அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல - தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஒரு உயிர்ச்சொல்.
பொ.ஐங்கரநேசன்
அம்மாச்சி என்ற சொல் பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றாலோ அல்லது இடம்பெறாமல் இருந்தாலோ, இதுபோன்ற பாரம்பரிய உணவகங்களை வருங்காலங்களில் திணைக்களங்களோ அல்லது வேறு நிறுவனங்களோ உருவாக்கினாலோ மக்கள் அவற்றை அம்மாச்சி என்றே அழைப்பர். அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஒரு உயிர்ச்சொல் என்று முன்னாள் விவசாய அமைச்சரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
அம்மாச்சி தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:
வடக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் அம்மாச்சி உணவகங்கள் தொடர்பாக அவை தோற்றம்பெற்ற காலப்பகுதியில் விவசாய அமைச்சராகப் பணியாற்றியவன் என்ற வகையிலும், அம்மாச்சி என்ற பெயரை பரிந்துரைத்தவன் என்ற வகையிலும் சில தகவல்களைத் தெரிவிப்பது எனது கடமையாகும்.
தென்னிலங்கையில் மத்திய விவசாயத் திணைக்களத்தினால் 'ஹெல போஜன் சால' என்ற பெயரில் உணவகங்கள் அமைக்கப்பட்டு அவர்களது பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் வடக்கு மாகாணசபை தோற்றம்பெற முன்னரோ அல்லது அதற்குப் பின்னர் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் 2016ஆம் ஆண்டில் அம்மாச்சி உணவகங்களை உருவாக்கும் வரையிலோ இவ்வாறான உணவகங்களை வடக்கில் உருவாக்குவதற்கு மத்திய அரசு முன்வரவில்லை. அவ்வாறு உருவாக்குமாறு மாகாண விவசாய அமைச்சையோ திணைக்களத்தையோ கோரவும் இல்லை. நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவும் இல்லை.
இந்நிலையிலேயே, தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களில் ஒரு கூறாக உள்ள எமது பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்வதற்கான விற்பனைக் கூடங்களை அமைப்பதற்கு வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் தீர்மானித்து அதற்கான பெயராக அம்மாச்சி என்ற நாமமும் சூடப்பட்டது. வெறுமனே வடக்கின் பாரம்பரிய உணவகம் என்று அழைப்பதைவிட இலகுவில் உச்சரிக்கத்தக்க, அதே நேரம் எமது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பெயராக அமைந்தால் மக்கள் மத்தியில் இலகுவில் போய்ச்சேரும் என்பதன் அடிப்படையிலேயே அம்மாச்சி என்ற பெயர் தீர்மானிக்கப்பட்டது.
முதலாவது அம்மாச்சி உணவகம் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முல்லைத்தீவில் திறந்துவைக்கப்பட்டது. அதே ஆண்டில் இரண்டாவது அம்மாச்சி உணவகம் வவுனியாவிலும், மூன்றாவது அம்மாச்சி உணவகம் கிளிநொச்சியிலும், ஐந்தாவது அம்மாச்சி உணவகம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் மன்னாரிலும் திறந்துவைக்கப்பட்டன. இந்த அம்மாச்சி உணவகங்களின் உருவாக்கத்தில் மத்திய அரசாங்கத்தின் நிதி ஒருசதமேனும் பயன்படுத்தப்படவில்லை.
வவுனியா அம்மாச்சி உணவகம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நன்கொடை நிதியிலும், ஏனைய மூன்று அம்மாச்சி உணவகங்களும் மாகாணசபைக்குரிய குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்துமே உருவாக்கப்பட்டன.
நான்காவது அம்மாச்சி உணவகம் திருநெல்வேலியில் அம்மாச்சி என்ற பெயர்ப்பலகை இல்லாமலே 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதல் இயங்கிவருகிறது. பின்விளைவுகள் பற்றி புரிந்துகொள்ளாத விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மத்திய விவசாயத் திணைக்களத்திடம் இருந்து இதற்கான நிதியைப் பெற்றிருந்தனர். இதன் காரணமாக, மத்திய அரசாங்கம் அம்மாச்சி என்ற பெயரைப் பயன்படுத்தாமல் ஹெ போஜன் சால என்ற பெயரையே சூட்டவேண்டும் என்று அடம்பிடித்தனர். விவசாய அமைச்சராக நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
மத்திய அரசாங்கம் சாதாரண அதிர்ஸ்டலாபச் சீட்டுக்கள் தொடங்கி வங்கிக் கணக்குகள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் வரை கொவி செத, தன நிதானய, தருசவிய, அணங்கி, திவிநெகும, நிலமெகவர, ஹம்ரதெலிய என்று சிங்களப் பெயர்களையே தமிழில் ஒலிபெயர்த்து பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு, மத்திய அரசாங்கம் சமூகத்தின் அடித்தட்டு மக்கள்வரை மிக நாசூக்காகச் சிங்களத் திணிப்பை மேற்கொண்டுவரும்போது திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட உணவகம் மத்திய அரசின் நிதிய10ட்டலில் உருவாக்கப்பட்டதாயினும் அது மாகாணத்துக்கானதாகவும், மாகாண விவசாயத் திணைக்கள வளாகத்தில் அமைந்திருப்பதாலும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் பிரதிநிதி என்ற வகையில் ஹெல போஜன் சால என்று பெயர் சூட்டுவதை விடாப்பிடியாக நிராகரித்தேன்.
இதன் பின்னர், வடக்கு மாகாண கௌரவ முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் அப்போதைய மத்திய விவசாய அமைச்சர் கௌரவ துமிந்த திசநாயக்க அவர்கள் தொடர்புகொண்டு ஹெல போஜன் சால என்ற பெயரையே சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். கௌரவ முதலமைச்சர் அவர்கள், வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் வேரூன்றி பிரபல்யம் ஆகிவிட்ட அம்மாச்சி என்ற பெயரை ஹெல போஜன் சால என்ற பெயராக மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்பதை கௌரவ துமிந்த திசநாயக்க அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
மேலும், ஹெல என்பதன் தமிழ்ப்பதம் ஈழம் என்பதன் அடிப்படையில் தேவையாயின் ஈழ உணவகம் என்ற பெயரைப் பயன்படுத்துங்கள் என்றும் தெரிவித்திருந்தார். இதை அடுத்தே திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் அம்மாச்சி என்ற பெயர்ப் பலகை இல்லாமலேயே திறந்துவைக்கப்பட்டது.
அம்மாச்சி என்ற சொல் பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றாலோ அல்லது இடம்பெறாமல் இருந்தாலோ, இதுபோன்ற பாரம்பரிய உணவகங்களை வருங்காலங்களில் திணைக்களங்களோ அல்லது வேறு நிறுவனங்களோ உருவாக்கினாலோ மக்கள் அவற்றை அம்மாச்சி என்றே அழைப்பர். அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஒரு உயிர்ச்சொல்.
பொ.ஐங்கரநேசன்,
வடக்கு மாகாணசபை உறுப்பினர்,
முன்னாள் விவசாய அமைச்சர்.
No comments:
Post a Comment