நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்றிரவு 7.30 மணியளவில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகுவதற்கு நேற்று மாலை முடிவு செய்திருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய முன்னணியின் உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் தீர்மானித்தனர். இதனையடுத்தே முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.
பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பதவியேற்றுள்ள நிலையில் புதிய அமைச்சரவை இன்னும் சில தினங்களுக் குள் பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் புதிய அமைச்சரவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
புதிய பிரதமர் பதவியேற்றுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் புதிய அரசாங்கமானது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே புதிய பிரதமர் தலைமையிலான அரசாங்கம் நீடிக்க முடியும். இதற்கான நடவடிக்கைளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு அவசரமாகக்கூடி இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். அலரிமாளிகையில் நேற்றிரவு 9.30 மணியளவில் இந்தக்கூட்டம் ஆரம்பமாகி நள்ளிரவுவரை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் பெருமளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். கூட்டதையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதனையடுத்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.பிரதமராக தானே பதவியில் நீடிக்கின்றேன். அரசியல் யாப்புக்கு இணங்க நானே செயற்படுவேன் என்று ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் இல்லத்தில் நேற்று மாலை அவரின் தலைமையில் , அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமைச்சர்களின் கூட்டம் நடைப் பெற்றது. இதில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 24 பேரும் கலந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறினார்.
இதன்போதே அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து ஏகமனதாக தீர்மனைக்கப்பட்டு அந்த தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தின் போது, ஜனாதிபதியைக் கொலை செய்ய இடம்பெறும் சதி முயற்சி குறித்தும் அதனை கண்டுகொள்ளாமல் ஐக்கிய தேசிய கட்சி நடந்துகொள்வது தொடர்பிலும் பல அமைச்சர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைவிட நாட்டில் தொடர்ச்சியாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலைமை, அரசாங்கத்தின் முரண்பாடுகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களும் அதுசார்ந்த தீர்வுத் திட்டங்களின் போது ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் எதேச்சதிகாரமாக செயற்படுவது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனைவிட நாட்டின் சட்ட மா அதிபர் திணைக்களம் கூட ஜனாதிபதி விடயத்தில் மாற்றமாக செயற்படுவதாகவும் , பொலிஸ் துறையிலும் பாரிய குழப்ப நிலை நிலவுவதாகவும் இதன்போது ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தைவிட்டு வெளியேற ஏகமனதாக அங்கீகாரம் வழங்கினார்.
அதனையடுத்தே அது குறித்து சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதுடன், உடனடியாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்தே அவர் புதிய பிரதமராக பதவியேற்றார்.
புதிய பிரதமராக பதவியேற்கும் போது மஹிந்த ராஜபக்ஷ , இலங்கை சோஷலிஷ ஜனநாயக குடியரசின் அரசியலமைப்புக்கு அமையவும் அதனை பாதுகாக்கும் வண்ணமும் செயற்படுவதாக உறுதியளித்து சத்தியப் பிரமாணம் செய்தார். இதனைவிட, நாட்டுக்குள் வேறு ஒரு நாட்டை உருவாக்கும் செயற்பாடுகளுக்கோ, அது குறித்த நடவடிக்கைகளுக்கோ, நிதி வழங்கல் செயற்பாடுகளுக்கோ நாட்டுக்குள்ளும் வெளியேயும் எந்தவகையிலும் உதவி ஒத்தாசை செய்யப் போவதில்லை எனவும் சத்தியப் பிரமாணம் செய்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும் போது, அமைச்சர்களான மஹிந்த அமர வீர, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க, சுசில் பிரேம ஜயந்த, ஜனக பண்டார தென்னகோன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றதும் ஜனாதிபதி மைத்திரியுடன் விஷேட சந்திப்பொன்று உடனடியாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது புதிய அமைச்சரவை மற்றும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து விஷேடமாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் கேசரிக்கு வெளிப்படுத்தின. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.
கடந்த இருவாரங்களுக்கு முன்னர் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் பின்னணியிலேயே தற்போது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலையடுத்து ஐக்கிய தேசியக்கட்சியும் சுதந்திரக்கட்சியும் இணைந்த நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றிருந்தது.
மூன்று வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதுடன் புதிய அமைச்சரவையும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment