சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையான லொஜிக்? யாருடைய பிழை?" இவ்வாறு முகநூலில் கேட்டிருப்பவர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரான சிராஜ் மஷ்ஹ_ர். அவர் கேட்பது சரி. நாட்டின் மீயுயர் மன்றம் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் அடுத்த கட்டம் அதில் எத்தனை பேர் சந்தர்ப்பவாதிகள் என்பதில்தான் தங்கியிருக்கிறது. எத்தனை பேரை விலைக்கு வாங்கலாம் என்பதுதான் யார் வெல்லக்கூடும் என்பதை தீர்மானிக்கப் போகிறது. இப்படிப் பார்த்தால் ஆட்சி மாற்றம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. பேரம் முடிந்தால் தான் ஆட்சி மாற்றமும் ஒரு ஸ்திரமான நிலையை அடையும்.
இதில் மிகப் பெரிய சந்தர்ப்பவாதி மைத்திரிதான். 2015ல் அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு விசுவாசத்தை இடம் மாற்றினார். அத்தேர்தலின் போது ஒரு தென்னந்தோப்புக்குள் ஒளித்திருந்தார். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை மொட்டின் எழுச்சியைத் தொடர்ந்து மறுபடியும் ஒருதடவை அவர் ஒழிந்திருக்க தயாரில்லை. எனவே திரும்பவும் தனது விசுவாசத்தை மாற்றிக்கொண்டு அப்பம் சாப்பிடச் சென்றுவிட்டார்.
இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் பேரங்களின்படி ரணில் வெற்றி பெற்றாலும் அவரால் ஒரு ஸ்திரமான ஆட்சியை அமைக்க முடியாது. ஏனெனில் அவருக்கு துரோகமிழைத்த மைத்திரி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருக்கிறார். இது ஏறக்குறைய திருமதி சந்திரிக்காவின் காலத்தில் காணப்பட்டதைப் போன்ற ஒருவித இரட்டை ஆட்சியாகவே அமையும். அந்த ஆட்சியால் உருப்படியாக எதையும் செய்ய முடியாது.
அதே சமயம் மகிந்த பேரத்தில் வென்றால் அது ஒப்பீட்டளவில் ஸ்திரமான ஆட்சியாக அமையும். ஏனெனில் மகிந்தவிடம் அப்பம் சாப்பிடும் மைத்திரி அவருக்கு கீழ்ப்படிவாக இருப்பார். இதனால் அந்த ஆட்சி ஒப்பீட்டளவில் ஸ்திரமாக இருக்கும். எனினும் முன்பு ஜனாதிபதியாக இருந்த பொழுது தான் அனுபவித்த ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களைத் திரும்பப் பெறத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை திரும்பப் பெறலாமா என்பது சந்தேகம். முன்பு தான் கவிழ்க்கப்பட்டதிலிருந்து அவர் பாடங்களைக் கற்றிருப்பாராக இருந்தால் உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் அவரது அணுகு முறைகள் மாறக்கூடும். குறிப்பாக வெளியுறவுக் கொள்கையில் அவர் மாற்றங்களைக் காட்டக்கூடும்.
மகிந்த உள்நாட்டில் பலமாகக் காணப்படும் அதே சமயம் வெளியரங்கில் பலவீனமாகக் காணப்படும் ஒரு தலைவர். ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டில் பலவீனமாகக் காணப்படும் அதே சமயம் வெளியுலகில் பலமாகக் காணப்படும் ஒரு தலைவர். அரசியல் சதுரங்கத்தில் உள்நாட்டில் பலமாகக் காணப்படும் ஒருவர் தான் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அதிகரித்த வாய்ப்புக்களைக் கொண்டிருப்பார். வெளிச் சக்திகள் காய்களை நகர்த்த முன்பு அவர் விரைவாகக் காய்களை நகர்த்தி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு விடுவார். பின்னர் வெளிநாடுகள் அவரோடு அனுசரித்துப் போகக்கூடிய ஒரு போக்கு உருவாகும்.
மகிந்த இப்படித்தான் நம்புகிறார். அவர் ரணிலைப் போலவோ, மைத்திரியைப் போலவோ தயங்கித் தயங்கி முடிவெடுக்கும் ஒரு தலைவரல்ல. வெட்டொன்று துண்டிரண்டாக முடிவுகளை எடுப்பவர். ஒரு புள்டோசரைப் போல முன்னோக்கிச் செல்பவர். ஒரு புள்டோசர் எதிர்ப்படும் எல்லாவற்றையும் தகர்த்துக்கொண்டும், மிதித்துக் கொண்டும் முன்னோக்கிச் செல்வதைப் போல மகிந்தவும் உறுதியாக முடிவுகளை எடுத்து விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அதைச் செய்து முடிப்பவர். யுத்தத்தை அவர் அப்படித்தான் வெற்றி கொண்டார். இப்பொழுதும் அப்படித்தான். ஒரு சூதாடியின் மனோ நிலையோடு அவர் களமிறங்கியிருக்கிறார். ஆடக்கூடிய மட்டும் ஆடிப்பார்க்கலாம் என்ற ஓர் அசாத்தியத் துணிச்சலோடு அவர் எல்லாவற்றையும் புள்டோர்ஸ் பண்ணிக்கொண்டு போகிறார்.
மனோ கணேசன் கூறுவதைப் போல அவர் அவசரப்பட்டு விட்டார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அவர் கவிழ்க்கப்பட்ட பின் நடந்த பெரும்பாலான தேர்தல்களில் அவருடைய வாக்குத்தளம் பெருமளவிற்குச் சரியவில்லை என்பதைக் கண்டு கொண்டார். குறிப்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தாமரை மொட்டுப் பெற்ற வெற்றிகளின் பின்னணியில் அடுத்து வரக்கூடிய தேர்தல்கள் வரை அவர் காத்திருந்தால் காலம் தானாகக் கனிந்து அவருக்கு வெற்றியைக் கொடுத்திருக்கும். ஆனால் தானாகக் கனியக்கூடிய வெற்றியை அவர் அடித்துக் கனிய வைக்க முற்பட்டதால் நிலமைகளை அவர் கன்றிப் போகச் செய்துவிட்டார் என்ற தொனிப்பட மனோகணேசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது தொடர்பில் வேறு விளக்கங்கள் உண்டு. நிதிக்குற்ற விசாரணைகள் தம்மைச் சுற்றி வளைக்க முன்பாக அதைத் தடுக்கவேண்டிய அவசரத் தேவை ராஜபக்சக்களுக்கு உண்டு என்றொரு விளக்கம்.
அடுத்தது, வரும் 7ம்திகதி யாப்புருவாக்கத்தின் வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கையின் இறுதி வடிவம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது சமர்ப்பிக்கப்பட்டால் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் மேலும் பலமடையக்கூடும். அப்புதிய யாப்பு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை அகற்றும் என்பதனால் அதை மகிந்த எதிர்க்கிறார். யு.என்.பிக்குள்ளும் ஒரு பகுதியினர் எதிர்க்கிறார்கள். மகா சங்கத்திற்குள்ளும் எதிர்ப்புண்டு. படைத்தரப்பிற்குள்ளும் எதிர்ப்புண்டு. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியால்தான் ஒரு ஸ்திரமான ஆட்சியைக் கொடுக்க முடியுமென்றும், யுத்தத்தை அதனால்தான் வெல்ல முடிந்தது எனவும் மேற்படி தரப்புக்கள் நம்புகின்றன. அதோடு இனப்பிரச்சினைக்கான தீர்வும் அப்புதிய யாப்பிற்குள் உள்ளடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே புதிய யாப்பை எதிர்க்கும் தரப்புக்களை ஒன்று திரட்டுவதன் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாமென்று மகிந்த திட்டமிட்டதாகவும் ஒரு விளக்கம் உண்டு. "நான் அதிகாரத்தில் உள்ளவரை வடக்குக்-கிழக்கு இணைப்பு இல்லை.சமஸ்டி இல்லை. அவற்றை அடைவதென்றால் முதலில் நீங்கள் என்னைக் கொல்ல வேண்டியிருக்கும்" என்று மைத்திரி ஆட்சியைக் கவிழ்த்த பின் கூறியிருப்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்
ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கூட்டாட்சி கொண்டிருந்தது. இம்மூன்றில் இரண்டு பெரும்பான்மையானது பிளவுண்ட எஸ்.எல்.எவ்.பியால்தான் சாத்தியமாகியது. அதனால் தான் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வரமுடிந்தது. இதற்கு முன்னரும் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக வந்தது இப்படித்தான். அதாவது எஸ்.எல்.எவ்.பி மோசமாகப் பலவீனமடையும் பொழுது தமிழ்த்தரப்பு எதிர்க்கட்சியாக வரமுடிகிறது. இம்முறை எஸ்.எல்.எவ்.பி இரண்டாகப் பிளவுண்டிருக்கும் வரை தனக்கு இறுதி வெற்றி கிடைக்காது என்பது மகிந்தவிற்குத் தெரியும். எனவே எஸ்.எல்.எவ்.பியை மீள இணைக்கும் முயற்சிகளை அவர் எப்பொழுதோ தொடங்கி விட்டார்.
அதே சமயம் கூட்டாட்சிக்குள் மைத்திரி கசப்பும், வெறுப்பும் அடையத் தொடங்கினார். தனது தலைமையின் கீழ் எஸ்.எல்.எவ்.பியை பிளவுண்ட நிலையில் பேணியபடி ரணில் யு.என்.பியைப் பலப்படுத்துவதாக அவர் நம்பினார். ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களைப் பெற்றிருந்த போதும் அவற்றைப் பிரயோகிக்க விரும்பாத தனது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி ரணில் யு.என்.பியைப் பலப்படுத்துவதாக மைத்திரி நம்பினார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டுப் பெற்ற வெற்றியை அடுத்து மைத்திரி மேலும் அச்சமடைந்தார். ராஜபக்ஷக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் முதற் பலிகளாகப் போவது மைத்திரியும், சந்திரிக்காவும்தான். எனவே அதற்கு முன்னரே ராஜபக்ஷக்களோடு சுதாகரித்துக்கொள்வது என்று அவர் முடிவெடுத்து விட்டார்.
இதனால் பிளவுண்டிருந்த எஸ்.எல்.எவ்.பி மீண்டும் ஒட்டப்பட்டுவிட்டது. அது தன்னை மேலும் பலப்படுத்துவதற்காக யு.என்.பியையும் ஏனைய கட்சிகளையும் உடைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பேரத்தில் யாரும் வெல்லலாம். ஆனால் யார் வென்றாலும் உடனடிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது. அப்பெரும்பான்மை இல்லையென்றால் புதிய யாப்பைக் கொண்டு வரமுடியாது. புதிய யாப்பு இல்லையென்றால் இனப்பிரச்சினைக்கான ஏதோ ஒரு தீர்வைத்தானும் கொண்டு வரமுடியாது. அதாவது சம்பந்தரின் ராஜதந்திரப் போர் தோல்விகரமான திருப்பத்தை அடைந்து விட்டது என்று பொருள். சம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய் விட்டார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு புதிய யாப்பைத்தான் தனது வெற்றியாகக் காட்டுவதற்குச் சம்பந்தர் திட்டமிட்டிருந்தார். கடந்த பல மாதங்களாக அவர் ஆற்றிய உரைகள் எல்லாவற்றிலும் இதைக் காணமுடியும். தமிழ் மக்களுக்கு அவர் வழங்கிய வாக்குறுதிகளும் இந்த அடிப்படையிலானவைதான். முன்னைய காலங்களில் பகை நிலையில் காணப்பட்ட இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டரசாங்கத்தில் ஒன்றாகக் காணப்பட்டதும் அதனால் ஏற்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையுமே சம்பந்தரின் நம்பிக்கைகள் அனைத்திற்கும் அடித்தளமாகக் காணப்பட்டன. ஆனால் இப்பொழுது அப்பெரும்பான்மை இழக்கப்பட்டு விட்டது. ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக சாசனப் பேரவையாக மாற்றப்பட்ட நாடாளுமன்றம் அத்தகைமையை இழந்து விட்டது. யாப்பின் சிங்களப் பிரதிக்கும் ஆங்கிலப் பிரதிக்கும் இடையில் உள்ள பொருள்கோடல் தொடர்பான வேறுபாடுகளைப் பற்றி மைத்திரி தரப்பு வழங்கிய வியாக்கியானங்கள் கூடடமைப்பின் சடடதரணிகள் இதுவரை "ஏக்க ராஜ்யத்துக்கு" கூறி வந்த சப்பைக்கட்டுகளை பொய்யாகிவிட்டன. சம்பந்தரின் வழிவரைபடம் தெரிவுகள் குறைந்த ஒரு முட்டுச்சந்தியில் வந்து இறுகி நிற்கிறது.
தமிழரசுக்கட்சியானது பாரம்பரியமாக யு.என்.பியைத்தான் ஆதரிப்பது உண்டு. அதே சமயம் அமெரிக்காவும், இந்தியாவும் ரணிலைப் பலப்படுத்துவதைத்தான் தமது முதற் தெரிவாகக் கொண்டிருக்கும். மகிந்த எல்லாப் பேரங்களையும் மீறி தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வாராக இருந்தால் மேற்படி நாடுகள் பின்னர் அவரோடு சுதாகரித்துக் கொள்ளும். அது வரையிலும் ரணிலை எப்படி பலப்படுத்தலாம் என்றே மேற்படி நாடுகள் சிந்திக்கும். இது விடயத்தில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றின் முடிவை மற்றொன்று அனுசரித்தே போகும். இந்தோ பசுபிக் மூலோபாயத்தின் படி அமெரிக்காவும், இந்தியாவும் பூகோளப் பங்காளிகள். எனவே இது விடயத்தில் முரண்பட்ட முடிவை அவை எடுக்கப் போவதில்லை. ஆனால் எல்லாத் தெரிவுகளையும் கையாளத்தக்க ஓர் எல்லைக்குள் வைத்திருப்பார்கள். இதன்படி கூட்டமைப்பானது யு.என்.பியை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் அப்படி ஆதரிப்பதனால் அவர்கள் அரசியல் தீர்வெதையும் பெற்றுக்கொள்ள முடியாது. மட்டுமல்ல கைதிகளின் விடயம், காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை போன்ற உடனடிப் பிரச்சினைகளுக்கும் துணிச்சலான முடிவுகளை எடுப்பது கடினம். ஏனெனில் ரணிலின் ஆட்சி ஸ்திரமாக இருக்காது.
ஆனால் அதற்காக மகிந்தவோடு சேர்ந்தும் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது. மட்டுமல்ல மகிந்தவோடு கூட்டுச் சேர்ந்தால் கூட்டமைப்பிற்கு மற்றொரு பாதகமான விளைவு உண்டு. அதன் வாக்காளர் தளம் ஆட்டம் காணத் தொடங்கிவிடும். விக்னேஸ்வரன் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் ஒரு காலச் சூழலில் கூட்டமைப்பானது மகிந்தவோடு கூட்டுச் சேர்ந்தால் அதை தமிழ் வாக்காளர்கள் எப்படிப் பார்ப்பார்கள்? சிலவேளை அது கூட்டமைப்பின் அரசியற் தற்கொலையாக அமைந்துவிடாதா? கூட்டமைப்பு எம்.பிக்கள் தனித்தனியாக மகிந்தவை நோக்கிச் செல்வதும் விக்னேஸ்வரனையும் கஜேந்திரகுமாரையும் பலப்படுத்தக்கூடியது. எனவே மகிந்தவை ஆதரிப்பதனால் கூட்டமைப்பிற்கு தீர்வு கிடைக்குமோ இல்லையோ அதைவிடப் பயங்கரமான ஒரு தேர்தல் விளைவும் உண்டு. எதிர்காலத்தில் விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் பெறக்கூடிய வெற்றிகளை குறைப்பதென்று சொன்னால் கூட்டமைப்பு மகிந்தவை நோக்கிப் போக முடியாது.
இப்படிப் பார்த்தால் தென்னிலங்கையில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஸ்திரமின்மைக்குள் கூட்டமைப்பு யாருடைய பக்கம் போனாலும் சிக்கல்தான். ரணிலை ஆதரிப்பதால் எதையும் பெறப் போவதில்லை. ஆனால் நடு நிலை வகித்தால் அது சில வேலை மகிந்தவுக்கு சாதகமாக அமைந்து விடலாம் என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் நம்புகின்றன. தவிர, கூட்டமைப்பு எம்.பி.மார் மகிந்தாவால் விலைக்கு வாங்கப் படுவதைத் தடுக்கவும் உடனடியாக ஒரு பக்கம் நிலையெடுக்க வேண்டிய நிர்பந்தம் அக்கட்சிக்கு ஏற்பட்டது. எனவே கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கிறது. அதேசமயம் மகிந்தவை ஆதரித்தால் கூட்டமைப்பு மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் பகைப்பது மட்டுமல்ல,அதன் வாக்கு வங்கியும் உடையக்கூடும்.எனவே இருப்பதில் பாதுகாப்பான ஒரு தெரிவை அக்கட்சி எடுத்திருக்கிறது. ஆனால் அதற்குக் கவர்ச்சியான காரணங்களைக் கூறுகிறது. இனி அடுத்த தேர்தலில் கடந்த மூன்றரை ஆண்டுகால ராஜதந்திரப் போரின் தோல்வியை ஒப்புக்கொண்டு பழியை இனவாதிகளின் தலையில் போட்டுவிட்டு அப்பாவிகளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் முன் வந்து நிற்கலாந்தானே?
No comments:
Post a Comment