வடக்கு கிழக்கு அரச தலைவர் அபிவிருத்திச் செயலணியின் இன்றைய கூட்டத்தில், புதிய தலைமை அமைச்சராக நியமிக்கப் பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான முன்னைய அரசின் அமைச்சர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு– கிழக்கு அரச தலைவர் அபிவிருத்திச்செயலணியின் கூட்டம், அரச தலைவர் செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கடந்த கூட்டத்தில் வடகிழக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகள் விடுவிப்புத் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 26ஆம் திகதி தலைமை அமைச்சர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை தடாலடியாக நீக்கிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, புதிய தலைமை அமைச்சராக மகிந்த ராஜபக்சவை நியமித்தார். இந்த நியமனம் அரசமைப்புக்கு முற்றிலும் விரோதமானது என்று தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, தலைமை அமைச்சராக தானே தொடர்வதாக அறிவித்திருந்தார். இதனால் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு அரச தலைவர் அபிவிருத்திச் செயலணியின் கடந்த காலக் கூட்டங்களில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான மனோகணேசன், சுவாமிநாதன், ஹக்கீம், ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட அமைச்சர்கள் கடந்த காலங்களில் பங்கேற்றிருந்தனர்.
இன்று நடைபெறவுள்ள கூட்டத்திற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும், புதிய தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்ச மற்றும் புதிய அமைச்சர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment