மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூட்டணியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து ஐக்கியதேசிய கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் முடிவிற்கு வந்தது. இதன் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் தோள்களில் சுமத்தப்பட்டது.புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடன் பிரதம மந்திரி பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இலங்கை இன்று நிச்சயமற்ற நிலையில் காணப்படுகின்றது. ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்த தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.இந்த சதி முயற்சியில் ஈடுபட்டவர்கள் தங்கள் நடவடிக்கைகளால் தங்களை அம்பலப்படுத்துகின்றனர்.நாடு தொடர்ச்சியாக குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதள உலகத்தவர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.இலங்கை ரூபாயின் பெறுமதி அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் வீழ்ச்சியடைகின்றது.அதிகரித்துக்கொண்டு செல்லும் வாழ்க்கை செலவீனங்களால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.ஐக்கியதேசிய கட்சியின் மத்திய வங்கி பிணை முறி மோசடி வட்டி வீதத்தை இரட்டிப்பாக்கியுள்ளதால் வர்த்தக சமூகத்தினரும் சாதாரண பொதுமக்களும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.இதேவேளை ஐக்கியதேசிய கட்சி தேசத்தின் பெறுமதி மிக்க சொத்துக்களையும் நிறுவனங்களையும் விற்கும் வேட்கையுடன் உள்ளது.
இது தேசிய குழப்பநிலை நிலவும் தருணம் என்பதையும் மக்கள் எங்கள் தலைமைத்துவத்தையும் பாதுகாப்பையும் எதிர்கொள்கின்றார்கள் என்பதையும் நான் அறிவேன்.
இதன் காரணமாக பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.நாங்கள் வெறுப்புணர்வு நிலவும் அரசியலை கைவிட்டு அனைத்து மக்களினது மனித உரிமைகளையும் நீதித்துறையினது சுதந்திரத்தையும் பாதுகாக்கும் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தும் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவோம்.இந்த முயற்சியில் எங்களுடன் இணையும் நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிற்கும் நான் அழைப்புவிடுகின்றேன்.இந்த மிக முக்கியமான முயற்சியில் அனைத்து சமூகங்களையும்மதங்களையும் இணையுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
என்னுடன் இணைந்துகொண்டுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நோக்கம் தொடர்ச்சியா பிற்போடப்பட்டுவரும் மாகாணசபை தேர்தல்களையும் .மேலும் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சமூக பொருளாதார அரசியல் நெருக்கடிகளிற்கு முடிவு கட்டுவதற்கான திட்டத்திற்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பை மக்களிற்கு வழங்குவதற்காக நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துவதாகும் என தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment