தனது வீட்டில் இழவு விழவேண்டும் என்றவருக்கு பிபிசி தலைப்பாகை! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 3, 2018

தனது வீட்டில் இழவு விழவேண்டும் என்றவருக்கு பிபிசி தலைப்பாகை!

இப்போது சிலரின் முகநூல் விவாதப் பொருள் : யூட்ரட்ணமும் அவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘ Demons in paradise’ என்பதும்தான்.
நடைபெறவிருக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்படுவதாக பட்டியல்படுத்தப்பட்டிருந்தது பின்னர் திரைப்பட்ட விழா ஒழுங்கமைப்புக் குழுவிலிருந்தவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து குறித்த படத்தை காட்சிப்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது அந்தக் குழுவின் முடிவு. அதனை தீர்மானிப்பதற்கு அந்தக் குழுவிற்கு உரிமையுண்டு. பொதுவாகவே கருத்துச் சுதந்திரத்தின் காவலாளிகள் தாமே என்னும் நினைப்பில் சிலர் வாழ்வதுண்டு. அவ்வாறானவர்கள் சம்பவங்களுக்காக காத்திருப்பதுமுண்டு. அவ்வாறு சம்பவங்களுக்காக காத்திருத்தவர்கள் இதனை ஒரு ஜனநாயக மறுப்பு என்று கண்டித்துள்ளனர்.



ஜனநாயகத்தின் அளவுகோல் என்பது அவரவரது அரசியல் வாழ்வுநிலைச் சூழல் மற்றும் அவர்களது பார்வை தொடர்பானதென்று விளங்கிக் கொண்டால் இதில் விவாதிக்க ஒன்றுமிருக்காது. தமிழ்ச் சூழலில் ஜனநாயகம் என்பது இனத்துவ அரசியல் புரிதலுடன் நோக்கப்படும் ஒன்று. இது தெற்கில சிங்கள இனத்துவ நிலையில் புhந்துகொள்ளப்படுகிறது. மொத்தத்தில் இலங்கையின் ஜனநாயக அரசியல் என்பதே இனத்துவ கண்ணோட்டம் கொண்ட ஒன்றுதான். அந்த இனத்துவ அரசியலுக்கு குந்தகமாக இருக்கலாம் என்று கருதப்படும் விடயங்களை தவிர்ப்பது தொடர்பில் ஒரு முன்னெச்சரிக்கை எப்போதும் நம்மைச் சுற்றி இருக்கவே செய்கிறது. இதன் விளைவுதான் சில விடயங்களை ஜனநாயகம் என்னும் பெயரில் ஏற்றுக் கொள்வதற்கான தயார் நிலை பலரிடம் இல்லை. இதனை கண்டித்து முகநூல்களில் குறிப்பிட்டிருக்கும் நபர்களை நோக்கினால் (அனைவரும் அல்ல) பெரும்பாலானவர்கள் - அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் தொடர்பில் எதிர்மனோபாவம் கொண்டவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளை எதிர்த்து பேசுவது என்பது மட்டும்தான் ஜனநாயகம். அதனை நிராகரிப்பவர்கள் அனைவரும் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள். இதுதான் நான் மேலே குறிப்பிட்ட ஜனநாயகம் தொடர்பான வேறுபட்ட அளவுகோல்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தத் திரைப்படத்தை காட்சிப்படுத்துதல், காட்சிப்படுத்தாமல் விடுதல் இரண்டுமே ஜனநாயகத்திற்கு உட்பட்டதுதான். காட்சிப்படுத்த விரும்புவர்கள் அதனை செய்யலாம் அதனை தவிர்க்க விரும்புவர்கள் அதனை கைவிடலாம். ஆனால் ஒரு கேள்வியும் ஊடறுக்கவே செய்கிறது.

இதே போன்று இராணுவம் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டது என்பதை முன்னிலைப்படுத்தி ஒரு திரைப்படத்தை தெற்கில் காட்சிப்படுத்த முடியுமா? நிச்சயம் முடியாது. ஏனெனில் அங்குள்ள இனத்துவ அரசியல் வரையறை அதனை ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில் இது இனத்துவ அரசியல் பிரச்சினையொன்றின் விளைவு. இன்றுவரை அந்த பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடியதொரு தீர்வை கண்டடைய முடியவில்லை. எனவே இதனை ஜனநாயகப் பிரச்சினையாக விளங்கிக் கொள்ளாமல் இனத்துவ அரசியல் பிரச்சினையாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி விளங்கிக் கொண்டிருந்தால் இது தொடர்பில் விவாதிக்க ஒன்றும் இருந்திருக்காது.

எனக்கு இதிலுள்ள பிரச்சினை வேறு. குறித்த ஆவணப்பட இயக்குனர் அண்மையில் பி.பி.சி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

"When the war was coming to an end, I wanted the [Tamil] Tigers to lose the fight. I wanted it to end, even if my own people had to be killed," Ratnam says.

இதனை பார்த்த போது இவர் ஒரு கலைஞரா என்னும் கேள்விதான் எழுந்தது. அதன் பின்னர் இந்த நபர் தொடர்பில் பேசுவதற்கே ஒன்றுமில்லை என்பது எனது அபிப்பிராயம். இப்படியொரு கருத்தை விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்த மகிந்த, கோத்தபாய ராஜபக்ச போன்றவர்களே கூறியதில்லை. பிரபாகரனின் மரணம் தங்களுக்கு மகிழ்சியை தரவில்லை என்று அண்மையில் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். அதிகார நலன்களை பேணிப்பாதுகாக்க விரும்பும் அவர்களே அவ்வாறு கூறுகின்ற போது, ஒரு கலைஞர் எவ்வளவு மக்கள் செத்தாலும் பரவாயில்லை புலிகள் அழிய வேண்டுமென்று விரும்பினேன் என்று கூறுவது அருவருப்பான ஒன்று. எனவே இப்படியான ஒருவரது ஆக்கத்திற்கு களம் அமைத்துக் கொடுப்பதை தவிர்த்திருக்கும் விழாக் குழுவின் நடவடிக்கையில் எந்தவொரு தவறையும் இப்போது காணமுடியாமல் இருக்கிறது.

எனது சொந்த மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று கூறும் இந்த நபர் அந்த மக்களின் கொலைக்காக நீதி கோரும் அரசியலையும் ஏற்கவில்லை என்பதுதானே பொருள். இப்படிப்பட்ட ஒருவருக்காக களமிறங்குபவர்களின் நிலைப்பாடும் அதுதானா?

விடுதலைப் புலிகள் தொடர்பில் ஒருவரிடம் விமர்சனமிருக்கலாம் ஆனால் அது ஒரு ஒட்டுமொத்த சமூக பொறுப்பிலிருந்து வர வேண்டும். நமக்கு பணம் தரும் எஜமானர்களுக்காக நாம் வலிந்து விமர்சனங்களை புனையும் போது, அதனை எல்லோரும் அனுமதிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கவும் கூடாதுதானே!

ஆனால் இந்தத் தடை, ஒரு அறிமுகமில்லாத நபரையும் அவரது ஆவணப்படத்தையும் தேவையில்லாமல் பிரபலப்படுத்திவிட்டது. இதனால் அந்த நபருக்கு இலாபமே! குறித்த ஆவணப்படத்திற்காக நிதிவழங்கியவர்கள் இன்னும் அதிகமான நிதியை வழங்கக் கூடும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad