TMK இல் இணைய முடியாது - கஜேந்திரன் விளக்கம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, October 25, 2018

TMK இல் இணைய முடியாது - கஜேந்திரன் விளக்கம்!!

கொள்கையில் திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் எப்படி கூட்டணி அமைக்க முடியும்?

கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக அவருடன் இணைந்து பணியாற்றி நாங்கள் தயாராக இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் நேற்று(புதன்கிழமை) புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.

இந்த கட்சி அறிவிப்பு கூட்டம் நல்லூர் ஆலய சுற்றாடலிலுள்ள நடராசா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை.

இந்தநிலையில் இது குறித்து ஊடகவியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட வினாக்களுக்கு பதில் வழங்கும் போதே செ.கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள். அதனை நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அந்த ஒற்றுமை என்பது கொள்கை ரீதியான ஒற்றுமையாக அமைய வேண்டுமே தவிர கண்ணை மூடிக்கொண்டு எல்லோரும் ஒன்றாக சேருவதல்ல.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தளவில் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய காலம் தொடக்கம் கொள்கை ரீதியான ஒன்றுமை என்பதில் உறுதியாக இருக்கின்றது. முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கட்சி விடயத்திலும் அதுவே நடந்திருக்கின்றது.

குறிப்பாக முன்னாள் முதலமைச்சருடைய தரப்பினர் தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்துகொள்வது தொடர்பாக எங்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்கள். அப்போது நாங்கள் கூறிய விடயம் தமிழ் மக்கள் கூட்டணியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் இருப்பாராக இருந்தால் குறிப்பாக கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கும் நிலையில், இருப்பாராக இருந்தால் அவ்வாறான கூட்டணியில் இணைந்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை.

அவ்வாறு நாங்கள் கூறியதற்கு நியாயம் இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு அவ்வாறான கருத்தை நாங்கள் கூறவில்லை. அல்லது ஒற்றுமையை விரும்பாமல் அவ்வாறான கருத்தை நாங்கள் கூறவில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் இணைந்து உள்ளுராட்சிசபை தேர்தலில் ஒரு ஆக்க பூர்வமான கூட்டினை உருவாக்க முயற்சித்தபோது அதனை அவர் குழப்பினார்.  இதனால் எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூட்டணி அமைப்பதில்லை என்பது எமது கட்சியின் தீர்மானம்.

அது ஒருபக்கம் இருக்க சுரேஸ் பிரேமச்சந்திரனின் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து இன்றளவும் விலகவில்லை.  மறுபக்கம் நெடுங்கேணி பிரதேசசபை, வவுனியா நகரசபை போன்ற இடங்களில் அரச கட்சிகளுடனும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷதரப்புடனும் கூட்டிணைந்துள்ளது.

இதற்கும் மேலாக தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனும், அவருடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு என்னவெல்லாம் செய்கிறதோ அதனையே சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்றளவும் செய்து கொண்டிருக்கின்றார். எனவே சுரேஸ் பிறேமச்சந்திரனும் இருக்கும் ஒரு தரப்புடன் நாங்களும் ஒற்றுமை வேண்டும் என இணைந்து கொள்வோமேயானால் அது போலியான ஒற்றுமை மட்டுமே" என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad