சிவசக்தி ஆனந்தனுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பத்து மாதங்களுக்கும் மேலாகப் பேச்சுரிமை மறுப்பு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கூட்டமைப்பில் இருந்து விலகியதால் இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனித்து செயற்படுகின்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அவர் எதிர்கட்சி வரிசையில் தனித்து இயங்கி வருகின்றார்.
இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் அவருக்கு உரையாற்றுவதற்கான நேரத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழங்க மறுத்துள்ளது. இது தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் நான்கு தடவைகள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சிறப்புரிமைப் பிரச்சனையை முன்வைத்து தனக்குரிய நேர ஒதுக்கீடு தொடர்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக சபாநாயகர் கருஜெயசூரிய நடவடிக்கை எதையுமே எடுக்கவில்லை.
இதனால், விவாதங்களின்போது தனக்கு உரையாற்ற இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் பத்து மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்ற விவாதங்கள் எதிலும் தான் உரையாற்ற முடியவில்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் கடந்த வியாழக்கிழமையும் இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை மீண்டும் முன்வைத்திருந்தார்.
இலங்கை நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள உறுப்பினர்களுக்கு உரையாற்றுவதற்கான நேரத்தை ஒவ்வொரு கட்சிகளின் நாடாளுமன்றக்குழுத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துடன் இணைந்து நேரத்தைப் பகிர்ந்து ஒதுக்குவார்.
அதேபோன்று அரசாங்கத்தரப்பில் உள்ள உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் பிரதம கொறடாவும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து நேரத்தை பகிர்ந்து ஒதுக்குவார்கள்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியில் உள்ள உறுபினர் ஒருவர் தான் சார்ந்த கட்சியில் இருந்து விலகி நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையிலேயே தனித்துச் செயற்பட்டால், அவருக்குரிய நேரத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒதுக்க வேண்டும்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் பதவி வகிக்கின்றமையினால், சிவசக்தி ஆனந்தனுக்கு நேரத்தை ஒதுக்கும் விடயத்தில் அரசியல் பழிவாங்கல் இடம்பெறுவதாக ஈபிஆர்எல்எப் குற்றம் சுமத்தியுள்ளது.
சிவசக்தி ஆனந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி எதிர்க்கட்சி வரிசையில் தனித்து செயற்படும்போது அவருக்குரிய நேர ஒதுக்கீட்டை சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வழங்க வேண்டும்.
ஆனால், இங்கே, சிவசக்தி ஆனந்தன் விவகாரத்தில், சம்பந்தன், எதிர்கட்சித் தலைவராக அல்லாமல். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவராகவே செயற்படுகின்றார்.
இது தொடர்பாக மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சபை அமர்வின்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் சட்டத்தரணி சுமந்திரன், தினேஸ் குணவர்த்தன கூறியதை உடனடியாகவே மறுத்தார்.
சிவசக்தி ஆனந்தன், பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்றும், ஆகவே அவர் தமிழரசுக் கட்சியை மைய்யப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குரிய ஒழுக்க விதிகளுக்கு அமைவாகவே நாடாளுமன்றத்தில் அவர் செயற்பட வேண்டும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
எனினும் அதற்கு எதிராக விளக்கமளித்த தினேஸ்குணவர்த்தன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 96 உறுப்பினர்களில் 74 உறுப்பினர்கள் கூட்டு எதர்க்கட்சியாக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் அவர்கள் உரையாற்றுவதற்கான நேர ஒதுக்கீட்டை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இதே கருத்தை கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தனவும் கூறியிருந்தார். ஆகவே சிவசக்தி ஆனந்தன், சட்டமூல விவாதங்களில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரு குரலில் வலியுறுத்தனார்கள்.
இந்த நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரிய நடவடிக்கை எடுப்பாதாக உறுதியளித்துள்ளார். ஆனால் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சுமந்திரன் விசுவாசமானவர் என்ற காரணத்தின் அடிப்படையில், சிவசக்தி ஆனந்தனுக்கு உரையாற்ற நேரம் ஒதுக்கும் விடயத்தில், அரசாங்கம் தயங்ககுவதாக ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
2001ஆம் ஆண்டு சந்தரிக்கா தலைமையிலான அப்போதைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பந்துலகுணவர்த்தன உட்பட எட்டு உறுப்பினர்கள் விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க, அவர்கள் உரையாற்றுவதற்குரிய நேரத்தை வழங்கியிருந்தார்.
2005 ஆம் ஆண்டு ஜே.வி.பியில் இருந்து விமல் வீரவன்ச விலகியபோது அவர் உரையாற்றுவதற்கான நேரத்தை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க வழங்கியிருந்தார்.
2018 ஆண்டு மே மாதாம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேர் விலகி எதிர்க்கட்சி வரிசையில் இருந்தனர்.
அவர்கள் உரையாற்றுவதற்கான நேர ஒதுக்கீட்டை தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சம்பந்தன் வழங்கியிருந்தார்.
அதுவும் 16 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த உறுப்பினர்கள்.
ஆகவே ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் தனித்துத் செயற்பட்டால் இலங்கை நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்குரிய நேர ஒதுக்கீட்டை சபாநாயகரின் அனுமதியுடன் எதிர்க்கட்சியோ அல்லது அரசாங்கத்தரப்போ வழங்க வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால், சிவசக்தி ஆனந்தன் விவகாரத்தில். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படாது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக செயற்படுகின்றார் என கூட்டு எதிர்க்கட்சி வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியுள்ளது.
சிவசக்கதி ஆனந்தனுக்கு நேரம் ஒதுக்காமல் சம்பந்தன் தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவிக்கும் நிலையில், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமாகவே செயற்படு வருகின்றார்.
ஒரு உறுப்பினரின் பேச்சுரிமைக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களின் ஆதரவையும் ஏன் இழக்க வேண்டும் என்று கருதியே ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாக சிவசக்தி ஆனந்தன் கூா்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
அதேவேளை, சிவசக்தி ஆனந்தனுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி குரல் கொடுத்துள்ளமை ஜனநாயக வேடிக்கை என அவதானிகள் கூறுகின்றனர்.
இதே கூட்டு எதிர்க்கட்சிதான் 2009 ஆம் ஆண்டு இல்்ங்கையில் ஆட்சியில் இருந்தபோது இன அழிப்புப் போரை நடத்தியிருந்தது. ஆகவே சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இல்ங்கை நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டு சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பை நியாயப்படுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர், கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் கொழும்பில் நடத்திய விளக்கச் செயலமர்வில் சிவசக்தி ஆனந்தன் பங்குபற்ற்வில்லை.
இதனால், அன்றில் இருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் ஈபிஆர்எல்எப் முரண்பட்டு, கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment