ரெலோ நகர சபை உறுப்பினர் நீக்கம்! இரண்டாவது இடைக்காலத் தடைபெற்றார் மணிவண்ணன்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 18, 2018

ரெலோ நகர சபை உறுப்பினர் நீக்கம்! இரண்டாவது இடைக்காலத் தடைபெற்றார் மணிவண்ணன்!!

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து கட்டளை வழங்கியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உட்பட கட்சியின் செயலாளர், பொருளாருக்கு எதிராக இந்த இடைக்கால தடைக் கட்டளையை வழங்கிய யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன், எதிர்வரும் 2 ஆம் திகதி பிரதிவாதிகளை மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை வழங்கினார்.


தமிழர் விடுதலைக் கழகம் (ரெலோ) கட்சியைச் சார்ந்த கந்தசாமி சதீஸ், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ரெலோவின் பரிந்துரையின் பேரில் கட்சியின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகிச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் க.சதீஸை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அந்தக் கட்சி நீக்கியது.
இந்த நடவடிக்கையின் ஊடாக அவரை நகர சபை உறுப்புறுமையிலிருந்து நீக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்கும் தமிழ் அரசுக் கட்சி சார்பில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் கட்சியின் தலைமை எடுத்துள்ள தீர்மானத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து கந்தசாமி சதீஸ் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் நீதிப் பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவின் பிரதிவாதிகளாக தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் கி.துரைராசசிங்கம் மற்றும் பொருளாளர் பொ.கனகசபாபதி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அந்த மனு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளை வழங்கினார்.
மனுதாரரின் இடைக்கால நிவாரணமான, தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் பிரதிவாதிகளின் அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற மாவட்ட நீதிமன்றம், வரும் 14 நாள்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியது.
வழக்கு விசாரணை வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் பிரதிவாதிகள் மன்றில் முன்னிலையாகி தமது பதிலியை சமர்ப்பிக்க மன்று அழைப்புக் கட்டளை வழங்கியது.
இதேவேளை, தமிழ் அரசுக் கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜி.பிரகாஷை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கும் தமிழ் அரசுக் கட்சியின் நடவடிக்கைக்கு வரும் 25 ஆம் திகதிவரை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 
அந்த மனுவையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணனே முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad