன. வட்டார பிரதிநிதித்துவம் 60 வீதம். விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 40 வீதம். இதில் பிரகாஷ், வலி.தெற்கு பிரதேச சபைப் பிரிவில் வட்டாரம் - 01 இல் ஏழாலையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒருவர். அவர் வட்டார உறுப்பினர் ஆவார். மக்கள், கட்சிச் சின்னமாகிய வீட்டுக்கு வாக்களித்திருந்தாலும் அவர்கள் தமது வட்டார பிரதிநிதியாகிய ''பிரகாஷ்'' என்ற பெயராலேயே வீட்டுக்கு வாக்களித்துள்ளனர். ஏனெனில் ஏழாலையில் ஏனைய வட்டாரங்கள், குப்பிளான் எல்லாவற்றிலும் வீட்டுச் சின்னம் தோல்வியைத் தழுவியுள்ளது.  பிரகாஷ் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதி. He was elected Member. மற்றைய 40 வீத பிரதிநிதிகளும் நியமன உறுப்பினர்கள் ஆவர்.Nominee Member ஆவர். இந்த நியமன உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் கட்சிக்கு உள்ளது. அவர்களை கட்சி தேவைப்படும் நேரத்தில் மாற்றலாம், நீக்கலாம். என்னவும் செய்யலாம். ஆனால், வட்டாரத்தில் கட்சியால் அடையாளப்படுத்தப்பட்டு, அந்தப் பிரதிநிதிக்கென மக்கள் வாக்களித்து வெற்றிபெற்ற உறுப்பினரை, உள்ளூராட்சி சட்ட உறுப்புரிமைப்படி நீக்க முடியாது. அவ்வாறு நீக்கினால் மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையை கட்சி உதாசீனம் செய்ததாகக் கருதப்படும். கட்சி சிலவேளைகளில் சொல்லலாம் அது கட்சிக்கு வீழ்ந்த - கட்சிச் சின்னத்துக்கு வீழ்ந்த - வாக்கு. இந்தத் தனிநபருக்கு இல்லை என்று. அவ்வாறு கட்சி கூறுகின்ற தகுதியை கட்சி பெற்றது எனில் வலி.தெற்கு பிரதேசத்தின் 18 வட்டாரங்களிலும் கட்சி வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். ஆனால், வெறும் 10 வட்டாரங்களை மாத்திரமே கட்சி கைப்பற்றியுள்ளது. ஆகவே, வட்டாரத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு வீழ்ந்த வாக்குகள் தனிநபர் வாக்குகளாகவே கருதப்படும். 

02. கூட்டமைப்பு ஒரு பதிவுசெய்யப்பட்ட கட்சி அன்று. அதற்கென்று யாப்பு, அங்கத்துவப் படிவம் எதுவும் கிடையாது. தேர்தலில் தமிழரசுக் கட்சியின் பெயரிலேயே கூட்டமைப்பின் சகல வேட்பாளர்களும் போட்டியிட்டார்கள். தமிழரசுக் கட்சிக்கு ஒரு கட்டமைப்பு உள்ளது. மூலக்கிளை, தொகுதிக்கிளை, மாவட்டக்கிளை, மத்திய குழு என்று. தமிழரசுக் கட்சி யாப்பின் பிரகாரம் தேர்தல் ஒன்றின்போது இந்தக் கிளைகளைக் கூட்டி, அவற்றின் பங்களிப்போடு, வேட்பாளர் நியமனக் குழு நியமிக்கப்பட்டு, முறையாக மூலக்கிளை, தொகுதிக்கிளை ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டே வேட்பாளர்களைத் தெரிவுசெய்யவேண்டும். இவை எவையும் இந்தத் தேர்தலில் நடைபெறவில்லை. ஏழாலை மூலக்கிளை, மானிப்பாய் தொகுதி ஆகியவற்றின் தலைவரே திரு.தி.பிரகாஷ்.

03. தேர்தல் முடிவுகளில் வெற்றிபெற்று ஒவ்வொரு சபைக்கும் உறுப்பினர் தெரிவாகியதும், 
தவிசாளர் நியமிக்கவேண்டிய தேவை இருந்தது. அந்த அதிகாரம் தெரிவாகிய உறுப்பினர் கைகளிலேயே இருந்தது. தமிழ்க் கூட்டமைப்பு பெரும்பான்மையை எந்தச் சபைகளிலும் பெறாவிட்டாலும், ஏனைய கட்சிகளைவிட கூடிய ஆசனத்தை தன்னகத்தே கொண்டிருந்தது. தமிழரசுக் கட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்றால் சகல கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்பட்டாலேயொளிய, வேறுவழியில்லாத நிலைமையில் ஏனைய கட்சிகள் இருந்தன. முதலில் யாழ்.மாநகரசபை மேயர் தெரிவுத் தேர்தல். அந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 16 ஆசனம். தமிழரசுக் கட்சி 14 ஆசனம். ஈ.பி.டி.பி. 10 ஆசனம். இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வெற்றிபெற்றமையோடு ஓர் உண்மை புலனாகியது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்தக் கட்சியோடும் கூட்டு வைக்காது என்பது. உடனே சுதாகரித்த கூட்டமைப்புத் தலைமை, ஒவ்வொரு பிரதேச சபைகளுக்கும் தமது எண்ணப்படி தவிசாளர்களை நியமித்தார்கள். இது ஒரு கட்சிக் கட்டமைப்புக்கு அமைவாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் தொகுதிக்கிளை, மாவட்டக்கிளை, மத்தியகுழு என்பவற்றை முறையாகக் கூட்டி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஒவ்வொரு 
சபைகளிலும் வெற்றிபெற்ற உறுப்பினர்களை கட்சித் தலைவர்கள் கூட்டாக அழைத்து, இந்த சபைக்கு இவர்தான் தவிசாளர் வேட்பாளர். இவருக்கே அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என்றார்கள். ஆனால், அங்கு கூட்ட அறிக்கையிடலோ, அல்லது உறுப்பினர்களுக்கு முறையாக அந்த முடிவு எழுத்தில் சமர்ப்பித்தலோ என்பன எதுவும் நடைபெறவில்லை. முதலில், இது ஒரு முறையற்ற கூட்டமே! கட்சிக் கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட கூட்டமே அது. பின்னர் எவ்வாறு அறிக்கையிடுவது? ஆகவே முறையான - சரியான - நேர்த்தியான - அறிவித்தல் இல்லாதமையால் பிரகாஷ் தவிசாளர் தேர்தலில் போட்டியிட்டார்.

04. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் யாழ்.மாவட்டத்தில் எந்த சபையிலும் பெரும்பான்மையை எமது கட்சி பெறவில்லை. மற்றைய கட்சிகளுடன் சேர்ந்தே ஆட்சி அமைக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. எமது கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்தால் கட்சித் தலைமை, தான் விரும்பியபடி தவிசாளரைத் தெரிவுசெய்யலாம். இங்கு தவிசாளரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் அந்தந்தப் பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களிலேயே தங்கியுள்ளது. அந்தவகையில் இவர்தான் தவிசாளர் என கட்சி ஒருவரை சுட்டிக்காட்டுவது தவறாகும். உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் வலி.தெற்கு பிரதேச சபையில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவில் ஓர் உறுப்பினர் தர்சனைத் தெரிவுசெய்ய, இன்னோர் உறுப்பினர் பிரகாஷை தெரிவுசெய்தார். ஓர் உறுப்பினர் தன்னைத் தவிசாளர் வேட்பாளராகத் தெரிவுசெய்யும்போது அதனை நிராகரிப்பது அந்த உறுப்பினரை அவமதிப்பதற்குச் சமமாகும். இக்கட்டு நிலையிலுள்ள பிரகாஷ் தவிசாளர் தேர்வில் போட்டியிட்டார். இருவரும் சமனான வாக்குகள் பெற்றனர். 30 உறுப்பினர்களில் வாக்களிப்பில் பங்குபெறாத முன்னணி 6 உறுப்பினர்களைத் தவிர்த்து, இரு தவிசாளர் வேட்பாளர்களும் சமனான வாக்குகளைப் பெற்றனர். 12 வாக்குகள். சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட 12 உறுப்பினர்கள் பிரகாஷை ஆதரித்துள்ளார்கள். பிரகாஷ் விரும்பி  தவிசாளர் தேர்வில் போட்டியிடவில்லை. சபை உறுப்பினர்களில் கௌரவ உறுப்பினர் கஜேந்திரா என்பவர் பிரகாஷை தவிசாளர் வேட்பாளராக தெரிவுசெய்ய, கௌரவ உறுப்பினர் துவாரகன் அதனை ஆமோதிக்க, சபையின் அரைவாசி உறுப்பினர்கள் பிரகாஷை தவிசாளர் ஆக்கவேண்டும் என்பதை விரும்பியுள்ளார்கள். அந்த 12 உறுப்பினர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். மக்கள் பிரதிநிதிகள். வலி.தெற்கு பிரதேச மொத்த வாக்காளர் சார்பில் அரை பகுதியினர் தேர்ந்தெடுத்த கௌரவ உறுப்பினர்கள் பிரகாஷை ஆதரித்துள்ளார்கள். இதை கட்சித் தலைமை அலட்சியப்படுத்தி, பிரகாஷை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். அவ்வாறு செய்வதற்குரிய அதிகாரமும் சட்டவரம்புக்கமைய கட்சித் தலைமைக்குக் கிடையாது.

05. தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுவில் வலி.தெற்கு பிரதேசசபை தவிசாளர் வேட்பாளர் தர்சன் என்று எடுக்கப்படாத முடிவு, பிரகாஷை நீக்குகின்ற விடயத்தில் மட்டும் ஆராயப்பட்டது. ஒரு தீர்மானத்துக்கு முரணாக செயற்பட்டார் என்று நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் முதலில் அந்தத் தீர்மானம் அதே மத்தியகுழுவில் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும். அது அறிக்கையிடப்பட்டிருக்கவேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கும் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் அந்த அறிக்கையின் பிரதிகள் அனுப்பப்பட்டிருக்கவேண்டும். இதுதான் நிர்வாக நடைமுறை. ஆனால், இங்கு பிரகாஷ் விடயத்தில் நிறைவேற்றப்படாத தீர்மானத்தை மீறினார் என்று தெரிவித்து நடவடிக்கை எடுப்பது எவ்வளவு முட்டாள் தனம். 

06. பிரகாஷ் கட்சி யாப்பில் குறிப்பிடப்பட்டதற்கமைய எந்தவகையிலும் கட்சிக் கோட்பாடுகளையோ விதிகளையோ மீறினவர் அல்லர்.. அவ்வாறிருக்க, கட்சியின் தொகுதி, மாவட்ட, மத்திய குழுக்களில் நிறைவேற்றப்படாத - சில தனிநபர்கள் எடுத்த - தீர்மானத்தை மீறினார் என்று கட்சி செயலாளரால் விளக்கம் கேட்டு எழுத்துமூல பதிவுத் தபால் வந்தது. அந்தப் பதிவுத் தபால் தனது கைக்குக் கிடைத்த மறுகணமே பிரகாஷ் தனது தன்னிலை விளக்கத்தை மிகவும் தெளிவாக - அவர்களுக்கு புரியும் வகையில் இலகு வசண அமைப்பில் - எழுதியிருந்தார். ஆனால் அவரால் வழங்கப்பட்ட அந்த தன்னிலை விளக்கம் மத்தியகுழுவில் சமர்ப்பிக்கப்படவில்லை. கட்சி ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டில் அவரை கட்சி உறுப்பினராக வைத்துக்கொண்டு, பிரதேசசபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் காலைக்கதிர் பத்திரிகை தனது ''இனி இது இரகசியம் அல்ல'' என்ற பத்தி எழுத்தில், அதன் ஆசிரியர் என்.வித்தியாதரன் அவர்கள், கட்சியிலிருந்து நீக்காத ஒருவரை எவ்வாறு பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது? என்ற வினாவை மையப்படுத்தி எழுதியிருந்தார். சுதாகரித்த கட்சி செயலாளர் துரைராஜசிங்கம், 15 நாள்களுக்கு முன்னர் மீண்டும் பிரகாஷுக்கு கட்சி உறுப்பினர் பதவி, பிரதேச சபை உறுப்பினர் பதவி ஆகிய இரண்டிலிருந்தும் நீக்குவதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதாக பிரகாஷுக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.

07. கட்சி செயலாளரின் அறிவித்தலுக்கமைய, யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கட்சித் தலைவரின் கடிதத்தை மேற்கோள்காட்டி உறுப்பினர் பதவியிலிருந்து பிரகாஷை நீக்கி, புதியவரை நியமிக்க வர்த்தமானி பிரசுரம் மேற்கொள்ளவுள்ளதாக ஓர் எழுத்துமூல அறிவித்தலை விட்டார். உதவித் தேர்தல் ஆணையாளரிடமிருந்து வந்த அந்த பொறுப்புமிக்க சட்ட அந்தஸ்து பெற்ற அறிவிப்பு திகதியிடப்படாத ஓர் அறிவிப்பாக - சட்டவலுவற்ற ஓர் அறிவிப்பாக - வந்தது.

ஆகவே, பிரகாஷ் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இவ்வாறான பல சட்ட ஓட்டைகள் காணப்படுகின்றன.

தெல்லியூர் சி.ஹரிகரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad