மக்காவுக்கு தனது எம்பிக்களை அழைத்துச்சென்ற ஹக்கீம்: பின்னணி இதுதான் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, November 8, 2018

மக்காவுக்கு தனது எம்பிக்களை அழைத்துச்சென்ற ஹக்கீம்: பின்னணி இதுதான்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் சட்டபூர்வமாக கட்சித் தலைவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்து தீர்மானம் எடுப்பதாயின் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், கட்சிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு சுமூகமாக தீர்வுகாண முடியாது. உரிய முறையில் நம்பகத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் ஊடாகவே சரியான தீர்வை காணலாம்.

புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புனித மக்காவுக்கு சென்றனர்.

நேற்று (07) இரவு கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித மக்காவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது அரசியல் நெருக்கடி தோன்றியுள்ள நிலையில் இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சினையை ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதுமாத்திரமல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பவர்கள், இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொண்டு, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

புதிய ஆட்சி மாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே கட்சி தொடர்ந்து இருந்துவருகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முன்னைய சந்தர்ப்பங்களில் இருந்துள்ள காரணத்தினால், அவருடன் மீண்டும் ஒத்துழைக்க வேண்டும் என கூறுவது நியாயமாகாது. அது எமது கட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனை எங்களால் செய்ய முடியாது.

அத்துடன் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, வேறு எவருடனும் கூட்டுச் சேர்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் மார்க்க கடமைகளுக்காக சென்றது இல்லை.

இப்படி இருக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மகிந்த பக்கம் யாரும் தனது கட்சி உறுப்பினர்கள் ஓடி விடுவார்கள் என்ற அச்சத்திலும் மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் வருவதாக கூறிய சூழலில் நேற்று முன்தினம் யாரும் செல்லமாட்டார்கள் என ஹக்கீம் கூறியிருந்தார்.

இப்படி பலரும் பயங் காட்டிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களை காப்பாற்ற ஒரே வழி மார்க்கத்தை காட்டி விமானம் மூலம் எல்லோரையும் ரணிலின் ஆலோசனைப்படி ஏற்றி விட்டார் ஹக்கீம்.

சில வேளை மக்காவில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஹக்கீம் சத்தியம் வாங்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காரணம் குர்ஆனில் மக்காவில் சத்தியம் செய்து பின்னர் அதனை மீறினால் மார்க்கத்தின் படி மகா பாவமாக கருதப்படுகிறது.

கல்முனை காரீஸ் எம்.பி அன்மையில் மகிந்தவை சென்று சந்தித்து வந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

ஒட்டு மொத்தத்தில் மகிந்த – மைத்திரியிடம் இருந்து தப்புவதற்கு பாதுகாப்பான இடம் புனித மக்கா என்பதை உணர்ந்த ஹக்கீம் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அதி உயர் பீடத்தின் பெயர் குறிப்பிடாத உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad