மைத்திரி ஏமாற்றுவார் போல இருக்கிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, September 28, 2018

மைத்திரி ஏமாற்றுவார் போல இருக்கிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச ஈடுபாடு இருக்கும் என்ற இரண்டு பிரேரணைகளுக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் தற்போது சர்வதேச தலையீடுகள் இல்லாத செயற்பாடுகளே கையாளப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளமை தீர்வு விடயத்தில் எமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.  
அரசியலமைப்பு உருவாக்கத்திலும் சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்காது ஜனாதிபதி செயற்படும் விதம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை போன்றே அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை குறித்து பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை தெரிவிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும்போது இராணுவத்தை காப்பாற்றும் புதிய யோசனையொன்றை முன்வைப்பதாக கூறியிருந்தார். இராணுவ வீர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தவிர்க்கவும் அவர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போதே நாம் எமது தரப்பு எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம். இராணுவத்தை மன்னிக்கும் எந்த ஒரு நகர்வுக்கும் ஒரு அங்குலமேனும் இடமளிக்க முடியாது என்பதை நாம் தெளிவாக கூறியிருந்தோம்.
அதேபோன்று அண்மையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி மீதான குற்றச்சாட்டில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தமைக்கும் நாம் எமது கண்டனத்தை வெளிப்படுத்தினோம். இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறை மீது எந்தவித நம்பிக்கையும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் நேரடித் தலையீடுகள் இருந்தமை வெளிப்பட்டன. தற்போது சர்வதேச சக்திகளின் தலையீடு வேண்டாம் என ஜனாதிபதி கூறினாலும் கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா இரண்டு தீர்மானங்களை கொண்டுவந்த போது இலங்கை அரசாங்கம் அதற்கு இணை அனுசரணை வழங்கியது. இதில் நீதிமன்ற பொறிமுறையில் சர்வதேச ஈடுபாடு இருக்கும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.
அவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி தற்போது சர்வதேச தலையீடுகள் அவசியம் இல்லை, எமது பிரச்சினைகளை நாமே பார்த்துக்கொள்கிறோம் என்ற கூறியுள்ளமை தீர்வு விடயத்தில் எமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. தீர்வுகள் குறித்து அன்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து ஜனாதிபதி பின்வாங்குகின்றார் என்பதாக நாம் உணர்கின்றோம்.
கடந்தகால குற்றங்கள் மேலும் நிகழாமை குறித்த நகர்வுகளில் புதிய அரசியலமைப்பே ஒரே தீர்வு என ஆரம்பத்தில் அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கியது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலமாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுத்தர தயாராக உள்ளதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது. அதற்கமைய 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்க நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் நிலைமைகள் காணப்பட்டன. எனினும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகவும் மெதுவான போக்கில் செயற்பட ஆரம்பிக்கவும், அரசியல் அமைப்பு விடயங்களை தடுக்கும் பல தடைகள் ஏற்படவும் ஜனாதிபதியே காரணமாக இருந்தார். அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சரியான அரசியல் தலைமைத்துவம் ஒன்றினை ஜனாதிபதி கொடுக்கவில்லை. அதுவே பிரதான தடையாக காணப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார். அதில் அரசியல் அமைப்பின் மூலமாக தீர்வுகளை பெற்றுத்தருவேன் என்ற வாக்குறுதி பிரதானமானது. அந்த வாக்குறுதிகளை நம்பியே தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கினர். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிகளை மீறும் வகையில் இன்று அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அரசியலமைப்பு உருவாக்கத்தில் தெற்கின் அடிப்படைவாத அரசியலுக்கு அஞ்சியும் தனது இருப்பினை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் அவர் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறுகின்றார். ஆனால் இவை ஒரு காரணமாக கூற முடியாதது, இந்த நாட்டின் பெரும்பான்மை ஆதரவில் ஆட்சிக்கு வந்தவர் என்ற வகையில் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும். இன்று ஜனாதிபதி செயற்படும் விதம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை போலவே அமைந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad