கூட்டமைப்பு இப்போது கிங்-மேக்கரா அல்லது கிங்-ஜோக்கரா?
சிங்கள அதிகார மோதலில் இருந்து விலகிநிற்பது என்பதும், நடுநிலை வகிப்பது என்பதும் ஒன்றல்ல. ஆனால் இப்போது கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு சிங்கள அதிகார மோதலில் நேரடியாக பங்குகொள்ளும் முடிவாகும். இந்த முடிவு நிச்சயமாக தமிழ் மக்களின் நலன்களுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஏனெனில், தற்போது தங்களுக்குள மோதிக்கொள்ளும் இரண்டு அதிகார தரப்புக்களும் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகள் எதனையும் ஏற்றுக்கொண்டதில்லை. பின்னர் எதற்காக கூட்டமைப்பு ஒரு தரப்பை பாதுகாக்க முயற்சிக்கிறது?இந்த அதிகார மோதலில் பங்குகொள்ளும் போது, சிங்கள தரப்பில் எவர் வெற்றிபெற்றாலும் கூட்டமைப்பிற்கான அரசியல் இடைவெளி இல்லாமல் போய்விடும். ஒரு வேளை ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றாலும் கூட, அதன் பின்னர் மகிந்த தரப்பின் குறுக்கீடுகளை காரணம் காட்டியே அனைத்து விடயங்களையும் ரணிலால் பிற்போடலாம். அதுதான் நடக்கவும் செய்யும். பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை இருந்த போதிலும் கூட, மைத்திரி, ரணிலுக்கு ஒத்துழைக்க தயாராக இருந்த போதிலும் கூட, மகிந்தவை காரணம் காட்டியே அனைத்து விடயங்களையும் பிற்போட்டு வந்தனர். சந்தர்ப்பங்கள் இருந்த போதே, கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத ரணில், இனியா கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு தலைசாய்ப்பார்?
இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டுதான், கடந்த பத்தியில், சம்பந்தன் இந்த சிங்கள அதிகார மோதலிலிருந்து விலிகி நிற்க வேண்டுமென்று இந்த பத்தியாளர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சம்பந்தன் மீண்டும் தனது தவறான முடிவுகளின் வழியாகவே பயணிக்க விரும்பியிருக்கிறார். கூட்டமைப்பின் தீர்மானம் அதனையே காண்பிக்கிறது. அண்மையில் கலாநிதி.சந்திரசேகரன், தெற்காசிய ஆய்வாளர்கள் குழாம் இணையத்ததளத்தில்,இலங்கையின் அரசியல் கொந்தளிப்புக்கள் தொடர்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் ஒரு இடத்தில், சம்பந்தன் தனது பழுத்த வயதில் ஒரு தரப்பிற்கு எதிராக இன்னொரு தரப்பிற்கு ஆதரவாக செயற்படும் தவறை செய்யமாட்டார் என்று நம்புகிறேன் என்று எழுதியிருக்கிறார். சந்திரசேகரன், இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில், றோவின் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர். ஆனால் சந்திரசேகரன் ஒரு வேளை சம்பந்தன் தொடர்பில் சரியான தகவல்களை பெறாமல் இருந்திருக்கலாம் ஏனெனில் சம்பந்தன் கடந்த சில வருடங்களாக தவறுகளை மட்டுமே செய்துவருகிறார். தவறு செய்வதிலும் பின்னர் அதற்கு காரணம் சொல்வதிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே! ஆனால் சம்பந்தன் தனது சொந்த நலன்களுக்காக செய்துவரும் ஒவ்வொரு தவறுகளும் தமிழர்களின் அரசியல் இருப்பை மேலும் பலவீனப்படுத்திவருகிறது என்பதுதான் உண்மை. அந்த வகையில் பார்த்தால், சம்பந்தனின் முடிவானது, சித்தார்த்தன் எண்ணுவது போன்று, கூட்டமைப்பை ஒரு கிங்-மேக்கராக முன்னிறுத்தவில்லை மாறாக கிங்-ஜோக்கராகவே முன்னிறுதிருக்கிறது.
No comments:
Post a Comment