வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் சந்தோசமாக செயற்பட தயாராக இருக்கின்றோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய எம்.ஏ.சுமந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
"காலியில் இடம்பெற்ற கருத்தரங்கில் சமஸ்டி பற்றி தான் கூறிய சந்தர்ப்பம், கேட்கப்பட்ட கேள்வி, அந்தச் சூழல் என்பவற்றை புரிந்து கொள்ளாமல் ஒரு பகுதியை மட்டும் வைத்து விவாதங்கள் தொடர்கின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது.
அதற்குச் சாத்தியமில்லை. எனவே, வடமாகாண முதலமைச்சர் தான் விரும்புகின்ற தனது நான்காவது தெரிவினை கையில் எடுக்க வேண்டும்.
கட்சி அரசியலைவிட்டு விலகி, இங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்தமான தலைமை பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க விக்னேஸ்வரன் முன்வருவாரானால், அவரோடு இணங்கி, அவரது தலைமைக்குக் கீழ், மிகவும் சந்தோசமாக செயற்பட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.
வடமாகாண முதலமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைபில் இருந்து வெளியேறி, கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டால் அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்க முடியாது.
அது அவர் செய்கின்ற தவறு. இந்நிலையில், தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குழைக்காமல் இருக்க நாங்கள் தேர்தலில் மோதிக்கொள்ள கூடாது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்ட தொடரில் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், "என்னிடம் தற்போது நான்கு மாற்றுவழிகள் தரப்பட்டுள்ளன.
இதில், நான்காவது தெரிவாக கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்துப் பெற முயற்சிப்பது" என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment