முதலமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துவேன். கட்சிகளிலும் பார்க்க மக்களை ஒன்றிணைத்து எமது மக்களின் தேவைகளை உலகிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்தவற்றை செய்வேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
தற்போதைய தலைமைகள் போய் கூட்டமைப்பு பதிவு பெற்று மாற்றுத்தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு சாத்தியம் உள்ளது என்று குறிப்பிட்டவர் வடமாகாண சபையின் ஒருசில பின்னடைவுகளுக்கு அரசியல் ரொட்டித்துண்டுகளைக் காட்டி அறநிலை மறந்த அவையினர் சிலரே காரணம். அவ்வாறு இருந்தும் எமது செயற்பாடுகள் செவ்வனே இருந்தன என்றும் சுட்டிக்காட்டினார்.
ஏதிர்வரும் மாதம் 25ஆம் திகதியுடன் வடமாகாண சபையின் முதலாவது ஆயுட்காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து முதலமைச்சர் சி.வி;.விக்கினேஸ்வரன் வீரகேசரி வார இதழுக்கு வழங்கிய பிரத்தியேக கருத்துப் பரிமாற்றத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன் முழுவடிவம் வருமாறு,
கேள்வி – ஒக்டோபர் 23ஆம் திகதி உங்களின் பிறந்த தினத்தன்று வடமாகாண சபையின் முதலாம் அத்தியாயம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன செய்யப் போகிறீர்கள்?
பதில் - 24ஆம் திகதி பௌர்ணமி தினமாகையாலும் 25ஆம்; திகதியே கடைசித் தினமாகக் கூறப்பட்டுள்ளதாலும் வட மாகாணசபை ஒக்டோபர் 23ஆம் திகதி கூட இருக்கின்றது. அன்றைய தினம் பிறந்த தினமாக அமைந்தது எதேச்சையாக ஏற்பட்ட ஓர் ஒற்றுமை.
நான் முதலமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடிய கவனஞ் செலுத்த உள்ளேன். கட்சிகளிலும் பார்க்க மக்களை ஒன்றிணைத்து, எமது மக்களின் தேவைகளை, அபிலாஷைகளை, விருப்பு வெறுப்புக்களை, கரிசனைகளைத் தெரிந்து வைத்து உலகிற்கு எடுத்துக் கூறவும் அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறவும் வேண்டியுள்ளது. என்னால் முடிந்ததை இது சம்பந்தமாகச் செய்ய முன்வருவேன்.
கேள்வி – அடுத்த கட்டம் தொடர்பில் 4 தெரிவுகளைக் கொண்டிருக்கும் நீங்கள் இறுதி முடிவை எப்போது எடுக்கவுள்ளீர்கள்?
பதில் - வடமாகாணசபைத் தேர்தல்கள் உடனே நடைபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. முதலில் நான்காவது தெரிவில் ஈடுபட்டுக் கொண்டு மேற்கொண்டு நடக்க வேண்டியவை பற்றி பின்னர் ஆராய்வோம்.
கேள்வி – உங்களை முதலமைச்சராக தெரிவு செய்ய வேண்டும் என்பதில் ஆரம்பம் முதல் இறுதிவரை இறுக்கமாக இருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டா?
பதில் - நான் எப்பொழுதும் ஆயத்தம். அவருடன் எனக்கென்ன பிணக்கு? அவரின் வலது கரம் இடமளித்தால் அவரும் என்னைச் சந்திப்பதில் அவருக்கு எந்தத் தடங்கலும் இருக்காது என்று நம்புகின்றேன்;.
கேள்வி – உங்களிடத்தில் காணப்படும் 4 தெரிவுகளில் நான்காவது தெரிவை மேற்கொள்ளும் பட்சத்தில் கூட்டமைப்பு வரவேற்புடன் ஆதரவை நல்கும் என அதன் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றதைக் கருத்தில் எடுப்பீர்களா?
பதில் - கூட்டமைப்பு ஏற்கனவே ஆதரவு நல்கியே வருகின்றது. பேச்சாளருக்கு இது தெரியாது போலும்!
கேள்வி – கொள்கை ரீதியாக புதிய கூட்டணியை உருவாக்கி அடுத்த தேர்தலில் களமிறங்குவீர்களா?
பதில் - இன்னமும் முடிவெடுக்கவில்லை. ஆனால் கொள்கை ரீதியாகவே எனது நிலை இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்கத் தேவையில்லை.
கேள்வி – எதிர்காலத்தில் கூட்டமைப்புடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று அதன் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு சாத்தியப்பாடு உள்ளதா?
பதில் - தற்போதைய தலைமைகள் போய் கூட்டமைப்பு பதிவு பெற்று மாற்றுத்தலைமை உதித்தால் சாத்தியப்பாடு உண்டு.
கேள்வி – வடமாகாண சபையின் வினைத்திறனான செயற்பாட்டில் பின்னடைவுகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
பதில் - இன்றைய மத்திய அரசாங்கம் பற்றியும் அவர்களின் வினைத்திறன் சம்பந்தமாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆகவே யாரும் இவ்வாறான கேள்விகளை யாரைப்பற்றியும் அடுக்கலாம். எம்மைப் பொறுத்த வரையில் பின்னடைவுகளுக்குக் காரணம் நாமல்ல. எம்முள் இருந்து கொண்டே எமக்குக் குழிபறித்துக் கொண்டிருப்போரே அதற்குப் பதில் கூற வேண்டும். அரசியல் ரொட்டித் துண்டுகளைக் காட்டி அற நிலை மறந்த அவையினர் சிலரை வைத்து அரங்கேற்றிய நாடகங்கள் பின்னடைவைத் தராமல் எதனைத் தருவன? அப்படி இருந்தும் எமது செயற்பாடுகள் பற்றி நல்லதே கூறப்பட்டுள்ளன. நாடு பூராகவும் உள்ள 800க்கும் அதிகமான அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் போன்றவற்றுள் 2015ஆம் ஆண்டில் எமது மாகாண முதலமைச்சர் அமைச்சே சில விடயங்கள் சம்பந்தமாக முதலிடம் பெற்றது. 2016இலும் நாம் முதன்மை நிலையில்த்தான் அடையாளம் காட்டப்பட்டுள்ளோம். சதிகள் பல நடந்தாலும் எமது செயற்பாடுகள் வினைத்திறனுடன்தான் நடாத்தப்பட்டு வருகின்றன. முட்டைகளை இட்டுவிட்டு கொக்கரித்து எமது வினைத்திறன் பற்றி பறைசாற்ற வேண்டிய அவசியம் எமக்கில்லை.
கேள்வி – இதுவரை காலத்தில் வட மாகாண சபை சாதித்தது என்ன?
பதில் - எமது சாதனைகள் பற்றிய கைநூல் விரைவில் வெளிவரும். அதை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி – கஜேந்திரகுமார் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இரு துருவமாகியுள்ள நிலையில் புதிய கூட்டணி ஒன்று அமைவதிலும் சிக்கல்கள் இருப்பது போல் உள்ளதே?
பதில் - கொள்கைகள் ஒன்றாக இருந்தால், மக்களின் நலனே முக்கியமென்ற எண்ணம் வேரூன்றி விட்டால் துருவங்கள் கூட இணையலாம்.
கேள்வி – மஹிந்த ராஜபக்ஷ உட்பட இலங்கையின் அரசியல் தலைமைகள் இந்தியாவின் கரிசனையை கவனத்தில் கொண்டு செயற்படுகின்ற சூழல் காணப்படுகின்ற நிலையில் தொடர்ந்தும் அரசியல் களத்தில் பயணிப்பதை உறுதிசெய்துள்ள நீங்கள் இந்தியாவுடன் உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்துவீர்களா?
பதில் - இந்தியாவுடனான எனது உறவுகள் என்றுமே நன்றாகவே இருந்து வருகிறது. அதில் கட்டி எழுப்ப எதுவும் இல்லை.
.
No comments:
Post a Comment