எம்பீகளுக்கான வாகன 'பர்மிட்' பற்றி இங்கே பேசப்படுகிறது. நீண்டகாலமாக ஒவ்வொரு பாராளுமன்றத்திலும், எம்பீகளுக்கு வாகன 'பர்மிட்' ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதும், அதை ஏறக்குறைய அனைவரும் பெறுவதும் வழமையான நடைமுறை.
ஆனால், நான் என்ன, ஒரு பெரும்பான்மை கட்சியின், ஒரு தொகுதி அமைப்பாளராக செயற்படும் ஒரு எம்பீயா? அப்படி இருந்தால் தொல்லை இல்லை. எனக்கு வழங்கப்பட்டுள்ள தொகுதிக்கு உள்ளேயே நடமாடி, கட்சி தலைமை கொடுப்பதை வாங்கிக்கொண்டு, சொல்வதை கேட்டுக்கொண்டு, அரசியல் செய்யலாம்.
ஆனால், நான் ஒரு சிறுபான்மை கட்சி/கூட்டணியின் தலைவன். நாடு முழுக்க ஏறக்குறைய பன்னிரண்டு (12) மாவட்டங்களில் எங்கள் அரசியல்/தேர்தல் கட்சி பணிகள் நடைபெறுகின்றன. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த 'பர்மிட்டின்' பெறுமதி என்ன? இந்த ஐந்து வருடத்தில், பாராளுமன்றம், உள்ளூராட்சி, மாகாணசபை என எத்தனை தேர்தல்கள் நடைபெறுகின்றன? இந்நிலையில் இந்த தேர்தல்கள் வரும்போது, இப்படியான பல வாகன 'பர்மிட்'களுக்கு சமானமான நிதி தேர்தல் பிரச்சார மற்றும் நடவடிக்கைகளுக்கு எங்களுக்கு தேவைப்படுகிறது.
இப்போது முன்கூட்டியே பாராளுமன்றத்தை இந்த ஜனாதிபதி கலைத்து விட்டார். ஜனவரியில் அடுத்த தேர்தல் வரப்போகிறது. தேர்தல் நடத்த, நாட்டுக்கு ஐநூறு கோடி ரூபா செலவு தேர்தல் ஆணையகத்துக்கு வழங்கப்படும். அதேவேளை இந்த தேர்தலுக்கு முகங்கொடுக்க சிறுபான்மை கட்சிகளுக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை சமூக ஊடக கேள்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
ஒரு அமைச்சராக, ஒரு எம்பியாக, நாம் வாங்கும் சம்பளம், முதல் பதினைந்து நாட்களில், வாகன எரிபொருளுக்கே சரியாகி விடுகிறது. எத்தனை தேர்தல்களை, எத்தனை சவால்களை, கடந்து நாம் இங்கே வந்திருக்கிறோம். உண்மையில் அரசியல் பதவிகளால் எனக்கு இதுவரை வாழ்நாளில் கிடைத்த சம்பளம் மற்றும் 'பர்மிட்' உள்ளடங்கிய தொகையை விட மிகப்பலமடங்கு என் சொந்த நிதியை வாரி இறைத்தே நான் கட்சி நடத்தி வருகிறேன். இந்நிலையில் வாகன 'பர்மிட்' என்பது இங்கு ஒரு பெரும் சாதகம் அல்ல.
தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் - அதிலும் விலை போகாமல், நேர்வழியில் நடக்கும், தேசியரீதியாக நமது இனத்தின் அந்தஸ்த்தை மரியாதையை தூக்கி நிறுத்தும் - கட்சி தலைவர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் சிரமங்களை, தமிழ் பேசும் மக்கள், சமூக ஊடகவியலாளர்கள், முகநூல் போராளிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
பதிவர் - மனோகணேசன்
No comments:
Post a Comment