தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்கு கையாளக் கூடிய ஒரே அரசியல் வெளியாக காணப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிதான். இந்தப்பரப்பில் தங்களது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்கள் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்று.
மேலும் அவர் 'இப்போது அரங்கிலுள்ள பெரும்பாலான சக்திகள் spent forces- தீர்ந்துபோன சக்திகள்' என்றும் தெரிவித்தார். இப்படிப்பட்ட தீர்ந்து போன சக்திகளை நீக்கிவிட்டு அறிவு ஜீவிகளான நேர்மையான புதிய தலைவர்களை ஈழத்தமிழர்கள் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. என்றும் அவர் கூறினார்.
அவ்வாறான ஒரு புதிய தலைமையாக மேலெழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் விக்கினேஸ்வரன் ஒரு புதிய கட்சியின் பெயரை அறிவித்த இரு கிழமைகளின் பின்னரே திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். விக்கினேஸ்வரன் புதிய கட்சியை அறிவித்த இரு நாட்களிலேயே தென்னிலங்கையில் அரசியல் குழம்பி விட்டது. அதன் விளைவாக ஒரு தேர்தலை எதிர் கொள்ள வேண்டிவரும் என்ற ஊகங்களும் அதிகரித்தன. பெயர் மட்டும் அறிவிக்கப்பட்ட ஒரு கட்சியை மிகக் குறுகிய காலத்தில் அவசர அவசரமாக கட்யெழுப்பி பொதுத் தேர்தலுக்கு வேண்டிய வேட்பாளர்களையும் கண்டு பிடிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் விக்கினேஸ்வரனுக்கு ஏற்பட்டது. ஒரு நாடாளுமன்றம் இரு பிரதமர்கள் என்பதை போல கட்சியைத் தொடங்க முன்னரே வேட்பாளரை தேட வேண்டிய ஒரு நூதனமான நிர்ப்பந்தம் விக்கினேஸ்வரனுக்கு ஏற்பட்டது. பின்னர் வந்த உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை அவருக்கு சிறிதளவு மூச்சு விடும் அவகாசத்தை வழங்கியுள்ளது.
எனினும் அவர் கட்சியை அறிவித்ததில் இருந்து ஓய்வாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியாத அளவுக்கே வடக்கில் அரசியல் நிலமைகள் காணப்படுகின்றன. அவர் கட்சியை அறிவித்த பின்னர்தான் மாற்று அணி என்று கருதப்படும் தரப்புகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. ஆளை ஆள் பகிரங்கமாக ஊடகங்களில் விமர்சிக்கும் ஒரு நிலைமை அதிகரித்து வருகின்றது.
தமிழ் அரசியலில் மாற்று அணிக்கான வாசலை முதலில் திறந்தது விக்கினேஸ்வரன் அல்ல, கஜேந்திரகுமார்தான். கூட்டமைப்பின் தலைமையோடு ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அவர் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்தார். கூட்டமைப்பின் தலைமையானது புலிகள் இயக்கத்திற்கு விசுவாசமான கட்சி பிரமுகர்களை வெளித்தள்ளும் விதத்தில் புலி நீக்க அரசியலை முன்னெடுத்தபோது கஜன் அணி கட்சியிலிருந்து வெளியேறியது. ஒரு மாற்று அணிக்கு தேவையான கோட்பாட்டு விளக்கத்தோடு சமரசத்திற்கு இடமின்றி அப்புதிய கட்சி களத்தில் நின்று மெதுமெதுவாக முன்னேறியது. ஆபத்துக்கள் அவதூறுகள் என்பனவற்றின் மத்தியில் அக்கட்சியானது கொள்கை பிடிப்போடு ஒரு மாற்றுத்தளத்தை சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பியது.
கஜேந்திரகுமாரின் குடும்பப் பின்னனி கொழும்பு மைய வாழ்க்கை என்பனவற்றின் அடிப்படையில் அவர் நினைத்திருந்தால் கூட்டமைப்போடு சமரசம் செய்திருக்கலாம். அதன்மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியையும் அதன்வழி கிடைக்கும் வசதிகளையும் தொடர்ந்து அனுபவித்திருக்கலாம். எனினும் கோட்பாட்டு ரீதியான மாற்று அணியை கட்டியெழுப்புவதில் அவர் விட்டுக்கொடுப்பின்றி நேர்மையாக உழைத்தார்.
ஆனால் கோட்பாட்டு ரீதியான மாற்றுத் தளத்தை ஜனவசியம் மிக்க பெருந்திரள் அரசியற் தளமாக வேகமாக அவரால் கட்டியெழுப்ப முடியவில்லை. அக்கட்சியிடம் காணப்பட்ட தூய்மைவாத கண்ணோட்டம், தந்திரோபாயங்களில் நாட்டமற்ற போக்கு, புதிய படைப்புத்திறன் மிக்க ஓர் அரசியல் செய்முறையை கண்டுபிடிக்க தவறியமை போன்ற காரணங்களினால் அவர் உருவாக்கிய மாற்றுத் தளத்தை பெருந்திரள் வெகுசனப் பரப்பாய் மாற்றியமைக்க அவர் இன்று வரையிலும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
மூத்த சிவில் அதிகாரியான அமரர் நெவில் ஜெயவீர சில தசாப்தங்களுக்கு முன் 'பொருளியல் நோக்கு' சஞ்சிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார். 'சீரியஸ் ஆனதுக்கும் ஜனரஞ்சகமானதுக்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை'. இது கஜன் அணிக்கும் ஓரளவுக்கு பொருந்தும். கூட்டமைப்பின் ஜனரஞ்சமாக வாக்குவேட்டை அரசியலோடு ஒப்பிடுகையில் மாற்றுத் தளம் என்பது அதிகபட்சம் சீரியஸானதாகும். கலை இலக்கியத்திற்கும் சினிமாவுக்கும் கூட இது பொருந்தும். ஆனால் சீரியஸ் ஆனதை அதன் புனிதம் கெடாமல் எப்படி மக்கள் மயப்படுத்துவது என்பது தான் எல்லா புரட்சிகளுக்குமான ஒரு நடைமுறை கேள்வியாகும். உலகில் வெற்றி பெற்ற எல்லா புரட்சியாளர்களும் போராட்ட தலைவர்களும் ஆகக் கூடிய பட்சம் சீரியஸானதை மக்கள் மயப்படுத்தியவர்கள்தான். மகத்தான போராட்டத் தலைவர்கள் அனைவரும் இவ்வாறு சீரியஸானதை மக்கள் மயப்படுத்துவதற்குரிய நடைமுறைச் சித்தாத்தங்களை வகுத்துத் தந்தவர்களே. அதைப் போராட்ட வழிமுறையாக வாழ்ந்து காட்டியவர்களே.
இந்த உலகளாவிய அனுபவத்தை உள்வாங்கி ஈழத் தமிழர்களுக்கான 2009ற்கு பின்னரான போராட்ட வழிமுறையை கண்டுபிடித்து அதை மக்கள் மயப்படுத்த கஜன் அணியால் இன்றளவும் முடியவில்லை. சிறுதிரள் எதிர்ப்பு, கவனயீர்ப்பு போன்றவற்றிற்கும் அப்பால் பெருந்திரள் மக்கள் மைய போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் ஒரு கட்சியாக அது தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. அதேசமயம் தனது கொள்கையை மக்கள் மயப்படுத்தி தேர்தல் மைய அரசியலில் பெரும் வெற்றி பெறுவதற்கு அக்கட்சியானது கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் அக்கட்சி ஓரளவுக்கு முன்னேறி இருக்கிறது. எனினும் பெருந்திரள் மக்கள் மையப்போராட்டத்திலும் சரி தேர்தல் மைய அரசியலிலும் சரி அக்கட்சியானது பொருத்தமான வெற்றிகளை இன்று வரையிலும் பெற்றிருக்கவில்லை.
கொள்கைகளின் இறுதி வெற்றி அவை மக்கள் மயப்படுவதிலும் அவை மக்கள் சக்தியாக மாற்றப்படுவதிலுமே தங்கி இருக்கிறது. ஒரு கொள்கையை மக்கள் சக்தியாக மாற்றுவதற்கு தந்திரோபாயங்கள் தேவை. எல்லா வெற்றி பெற்ற தந்திரோபாயங்களும் கொள்கைகளின் பிரயோக வடிவங்களே. பிரயோகத்திற்குப் போகாத தூய கொள்கை எனப்படுவது தூய தங்கத்தை ஒத்தது. தூய தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது. பணப் பெறுமதிக்கு அதை சேமித்து வைத்திருக்கலாம். ஆனால் வாழ்க்கைத் தேவைக்கு அதை ஆபரணமாக்குவதென்றால் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதில் செம்பைக் கலக்க வேண்டும். செம்பைக் கலந்தால்தான் தங்கத்தை நகையாக்கலாம். அதாவது வாழ்க்கைத் தேவைக்குரிய பிரயோக நிலைக்குக் கொண்டு வரலாம். அதில் தங்கத்தின் தூய்மை கெடாமல் செம்பைக் கலக்க வேண்டும். அப்படித்தான் ஒரு கொள்கையை செயலுருப்படுத்துவதற்கும் தந்திரோபாயங்கள் அவசியம். உலகில் தோன்றிய பெரும்பாலான அரசியற் கூட்டுக்கள் தந்திரோபாய ரீதியிலானவை. நிரந்தரமானவையல்ல. நிரந்தரமான கூட்டுக்கள் மிகவும் அரிது.கூட்டு என்றாலே அது ஒரு தந்திரம் தான். அதில் நெளிவு சுளிவு இருக்கும். விட்டுக்கொடுப்பு இருக்கும். நெகிழ்ச்சி இருக்கும்.
தமது கொள்கைக்காக உயிரைத் துறக்கத் தயாராகக் காணப்பட்ட புலிகள் இயக்கம் கூட தந்திரோபாய உடன்படிக்கைகளைச் செய்ததுண்டு. இந்திய அமைதி காக்கும் படையை வெளியேற்றுவதற்காகப் புலிகள் இயக்கம் பொது எதிரி என்று வர்ணிக்கப்பட்ட பிறேமதாசா அரசாங்கத்தோடு ஓர் உடன்படிக்கையைச் செய்தது. இவ் உடன்படிக்கை உருவாக முன்பு அமைதி காக்கும் படைகளுக்கு எதிராக திருகோணமலைக் காட்டில் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளுக்கும் அப்பகுதியில் தலைமறைவாக இயங்கிய ஜே.வி.பிக்கும் இடையில் நல்லுறவு இருந்தது. அது இந்தியப் படைக்கு எதிரான ஒரு கூட்டு. அக்காலப் பகுதியில் புலிகள் இயக்கத்திற்கு காட்டு வழிகள் ஊடாக ஆயுதங்களை ஜே.வி.பியும் கடத்திக் கொடுத்ததாக ஒரு தகவல் உண்டு. புலிகள் இயக்கம் பிறேமதாசாவோடு உடன்படிக்கை செய்த பின் ஜே.வி.பியினர் 'இந்த முதுகில் தான் உங்களுக்கு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு வந்து தந்தோம். அதே முதுகில் இப்பொழுது குத்தி விட்டீர்களே' என்று புலிகள் இயக்கத்திடம் கூறியதாகவும் ஒரு தகவல் உண்டு. சில ஆண்டுகளின் பின் பிறேமதாசா புலிகள் இயக்கத்தால் கொல்லப்பட்டு விட்டார்.
எனவே கட்சிக் கூட்டு அல்லது தேர்தல் கூட்டு என்பவையெல்லாம் பெரும்பாலும் தந்திரோபாயங்களே. ஒரு கொள்கையை வென்றெடுப்பதற்கான தற்காலிக ஏற்பாடுகளே. கொள்கையின் புனிதத்தைப் பேணியபடி தந்திரோபாய உறவுகளை வகுத்துக்கொண்டால் சரி. அதாவது தங்கத்தின் தரம் கெடாமல் செம்பைக் கலப்பது போல.
இவ்வாறான தந்திரோபாயக் கூட்டுக்களின் மூலம் மாற்று அணியொன்று தன்னை பலமாக ஸ்தாபிக்க வேண்டிய ஓர் அவசியம் தமிழரசியல் பரப்பில் எப்பொழுதோ தோன்றி விட்டது. அப்படி ஒரு மாற்று அணிக்கான அடித்தளத்தை முதலில் போட்டது கஜன் அணிதான். ஆனால் அதை ஒப்பீட்டளவில் அதிகம் மக்கள் மயப்படுத்தியது தமிழ் மக்கள் பேரவையும் விக்கினேஸ்வரனும்தான்.
கஜன் அணியானது சிறுகச் சிறுக முன்னேறிக் கொண்டு வந்த பின்னணியில் 2015ற்குப் பின் விக்கினேஸ்வரனின் வருகையோடு மாற்று அணியானது புதிய உத்வேகத்தைப் பெற்றது. விக்கினேஸ்வரனும் ஒரு கொழும்பு மையப் பிரமுகர் தான். ஒரு முன்னாள் நீதியரசர் என்ற தகுதியும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் விரும்பி பார்க்கும் ஒரு சமய பெரியாருக்குரிய பண்பாட்டுத் தோற்றமும் அவருடைய அரசியலுக்குரிய அடித்தளம் ஆகும். அவரை அரசியலுக்கு கொண்டு வந்த சம்பந்தன் அவரைத் தங்களுடைய ஆள் என்று நம்பித்தான் முன்னுக்கு கொண்டு வந்தார். ஆனால் விக்கினேஸ்வரனுக்குள் இருக்கும் நீதிபதி ஒரு வாக்கு வேட்டை அரசியலுக்குரிய ஜனரஞ்சக உத்திகளோடு சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கவில்லை. விக்கினேஸ்வரனுக்கும் கூட்டமைப்புத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு அதிக பட்சம் கோட்பாட்டு ரீதியானது அல்ல. மாறாக அது அறநெறிகள் சார்ந்தது. ஓரளவுக்கு அரசியல் செயல்வெளி சார்ந்ததும் தான். தமிழ் மிதவாத அரசியற் பரப்பில் எதிர்ப்பு அரசியலுக்கு ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தை விக்கினேஸ்வரன் ஓரளவுக்கு நிரப்பினார். இதனால் ஜனவசியத்தை பெற்றார்.
விக்கினேஸ்வரனின் எழுச்சி என்பது கூட்டமைப்பு விட்ட தவறுகளின் விளைவு தான். அவர் எடுத்த எடுப்பிலேயே சம்பந்தருக்கு எதிராக செங்குத்தாகத் திரும்பி விடவில்லை. இப்பொழுதும் கூட திரும்பிவிடவில்லைதான். ஆனால் கூட்டமைப்புக்கு எதிரான தனது நகர்வுகளுக்கு அவர் தமிழ் மக்கள் பேரவை என்ற இடை ஊட்டத் தளத்தை பயன்படுத்திக் கொண்டார். பேரவைக்குள் காணப்படும் பலரும் கூடியளவு பிரமுகர்கள் குறைந்தளவு செயற்பாட்டாளர்கள். ஆனால் தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். 2009க்கு பின் தோற்றம் பெற்ற தமிழ் சிவில் சமூக அமையத்தின் அடுத்த கட்டக் கூர்ப்பின் ஒரு பக்க விளைவாக பேரவையைக் கருதலாம்.
கூட்டமைப்பிற்கும் மாகாண சபைக்கும் வெளியே பேரவை என்ற இடை ஊடாட்டத் தளத்தை வைத்துக் கொண்டு விக்கினேஸ்வரன் தனது அரசியலைப் பலப்படுத்தி கொண்டார். கஜேந்திரகுமார் அத்திவாரம் போட்ட மாற்று அணிக்கான அடித்தளத்தின் மீது விக்கினேஸ்வரன் தனது அரசியலை கட்டியெழுப்பினார். கஜன் அணியை விடவும் அதிகரித்த அளவில் தனது அரசியலை மக்கள் மயப்படுத்தினார். விக்கினேஸ்வரனின் எழுச்சியும் பேரவையின் எழுச்சியும் ஒன்றுதான். கடந்த 24ந் திகதி பேரவைக் கூட்டத்தில் விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை அறிவித்தார். அதையும் சேர்த்து மாற்று அணிக்குள் நாலாவதாக ஒரு கட்சி தோன்றியிருக்கிறது. விக்னேஸ்வரன் அறிவித்தது ஒரு கட்சியின் பெயரையா? கூட்டின் பெயரையா? என்ற ஒரு சந்தேகம் இருந்தது. ஒரு புறம் அவர் தனக்கென்று ஒரு கட்சியைக் கட்டியெழுப்பி வருகிறார். இன்னொரு புறம் ஏனைய கட்சிகளை தன்னோடு வந்து இணையுமாறு அழைக்கிறார்.
ஆனால் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியின் வருகையோடு மாற்று அணிக்குரிய தளம் முன்னரை விட அதிகரித்த அளவில் பிளவுபடத் தொடங்கிவிட்டது. கஜேந்திரகுமாருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் ஒரு இடையூடாட்டத் தளமாக காணப்பட்ட பேரவைக்கு இப்பிளவுகளைச் சீர் செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு உண்டு. கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சுரேஸையும் கஜனையும் ஓரணியில் நிறுத்தித் தலைமை தாங்கும் வாய்ப்பு பேரவைக்கு கிடைத்தது. அது ஒரு விக்கினேஸ்வரன் மைய அமைப்பு என்றபடியால் அவரது பதவிக்காலம் முடியும் வரையிலும் ஒரு மாற்று அணிக்கு துலங்கமாக தலைமை தாங்க அன்றைக்குப் பேரவை தயாராக இருக்கவில்லை. அந்த அமைப்புக்குள் காணப்பட்ட இரண்டு கட்சிகளுக்கும் தெளிவான வழிகாட்டுதலை பேரவை வழங்க தவறியது. ஒரு தீர்மானகரமான காலகட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட நிர்ணயகரமான வரலாற்று வகிபாகத்தை பேரவை பொறுப்பேற்கத் தவறியது. இதனால் ஏற்பட்ட காயங்கள் படிப்படியாகச் சீழ்ப்பிடித்து இப்பொழுது மணக்க தொடங்கிவிட்டன. அக் காயங்களில் புழுப்பிடிக்கமுன் ஒரு சிகிச்சையை வழங்க வேண்டிய பொறுப்பு பேரவைக்கு உண்டு அல்லது அது ஒரு விக்கி மைய அமைப்பாக தொடர்ந்தும் அவருடைய கட்சியைக் கட்டியெழுப்பி அதன் தேர்தல் வெற்றிக்காக உழைக்கப் போகிறதா?
ஆயின் மாற்று அணி எனப்படுவது மேலும் சிதைவுறுவதை யார் தடுப்பது? திருமாவளவன் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் உரையாற்றும் போது விக்கினேஸ்வரனையும் முன்னால் வைத்து கொண்டு பின்வருமாறு கூறினார். 'கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றாமையோடும் இயலாமையோடும் எங்களுக்குள் நாங்களே மோதிக் கொண்டு இருக்கிறோம். பொது எதிரிக்கு எதிராக மோதியதை விடவும் நாங்கள் எங்களுக்குள் மோதியதே அதிகம்' என்று. கூட்டமைப்பிற்கும் மாற்று அணிக்கும் இடையிலான மோதல் இப்பொழுது மாற்று அணிக்குள்ளேயே மோதலாக விரிவடைந்திருக்கிறது. மாற்று அணிக்குள் கஜனின் கட்சி, சுரேசின் கட்சி, அனந்தியின் கட்சி, விக்கியின் கட்சி என்று நான்கு கட்சிகள் வந்துவிட்டன. அவை இரண்டு அல்லது மூன்று அணிகளாகப் பிரிந்து நிற்கின்றன. வரவிருக்கும் தேர்தல்களில் தமிழ் வாக்குகளை எத்தனை தரப்புக்கள் பங்கிடப் போகின்றன
No comments:
Post a Comment