ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, October 13, 2018

ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்

1997ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் நினைவுகூரல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“மகாத்மா காந்தி ஆரம்பித்த உண்மை மற்றும் ஒத்துழையாமையை அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரக போராட்டத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, 1977ஆம் ஆண்டில்,  தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அகிம்சைப் போராட்டத்தை  முன்னெடுத்திருந்தால், சிறிலங்காவில் ஆயுதப் போராட்டத்தை தடுத்திருக்கலாம்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக 1977இல் அவர்கள் வன்முறையற்ற போராட்டத்தில் ஈடுபடாமல் போனது மிகப் பெரிய தவறு.
அப்போது நாடாளுமன்றத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் வலுவாக இருந்தது. வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
1977 ஆம் ஆண்டை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அப்போது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐதேக அரசாங்கம் பதவியில் இருந்தது.
அப்போது, காந்தி கற்றுக் கொடுத்த, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, போன்ற அகிம்சை வழியில் செயற்பட்டிருந்தால்,  இந்த நாட்டில் ஒரு ஆயுதப் போராட்டத்தை நாம் தடுத்திருக்க முடியும்.
நாம் அதை செய்திருந்தால், வன்முறை இன்றி எமது பிரதேசங்களில் சுயாட்சியை வென்றிருக்க முடியும்.
இந்த நாட்டில் மீண்டும் ஒரு வன்முறை ஏற்படாது என்பது எனது நம்பிக்கை.
சிறிலங்கா அரசாங்கம்  தேசியப் பிரச்சினைக்கு சரியான தொரு தீர்வை வழங்கும் கடமையை நிறைவேற்றத் தவறினாலும் கூட, தமிழ் மக்கள் மகாத்மா காந்தியின் போதனைகளின் அடிப்படையில், வன்முறையின்றி தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad