மாகாண சபை தேர்தலை பிற்போட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பறிப்பது மிகவும் மோசமான செயலென பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடக்கில் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக தானே முடிவெடுப்பதாக ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்ததாகவும், இது மிகவும் பாரதூரமான செயலென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் செயலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
"இந்த அரசாங்கம் ஜனநாயக விழுமியங்களை மீறிச் செயற்பட்டது. ஒரு நாட்டின் மக்களுடைய விருப்பை பிரதிபலிப்பதே தேர்தல். அதனையும் நடத்தாமல் பிற்போட்டது. ஆறு மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துவிட்டது. இவற்றில் மூன்றின் பதவிக்காலம் நிறைவடைந்து ஒரு வருடத்திற்கு மேலானது. இதனை ஏற்க முடியாது.
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில், வடக்கில் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக தானே தீர்மானிப்பதாக குறிப்பிட்டார். இது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செய்யவேண்டிய விடயத்தை அரசாங்கத்தின் பிரதிநிதியாக செயற்படும் ஆளுநர் முன்னெடுக்கப் பார்ப்பது பாரதூரமானது.
அத்தோடு, ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கொலைச் சதித்திட்டம் தொடர்பான விடயத்தை அரசாங்கம் கையாண்ட விதம் மிகவும் மோசமானது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் இவ்வாறான விடயத்தை இதற்குமுன்னர் கண்டதில்லை. நாட்டின் ஜனாதிபதிக்கே இவ்வாறென்றால் மக்களின் நிலை எவ்வாறு அமையும்? அதனடிப்படையில் பார்த்தால் தற்போதைய பிரதமர் நியமனம் ஏற்புடையதே.
இதேவேளை, ஐ.நா. அமைதிப்படையிலிருந்து கேர்ணல் அமுனுபுரவை திருப்பியழைக்க உத்தரவிடப்பட்டமை தனக்கு கிடைத்த வெற்றியென யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார். ஒரு அரச சார்பற்ற நிறுவனம் இவ்வாறு குறிப்பிட்டமை நாட்டின் இராணுவத்திற்கு அவப்பெயர். எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் இவ்வாறு கூறமுடியாது. எமது அரசாங்கம் இருந்திருந்தால் கேள்வி எழுப்பியிருப்போம்.
இதேவேளை, ஐ.நா. சாசாசனங்களை மதித்து செயற்படுவதாகவும் எமது பிரச்சினைளை நாட்டிற்குள் தீர்த்துக்கொள்ள இடமளிக்குமாறு ஜனாதிபதி ஐ.நா.வில் கூறியிருந்தார். அதனை நாம் பின்பற்றுவதோடு, இனிவரும் காலத்தில் எமது செயற்பாடுகள் தொடர்பாக அறிவிப்போம்" என்றார்.
No comments:
Post a Comment