வடக்கில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு நாம் விரிவான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல் வெளியில் இடம்பெற்ற தேசிய ஏர்பூட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டின் பொருளாதார கொள்கையில் காணப்படும் தவறுகள் காரணமாக எமது மரபுரிமைகள் சிதைவடைகின்றன. கலாசாரம் அளிக்கப்படுகின்றது. பல காலமாக எமது தேவைக்கான உணவினை நாமே உற்பத்தி செய்துகொண்டது மாத்திரமன்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம் என்பதை நாம் அறிவோம்.
மஹிந்த அமரவீர விவசாய அமைச்சராக இருப்பதை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் கடந்த ஒரு சில மாதங்களுக்குள் புதிய தொழிநுட்பத்துடன் விவசாயத்துறையில் அபிவிருத்தியை ஏற்படுத்த அவரிடம் காணப்பட்ட ஆர்வத்தினை நான் அவதானித்தேன். விவசாயம் பற்றிய புதிய எண்ணக்கருக்களுடன் அவர் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார். மஹிந்த அமரவீர விவசாயத்துறை அமைச்சிற்கு பொருத்தமான விவசாயம் பற்றிய புரிந்துணர்வுடைய அறிவும் அனுபமும் உள்ள சிறந்தவொரு விவசாயி ஆவார் என நான் நினைக்கின்றேன்.
மதிப்பிற்குரிய மகா சங்கத்தினரதும் சர்வ மதத் தலைவர்களினதும் ஆசிகளுடன் எமது மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் விவசாயிகளுடன் இணைந்து இன்றைய தினம் இந்த தேசிய ஏர்பூட்டு விழாவை தாய் நாட்டின் பசியை போக்கி, தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் எதிர்பார்ப்புடன் நடத்துகின்றனர்.
உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய புதிய உணவு கலாசாரத்தினைக் கட்டியெழுப்ப எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
இந்த செயற்பாட்டில் விவசாயிகளை பலப்படுத்த தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் வழங்குவோம்.
எமது நாடு வடக்கிலிருந்து கிழக்கிற்கும் மேற்கிலிருந்து தெற்கிற்கும் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் பயிர்செய்யக்கூடிய ஒரு புண்ணிய பூமியாகும். இந்த புண்ணிய பூமியின் மதிப்பினை உணர்ந்து அதற்கு உகந்தவாறு பொருளாதார திட்டங்களை நாம் தயாரிக்க வேண்டும். பொருத்தமான உணவுக் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த புண்ணிய பூமிக்கு பொருத்தமானவாறு பொருளாதார கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தயாரிக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேல் பழமையான தொழிநுட்ப அறிவு, விஞ்ஞான ரீதியான அறிவு, விவசாயம் பற்றிய அனுபவ முதிர்ச்சி ஆகியவற்றினால் பரிபூரணமடைந்த தேசத்திலேயே தற்போது நாம் வாழ்கின்றோம். இந்த புண்ணிய பூமியை விவசாயப் பொருளாதாரத்தின் ஊடாக பலப்படுத்தும் அதேவேளை ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகிய அனைத்தையும் நாம் பலப்படுத்த வேண்டும்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக தேர்தல் ஆணைக்குழுவுடன் நாளை அல்லது நாளை மறுதினம் கலந்துரையாடி மிக விரைவில் மகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் பலமடையும்.
அத்துடன் வடக்கில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு நாம் விரிவான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
2015 ஆம் ஆண்டு முதல் சுமார் நான்கு வருடங்களாக அமைச்சரவை வடக்கில் வீடமைப்பதைப் பற்றி கலந்துரையாடியது மட்டுந்தான். கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு கடன், வெளிநாட்டு உதவிகளை எந்த அமைச்சர் பயன்படுத்துவது? யாருக்கு கீழ் இதனை மேற்கொள்வது? என்ற கயிறு இழுப்பே மூன்றரை வருடங்களாக இருந்து வந்தது. இந்த பொறுப்புகளை வகித்தவர்கள் அந்த மக்களின் வீடுகளையாவது அமைத்துக் கொடுக்கவில்லை.
எனவே வடக்கு, தெற்கு என்பதல்ல எமது பிரச்சினை. நாடு என்ற வகையில் உள்ள பிரச்சினைகளில் மக்களின் பிரச்சினை என்ன என்பதும் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதுமேயாகும். அனைத்து மனிதர்கள் மீதும் ஒன்றுபோல் அன்பு பாராட்டுவதன் மூலமும் ஒருவரையொருவர் மதித்து ஏற்றுக்கொள்வதன் மூலமும் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து இந்த நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அரசாங்க அதிகாரிகள், அனைத்து சமய தலைவர்கள் நாட்டின் அனைத்து பிரஜைகள் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் நாம் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பேதங்களை மறப்போம், பொதுசொத்துக்கள் அரசாங்க சொத்துக்களை பாதுகாப்போம், அரசாங்கம் ஒன்று மாறி புதிய அரசாங்கம் வருகின்றபோது அரசியல் தலைவர்கள் போன்று அரசாங்க அதிகாரிகளும் மாறுகின்றனர். அதில் எந்தவொரு வளத்திற்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படக் கூடாது. ஒரு சட்டைப் ஊசி கூட சேதமாகினால் அதன் மூலம் மக்களே பாதிப்படைவர்.
எனவே நாம் சட்டத்தை மதித்து ஒழுக்கப் பண்பாட்டுடனும் மனித நேயத்துடனும் முன்னேறும் புதிய அரசாங்கம் என்ற வகையில் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். எமது தாய் நாட்டுக்காக இன்று வாழ்கின்ற மக்களை போன்று நாளை பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்காகவும் எமது பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவோம் என்று நான் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment