டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு தவறும் பட்சத்தில் அரசாங்கத்திற்கான ஆதரவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று காலக்கெடு விதித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 10ஆவது தேசிய மாநாட்டின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினருக்கான செலவினங்கள் என்பது தமிழ், முஸ்லிம் மக்கள் மாத்திரமில்லாமல் சிங்கள மக்களையும் பாதிக்கும் வகையில் தேசிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்படுவதையும் கருத்திற் கொண்டு எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ இயக்கத்தின் 10ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பு அமொிக்க மிசன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டிலேயே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவை வருமாறு,
அரசியல் தீர்வுத்திட்டமொன்றினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் அளிக்கப்பட்டு வரும் ஆதரவினை முடிவுறுத்த வேண்டும்
தமிழினத்தின் தாயகத்தில் யுத்தம் முடிவுறுத்தப்பட்டு 9 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் நியாயமான காரணங்கள் எதுவுமின்றி வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட அரச படையினர் ஆக்கிரமித்து நிலை கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மீண்டும் பிரகடனப்படுத்தி படைக்குறைப்பு என்பது திட்டவட்டமானதும் நீதியானதுமான கால வறையறைக்குள் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி 1981ஆம் ஆண்டில் இருந்த நிலைக்கு படைகளின் பிரசன்னத்தை மட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் வட கிழக்கில் அரச படைகள் தொடர்ந்து பாரிய எண்ணிக்கையில் ஆக்கிரமிப்பு படைகளாக நிலை கொண்டிருப்பதையும் பாதுகாப்பு படையினருக்கான செலவினங்கள் என்பது தமிழ், முஸ்லிம் மக்கள் மாத்திரமில்லாமல் சிங்கள மக்களையும் பாதிக்கும் வகையில் தேசிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்படுவதையும் கருத்திற் கொண்டு எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கக் கூடாது எனவும் இம்மாநாடு கோருகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் 107 போ் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்து முற்றாக நீதி விரோதமானது என்பதை சுட்டிக்காட்டுவதோடு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 12000க்கு மேற்பட்ட தமிழ் கைதிகளுக்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ததையும் இதே சூழ் நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதிலே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பல் வேறு சாட்டுக்களை தொிவித்து மனிதாபிமானமின்றி இப் பிரச்சினைகளை கையாள்வதைக் கண்டிப்பதோடு காலதாமதமின்ற எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்த மாநாடு அரசாங்கத்தைக் கோருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வௌியே நின்று செயற்பட்டு வரும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு ஒரே அணியாக செயற்படுவதன் மூலமே ஒன்றுபட்ட தமிழ் தேசிய அரசியல் பலத்தின் ஊடாக எம்மினத்தின் குறிக்கோளான அரசியல் சுதந்திரத்தை வென்னெடுக்க முடியும் என்பதை வலியுறுத்தியும் இலங்கை தீவின் அரசியல் தீர்வாக ஒறறுமை என்ற கட்டமைப்புக்குள் உறுதியானதும் இறுதியானதுமான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாய தேவைகளை கருத்திற் கொண்டு அத்தகைய அரசியல் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஒரே அணியாக அணி திரள முன் வருமாறும் தமிழ் தேசியத்தினை முன் நிறுத்தி நிற்கும் சகல அரசியல் கட்சிகள் சமூக அமைப்புக்களையும் இந்த மாநாடு அறை கூவி அழைக்கின்றது.
மேலும் நியாயமானதும் யதார்த்த புர்வமானதுமான கால வரையறைக்குள் எம்மினத்தின் அரசியல் தீர்வாக ஒருமைப்பாட்டுக்குள் பெவன்றெடுக்க சாத்தியமில்லாத விடத்து எமது பிரச்சினையை உலக அரங்கின் முன் சமர்ப்பித்து தனித் தமிழ் தேசிய இனம் என்ற அடிப்படையில் எம்மினத்தின் பிறப்புரிமையான சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் உலக நாடுகளின் மன்றமான ஐக்கிய நாடுகள் சபையில் சர்வஜன வாக்கெடுப்பை வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் வௌிநாடுகளுக்கு சென்று அங்கு வாழும் தமிழர்கள் மத்தியிலும் நடத்த வேண்டும் என்ற அரசியல் தீர்மானத்தை செலாக்க அனைத்து தமிழ் தேசிய சக்திகளும் முன் வரவேண்டும் என்றும் இம் மாநாடு தீர்மானிக்கின்றது.
போர்க்குற்ற விசாரணை விடயத்தில் தமிழ் இனத்தின் தரப்பில் எந்த விதமான விட்டுக் கொடுப்புக்கோ சமரசத்திற்கோ இடமில்லை என்பதை திட்டவட்டமாக தொிவித்து இத் தேசிய மாநாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கை ஏற்றுக் கொண்ட கடப்பாடுகளையும் பொறுப்புக்களையும் காலம் கடத்தாமல் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றம் வலியுறுத்தி உறுதிப்படுத்த வேண்டும்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாடுகளை ஏற்றுக் கொண்ட தீர்மானத்தை அமுல் படுத்த தவறுமிடத்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்று இம்மாநாடு ஐக்கிய நாடுகள் சபையை கோருகின்றது என்ற தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், உப தலைவர்களான பிரச்சனா இந்திரகுமார், ஹென்ரி மோகன், பொருளாளர் கோவிந்தன் கருணாகரன் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் தவிசாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment