விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 28, 2018

விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்

2015ம் ஆண்டு நோர்வேயில் நடந்த ஒரு சந்திப்பின் போது ஒரு புலமையாளர் என்னிடம் கேட்டார். “விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலைப் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன?” என்று. நான் சொன்னேன் “அவர் தொடர்பாக நான்கு விதமான ஊகங்கள் உண்டு. முதலாவது அவர் சம்பந்தனின் ஆள். விட்டுக்கொடுப்பற்ற தமிழ்த்தேசிய சக்திகளை கூட்டமைப்பிற்குள் தக்க வைத்திருப்பதற்காக சம்பந்தரால் இறக்கப்பட்டவர் என்பது. இரண்டாவது அதே நோக்கத்திற்காக அமெரிக்காவால் இறக்கப்பட்டவர் என்பது. மூன்றாவது அதே நோக்கத்திற்காக இந்தியாவால் இறக்கப்பட்டவரென்பது. நாலாவது மேற்சொன்ன சூழ்ச்சிக் கோட்பாடுகள் எதுவும் சரியல்ல. மாறாக அவர் ஒரு நேர்மையான அறநெறியாளன். வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக இருக்க முயற்சிக்கிறார். எனவே அந்த மக்களின் துயரங்களுக்கு நெருக்கமாக வருகிறார். அதனால் கற்றுக்கொண்டவைகளின் பிரகாரம் அவர் அதிகபட்சம் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கிறார்” என்று.

என்னைக் கேள்வி கேட்ட புலமையாளர் ஒரு பிரபலஆங்கில இணையத் தளத்திற்கு பின்பலமாய் இருப்பவர். தமிழில் மதிக்கத்தக்க அறிஞர்களில் ஒருவர். அவர் தொடர்ந்து என்னிடம் கேட்டார். “இந்த நான்கு ஊகங்களிலும் எதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்?” என்று. நான் சொன்னேன் “நாலாவதுதான் பொருத்தமானதாகத் தோன்றுகிறது” என்று. அதற்கு அவர் சொன்னார் “நானும் அப்படித்தான் கருதுகிறேன்” என்று. அப்பொழுது அவ்வுரையாடலில் பங்குபற்றிய மற்றொரு செயற்பாட்டாளர் குறுக்கிட்டார். மேற்படி புலமையாளரை நோக்கி அவர் பின்வருமாறு கேட்டார் “உங்களுடைய இணையத்தளம்தானே அவர் பதவிக்கு வந்த புதிதில் அவரை கடுமையாக விமர்சித்தது? ஆனால் இப்பொழுது நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே? ” என்று. அதற்கு அந்தப் புலமையாளர் சொன்னார் “நாங்களும் விக்னேஸ்வரனைப் பற்றிக் கற்றுக்கொண்டதன் அடிப்படையில் எமது கருத்தை மாற்றலாம்தானே? ” என்று.

விக்னேஸ்வரன் முலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொழுது அதைக் கடுமையாக எதிர்த்து எழுதியவன் நான். கொழும்பு மையத்திலிருந்து வந்த அவர் காலப்போக்கில் வடக்கில் வாக்களித்த மக்களின் வலிகளுக்கு நெருக்கமானவராக மாறிய போது அவரை ஜனவசியமிக்க ஒரு மாற்றுத் தலைமையாக வர்ணித்திருந்தேன். அப்படி “ஒரு மாற்று அரசியலுக்கு தான் இப்போதைக்கு வரமாட்டேன்” என்று கடந்த ஆண்டு ஒரு சந்திப்பின் போது அவர் நானுமுட்பட மூன்று ஊடகவியலாளர்களுக்குக் கூறினார். அச்செய்தி காலைக்கதிர் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்தது. இப்பொழுது அம்மாற்றுத் தலைமையாக மேலெழுவதற்கு அவர் தயாராகி விட்டார். கடந்த ஐந்தாண்டுகளாக அவர் கற்றுக்கொண்டவை அவரை அப்படி ஒரு முடிவிற்கு இட்டுச்சென்றனவா?

ஆனால் கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையை வைத்துப் பார்க்கும் பொழுது அவர் வெகுசனப் போராட்டங்கள் தொடர்பில் அல்லது வெகுசன மைய அரசியல் தொடர்பில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றே தோன்றுகிறது.

தன் முன்னுள்ள நான்கு தெரிவுகளை அவர் அந்த உரையில் விவாதிக்கிறார். அதில் ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பான தெரிவைக் குறித்து பின்வருமாறு கூறுகிறார்…. “ஆகவே இன்றைய நெருக்கடியானதும் இக்கட்டானதுமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் நலன்களை மையப்படுத்தி சிந்திக்கும் போது ஒரு மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கி செயற்படும் நான்காவது தெரிவு அதிகாரமற்ற ஒரு இயக்கத்தின் வெறும் ஆதங்க வெளிப்பாடாகவே இருக்கும் என்று எனக்கு புரிந்துள்ளது. அதனால்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவர் மக்கள் இயக்கமொன்றை நான் முன்னெடுத்துச் செல்வதை தாம் வரவேற்பதாகக் கூறியுள்ளார்.” என்று விக்னேஸ்வரன் உரையாற்றியுள்ளார். இவ்வாறு “அதிகாரமற்ற ஒரு இயக்கத்தின் ஆதங்க வெளிப்பாடு” என்று அவர் மக்கள் அதிகாரத்தைப் பற்றிக் கூறுவது அவர் இவ்வளவு காலமும் பேரவை தொடர்பில் கூறிக்கொண்டு வந்த இலட்சியத்திற்கு நேர் எதிராகக் காணப்படுகிறது. வெகுசன மைய அரசியலைக் குறித்து அவர் கற்றுக்கொண்டவை காணாது என்றே தோன்றுகிறது. அதே காலைப் பொழுதில் காலி முகத்திடலில் மலையக மக்கள் சம்பள உயர்வைக் கோரித் திரண்டு போராடியதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

அதே சமயம் தேர்தல் மைய அரசியலைக் குறித்து அவர் பின்வருமாறு கூறுகிறார்…. “சாத்வீக வழிமுறைகளில் ஆரம்பித்து வன்முறைகளால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டமே இன்று அரசியல் ராஜதந்திர போராட்டமாக பரிணாமம் பெற்றுள்ளது. ஜனநாயகப் தேர்தல்களில் பங்குபற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசியல் ராஜதந்திர மற்றும் சர்வதேச உறவு செயற்பாடுகளில் ஈடுபட்டு எமது மக்களின் சட்ட ரீதியான பிரதிநிதிகளாக அவர்களின் கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் பெறுவதும் ஆதரவைப் பெறுவதுமே இந்த அரசியல் ராஜதந்திர போராட்டத்தின் அடிப்படை”. அதாவது கூட்டிக்கழித்துப் பார்த்தால் விக்னேஸ்வரன் தேர்தல் மூலம் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விழையும் ஒரு தேர்தல் மைய அரசியல்வாதியாகவே நல்லூரில் தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளார். அதன்படி அவர் ஒரு கட்சியின் பெயரையும் அறிவித்திருக்கிறார்.

இதை இவ்வாறு எழுதும் போது கடந்த ஆண்டு இடம்பெற்ற மற்றொரு சந்திப்பை இங்கு நினைவூட்ட வேண்டும். யாழ் நகரப் பகுதியில் உள்ள ஒரு மத நிறுவனத்தில் அச்சந்திப்பு இடம்பெற்றது. ஒரு மாற்று அணியை உருவாக்க விரும்பிய பல்வேறு தரப்புக்கள் அதில் கூடின. அதன் போது இக்கட்டுரையாளர் ஒரு விடயத்தை சுட்டிப்பாக அழுத்திக் கூறினார். “ஒரு மாற்று அணி எனப்படுவது கூட்டமைப்பிற்கு எதிரான ஒரு தேர்தல் கூட்டணியாக மட்டும் இருக்கக்கூடாது. மாறாக அது கூட்டமைப்பும் உட்பட தமிழ் மிதவாதத் தலைமைகள் எங்கே சறுக்கின என்பதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஒரு புதிய மிதவாதத்தைப் பற்றிச் சிந்திப்பதிலிருந்து அல்லது 2009 மேக்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பை வெளிக்காட்டத் தேவையான பொருத்தமான அறவழிப் போராட்ட வடிவமொன்றை பற்றிச் சிந்திப்பதிலிருந்தே தொடங்குகிறது” என்று. மேலும் “ஒரு புதிய கூட்டை உருவாக்கி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதிய மாகாணசபை உறுப்பினர்களும் மக்கள் அதிகாரத்தைப் பெற்றபின் பழைய வழிமுறைகளிலேயே எதிர்ப்பைக் காட்டும் போது அது வேலை செய்யுமா? இப்பொழுது தேவையாக இருப்பது எது மாற்றுத் தளம்? அல்லது எது மாற்று வழி? என்று சிந்திப்பதுதான். அப்படி சிந்தித்தால்தான் கூட்டமைப்பும் அதற்கு முந்திய மிதவாதிகளும் செய்யத்தவறிய ஏதோ ஒன்றை புதிய கூட்டு செய்யலாம். அதன் மூலம் அரசாங்கத்தோடும், உலக சமூகத்தோடும் பேரம் பேசலாம்” என்று.

ஆனால் அச்சந்திப்பில் பங்குபற்றிய பலரும் ஒரு தேர்தல் கூட்டைப் பற்றியே அதிகமாகப் பேசினர். அதில் விக்னேஸ்வரனை எப்படித் தலைவராக்குவது? என்பது பற்றியே பேசினர். கடந்த புதன்கிழமை விக்கினேஸ்வரனின் பேச்சிலும் அதுதான் இழையோடுகிறது. ஒரு புதிய ராஜதந்திரப் போரை அவர் முன்னெடுக்கப் போகிறாரா என்று கேட்கத் தோன்றுகிறது.

ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை விடவும் அதிக பட்சம் ஒரு கட்சியைக் கட்டியெழுப்பி தேர்தல் மூலம் மக்கள் அதிகாரத்தைப் பெற்று ஒரு ராஜதந்திரப் போரை முன்னெடுப்பதே அவருடைய வழிவரைபடமாகத் தெரிகிறது. ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் தனக்குள்ள வரையறைகளை விளங்கிக் கொண்டு தேர்தல் மைய அரசியலே தனக்குப் பொருத்தமென அவர் சிந்திக்கக்கூடும். ஆயின் கூட்டமைப்பிற்கு எதிரான பரந்த தளத்திலான அதிக பட்சம் சாம்பல் நிறப்பண்புள்ள ஒர் ஐக்கிய முன்னணியை அவர் கட்டியெழுப்ப வேண்டியிருக்கும். அதுவும் தன்னுடைய எண்பதாவது வயதில் அவர் அதைச் செய்ய வேண்டியிருக்கும்.



இப்பொழுது அவரிடம் ஒரு கட்சியின் பெயர் மட்டுமே உண்டு. அதற்குப் பதிவும் இல்லை. பிறகு ஒரு காலம் பதியலாம் என்று சிந்தித்தாலும் தனக்கென்று ஒரு கட்சியை அல்லது தேர்தல் மையக் கட்டமைப்பை அவர் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அதற்கு வேண்டிய வாழ்க்கை ஒழுக்கம், உடல்நலம், வயது என்பன அவருக்கு உண்டா?

கடந்த ஆண்டு விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நகர்த்தப்பட்ட காலகட்டத்தில் டான் ரி.வியில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றினேன். அப்பொழுது அத்தொலைக்காட்சியின் பணிப்பாளரான குகநாதன் என்னிடம் சிரித்துக்கொண்டே கேட்டார். “விக்னேஸ்வரனின் வாழ்க்கை முறையை வைத்துப் பார்த்தால் அவர் ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்கக் கூடியவராக உங்களுக்குத் தெரிகிறதா?” என்று. மேலும் அவர் சில விடயங்களைச் சுட்டிக்காட்டினார். “விக்னேஸ்வரன் வாகனத்தில் போகும் போது முன்னுக்கு ஒரு வாகனம் பின்னுக்கு ஒரு வாகனம் போக வேண்டும். அவர் வாகனத்தை விட்டு இறங்க முதல் அவருடைய மெய்க்காவலர் இறங்கி வாகனக் கதவைத் திறந்து விட வேண்டும். அவர் வீட்டிற்குள் நுழைய முதல் ஓர் உதவியாளன் வாசற் கதவைத் திறந்து விடவேண்டும். இப்படியாக அவரது ஒவ்வொரு அசைவிலும் ஓர் உதவியாளன் அவருக்குத் தேவை. இப்படிப்பட்ட ஒரு பிரமுக வாழ்க்கையை வாழ்ந்தவர் அச்சொகுசுகளை எல்லாம் துறந்து யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தனது உதவியாளர்களுக்கு தனது காசில் சம்பளத்தைக் கொடுத்து தனக்கென்று ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா? அதற்குரிய வாழ்க்கை முறை அவரிடம் உண்டா?” என்று.

குகநாதன் கேட்ட கேள்விக்கு விக்கினேஸ்வரன் பதில் கூற வேண்டிய காலம் வந்து விட்டது. இனி அவர் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது வேலையாட்களுக்கு சொந்தக்காசில் சம்பளம் கொடுத்து ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். ஓய்வுறக்கமின்றி ஊர்கள் தோறும் கால்நடையாக நடந்து வீடு வீடாகச் சென்று தொண்டர்களைத் திரட்ட வேண்டும். இவற்றையெல்லாம் விக்னேஸ்வரன் தானாகவே செய்வாரா? அதற்கு வேண்டிய ஆட்கள் அவரிடம் உண்டா? அதற்கு வேண்டிய வாழ்க்கை ஒழுக்கம் அவரிடம் உண்டா? அல்லது தமிழ் மக்கள் பேரவையிடம் அப்பொறுப்பை ஒப்படைப்பாரா? தமிழ் மக்கள் பேரவையால் அதைச் செய்ய முடியுமா? இது அவர் முன்னால் இருக்கும் முதலாவது சவால்.

இரண்டாவது சவால் பரந்த தளத்திலான கட்சிகளின் ஐக்கிய முன்னணி ஒன்றை எப்படி உருவாக்குவது என்பது. தனக்கென்று ஒரு சொந்தக் கட்டமைப்பை கொண்டிருந்தால்தான் ஏனைய கட்சிகளை ஒருங்கிணைக்கலாம். இல்லையென்றால் அவருடைய தலைமைத்துவத்திற்கு அடித்தளம் இருக்காது. அவருடைய கட்சிக்கு பதிவு இல்லை என்பதனால் அவர் ஏற்கெனவே பதியப்பட்ட கட்சியை விலைக்கு வாங்க வேண்டும். அல்லது ஐக்கிய முன்னணிக்குள் வரக்கூடிய ஒரு கட்சியின் பதிவைப் பயன்படுத்த வேண்டும். அவருடைய வயது, வாழ்க்கை ஒழுக்கம், நிலையான நலன்கள் என்பவற்றைக் கருதிக் கூறின் ஒரு புதிய கட்சியைக் கட்டியெழுப்புவதை விடவும் ஒரு புதிய கூட்டை உருவாக்குவதே உடனடிக்கு சாத்தியமானதாகத் தெரிகிறது.


ஆனால் கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்குபற்றவில்லை. விக்னேஸ்வரனின் கூட்டுக்குள் ஈ.பி.ஆர்.எல்.எவ்வையும், புளட்டையும் இணைப்பது தொடர்பில் அவர்கள் முரண்படுவதாகத் தெரிகிறது. தேர்தல் மையக் கூட்டை விடவும் கொள்கை மையக்கூட்டையே அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிகிறது. இது தொடர்பில் பேரவை உறுப்பினர்கள் அக்கட்சியோடு பேசியிருக்கிறார்கள். ஆனால் அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. எனவே புதன்கிழமைக் கூட்டத்தை அக்கட்சி புறக்கணித்திருக்கிறது. அதே சமயம் ஈ.பி.ஆர்.எல்.எவ் அக்கூட்டத்தில் பங்குபற்றியிருக்கிறது. வவுனியாவிலிருந்து சிவசக்தி ஆனந்தன் தனது ஆதரவாளர்களை ஒரு வாகனத்தில் அழைத்து வந்திருந்தார். பேரவைக்குள் அங்கம் வகிக்கும் புளட் அக்கூட்டத்திற்கு வரவில்லை. இக்கட்சிகளைத் தவிர புதிதாக ஒரு கட்சியை அறிவித்திருக்கும் அனந்தி அங்கே காணப்பட்டார். தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் காணப்பட்டார். அருந்தவபாலனும் காணப்பட்டார்.

மேற்சொன்ன பிரமுகர்களில் அருந்தவபாலனைத் தவிர ஏனைய அனைவரும் ஆளுக்காள் நல்லுறவைக் கொண்டிருக்கவில்லை. அனந்திக்கும், ஐங்கரநேசனுக்கும் உறவு சுமுகமாக இல்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ்விற்கும் ஐங்கரநேசனுக்கும் இடையில் உறவே இல்லை. பொது இடங்களில், பொது வைபவங்களில் காணும் போது ஆளுக்காள் சிரிப்பதுமில்லை. புதிய கூட்டிற்குள் இணைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எவ்விற்கும் இடையில் சுமுகமாக உறவு இல்லை. பொது இடங்களில் ஆளுக்கு ஆள் சிரித்துக்கொள்வதில்லை. அனந்திக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலும் பெரிய உறவு இல்லை .விக்னேஸ்வரனோடு நிற்கின்ற அல்லது அவரது அணிக்கு வரக்கூடிய கட்சிகள் மற்றும் பிரமுகர்களுக்கு இடையிலான ஐக்கியம் இப்படித்தான் உள்ளது. ஆளுக்கு ஆள் எதிரெதிர் திசைகளில் பார்த்துக்கொண்டிருக்கும் இத்தனை நவக்கிரகங்களையும் விக்னேஸ்வரனால் ஒரு கூட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? அதற்கு வேண்டிய தலைமைப் பண்பு அவருக்குண்டா? இது அவர் முன்னாள் உள்ள இரண்டாவது சவால்.

மூன்றாவது சவால்- கூட்டமைப்பினரால் அவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகள். பதவிக்காலம் முடிந்த பின்னரும் அவரைப் பின்தொடரும் இவ்வழக்குகள் எதிர்காலத்தில் அவருக்குப் பொறியாக மாறுமா? அவை பொறியாக மாறுமா இல்லையா என்பது அதிகபட்சம் ஓர் அரசியல் தீர்மானம்தான். சட்டத் தீர்மானமல்ல. இது மூன்றாவது சவால்.

நாலாவது சவால் – கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன் வைத்தே அவர் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். எனவே அந்த விமர்சனங்கள் தன்மீதும் வராதபடி தலைமை தாங்க வேண்டும். அதாவது 2009ற்குப் பின்னரான ஒரு புதிய தமிழ் மிதவாதத்திற்கு அவர் தலைமை தாங்க வேண்டியிருக்கும். எதிர்த்தரப்பின் இணக்க அரசியல் அபிவிருத்தி அரசியல், சலுகை அரசியல், சரணாகதி அரசியல் எல்லாவற்றிற்கும் எதிராக ஒரு புதிய முன்னுதாரணத்தைப் படைக்க வேண்டியிருக்கும்.

கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வென்ற போது சம்பந்தரும் இது ராஜதந்திரப் போர்தான் என்று பிரகடனம் செய்தார். நல்லூரில் வைத்து இடி முழங்கிய போது விக்னேஸ்வரன் கூறியதும் கிட்டத்தட்ட அதைத்தான். பிராந்திய வியூகங்கள், அனைத்துலக வியூகங்கள், உள்நாட்டு வியூகங்கள் ஆகிய மூன்றையும் எதிர்கொண்டு ஒரு ராஜதந்திரப் போரை அவர் முன்னெடுக்க வேண்டியிருக்கும். ஆனால் பிராந்திய சக்திகளோடும், அனைத்துலக சக்திகளோடும் மோதுவதற்கு முன்பாக அவர் உள்ளுரில் குறிப்பாக மாற்று அணிக்குள் எல்லாத் தரப்புக்களையும் வென்றெடுக்க வேண்டியுள்ளது. மாற்று அணிக்குரிய தளம் என்பது சிதறிப் போகாமல் பாதுகாக்க வேண்டிய ஒரு முதற் பொறுப்பு உண்டு. அதாவது தனது உத்தேச ஐக்கிய முன்னணிக்குள்ளேயே தன்னுடைய தலைமைத்துவத்தை அவர் எண்பிக்க வேண்டியிருக்கிறது. அவருடைய தலைமைத்துவத்திற்கு வந்திருக்கும் முதலாவது தத்து அது. அதை அவர் எப்படி வெற்றி கொள்ளப் போகிறார்?

கொழும்பில் நிகழ்ந்திருக்கும் ஆட்சி மாற்றம் அவருடைய வழிகளை இலகுவாக்குமா? கடினமாக்குமா? கொழும்பில் கடும் போக்கு வாதிகள் தலையெடுத்தால் வடக்கு கிழக்கிலும் கடும்போக்குடையவர்களே தலையெடுப்பர். இது சில சமயம் சிதறிக் காணப்படும் மாற்று அணியை மீளத் திரட்ட உதவக்கூடும். தமிழ்த் தேசியத் தரப்பை விமர்சிப்பவர்கள் ஒரு விடயத்தை பகிடியாகச் சொல்வதுண்டு. எதிரிதான் தமிழ்த்தேசியத்தின் பலம் என்று. தென்னிலங்கையில் இனவாத சக்திகள் மேலெழும் பொழுது தமிழ் பகுதிகளில் ஐக்கியம் பலப்படும். இனமான உணர்வுகளும் பொங்கி எழும். தென்னிலங்கையில் கடும்போக்குவாதிகள் வீழ்ச்சியுறும் பொழுது தமிழ் பகுதிகளில் அரசியலும் சோர்ந்து விடுவதுண்டு.

மகிந்தவின் மீள் வருகை நீடித்தால் சம்பந்தருக்கும் நல்லது. ஏனெனில் எல்லாத் தோல்விகளுக்கும் அவர் இனவாதத்தின் மீது பழியைப் போட்டு விட்டு அப்பாவித்தனமாக தமிழ் மக்கள் முன் வந்து நிற்பார். அதே சமயம் அது சம்பந்தரை விடவும் விக்னேஸ்வரனுக்குக் கூடுதலாக நல்லது. சிங்களத் தலைவர்களை நம்பிக் கெட்ட ஆகப்பிந்திய தலைவராக சம்பந்தர் வர்ணிக்கப்படுவார். அது விக்னேஸ்வரனை நிரூபிப்பதாக அமைந்து விடும். அதே சமயம் தங்களுக்கிடையே பிளவுண்டு காணப்படும் மாற்று அணியையும் ஒரு மீளிணைவைக் குறித்து சிந்திக்கத் தூண்டும். அதாவது மகிந்த நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பாராக இருந்தால் அது விக்னேஸ்வரனுக்கும் மாற்று அணிக்கும் அதிகரித்த வாய்ப்புக்களைத் திறக்குமா?

No comments:

Post a Comment

Post Bottom Ad