வீட்டுக்கு வீடு இராணுவம்! தமிழ் அரசியல் தலைமைகளின் தோல்வியா? இராணுவத்தரப்பின் வெற்றியா? - செஞ்சுடர்.சே
'ஊர் மக்கள் ஒன்றுகூடி சப்பறம் இழுத்த பின்னர், அதை அப்படியே ஆலய முன்பக்க வீதியில் விட்டுச்சென்று விட்டனர். அதை பழையபடி இருந்த இடத்துக்கே இழுத்துச்சென்று விடுவதற்கு இராணுவத்தினரை அனுப்ப முடியுமா?' இவ்வாறு யாழ்.மாவிட்டபுரம் இந்து ஆலயம் ஒன்றின் நிர்வாகத்தினர், கடந்த செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இராணுவத்தினரின் உதவியைக் கோரியுள்ளனர். வயாவிளான் பகுதிப்பாடசாலை ஒன்றின் அதிபரான அருட்தந்தை ஒருவர், தனது காரியாலயம், வகுப்பறைகள், பாடசாலைச்சுற்று மதில்களை தீந்தை (பெயின்ட்) பூசி அழகுபடுத்துவதற்கு தீந்தைகளையும் பெற்றுத்தந்து, இராணுவத்தினரையே குறித்த பாடசாலையை அழகுபடுத்தி தருமாறும் கேட்டுள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்களையும் சாதாரண செய்திகளைப்போல பார்த்துக்கடந்து போய்விட முடியாது. இந்த இரண்டுக்கும் அரசியல் ரீதியாகவும், சமூக கட்டமைப்பு ரீதியாகவும் இருவேறு பார்வைகள் உண்டு. முதலாவதாக சமூக ரீதியாக நோக்கின், பொதுவாக தமிழ் சமூகத்தில் ஆலய திருவிழாக்களின் வகிபங்கு தான் என்ன? ஒரு கிராமம் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குரிய மக்களை, ஒரு மக்கள் கூட்டமாக திரண்டு வரச்செய்வதில் ஆலய திருவிழாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வாறாயின், இப்பத்தியின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள 'சப்பறத்தை இழுத்து தெருவில் விட்ட' சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்போமாயின், சமீபகாலமாக 'கூட்டிணைவு - கூட்டு முயற்சி - கூட்டு உயர்வு' அற்ற ஒரு சமூகமாக தமிழ் சமூகம் மேலெழுந்து வருகின்றதா? இது முதலாவது கேள்வி.
இரண்டாவதாக, ஒரு பாடசாலையின் நிர்வாக கட்டமைப்பில், பெற்றோர் சங்கம், ஆசிரியர் சங்கம், பழைய மாணவர் சங்கம் எனப்பல பிரிவுகள் உண்டு. இவர்கள் ஒரு கட்டமைப்பாக திரண்டு செய்ய வேண்டிய பொதுப்பணிகளும் உண்டு. அவ்வாறாயின், இப்பத்தியின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள 'தீந்தை பூசி அழகுபடுத்தும்' சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்போமாயின், 'கூட்டு உழைப்பு - அர்ப்பணிப்பு' அற்ற ஒரு சமூகமாக வாழப்பழகிக்கொண்டிருக்கிறோமா? இது இரண்டாவது கேள்வி. இந்த இரண்டு பெரும் கேள்விகள் பெருத்த உறுத்தலாக தொக்கு நிற்கின்றன.
அடுத்ததாக அரசியல் ரீதியாக நோக்கின், பாடசாலையை அழகுபடுத்துவதற்கு ஒரு சிறுதொகை நிதி ஊட்டம் போதுமானது. அதனைப் பெற்றுக்கொள்வதற்கு அந்த தொகுதிக்குரிய பாராளுமன்ற உறுப்பினரதோ, மாகாணசபை உறுப்பினரதோ, பிரதேசசபை ஒன்றின் உறுப்பினரதோ உதவியைக்கோரி இருக்க முடியும். இத்தனைக்கும் வடக்கு மாகாணத்துக்கென்று ஒரு கல்வி அமைச்சர் இருக்கிறார். அவ்வாறாயின், தாங்கள் வாக்களித்து வெற்றிபெறச்செய்த அரசியல்வாதிகள் மீது மக்கள் மொத்தமுமாக நம்பிக்கை இழந்து விட்டனர் என்று எடுத்துக்கொள்ளலாமா?
அல்லது, யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள கடந்த ஒன்பது வருடங்களில், தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்காக, பெரும் எடுப்பில் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் மனிதநேய வேலைத்திட்டங்களில் கணிசமான அளவு முன்னேறியிருக்கிறார்கள் என்றோ, பெருமளவில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் என்றோ கருதலாமா?
இவ்விடத்தில் அதீத கவனிப்புக்குரிய இன்னுமொரு விடயம் உண்டு. தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து 'இராணுவ வெளியேற்றம்' தொடர்பில், காலத்துக்கு காலம் தம்மை சந்தித்துவரும் பன்னாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள், ஐ.நா சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளுக்கு, பக்கம் பக்கமாக அறிக்கைகள் கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இணைத்தலைவராக கொண்டுள்ள தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட பிரமுகர் அமைப்புகளும், வெறுமனே கனவான் அமைப்புகளாகவோ அன்றி மேட்டுக்குடி சிந்தனை கட்சிகளாகவோ தொடர்ந்தும் இயங்கத்தான் போகின்றனவா?
இவை களத்தில் இறங்கி வேலைசெய்து, 'மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களின் தேவைகள் - விருப்பங்கள் என்ன?' என்று கருத்துகளை கேட்டறியாமல், மக்களின் உணர்வுகளை புள்ளி விவரங்கள் ரீதியாக மதிப்பிடாமல், 'டீக்கடை பெஞ்' குழுக்கள் போல தமக்குள் மட்டும் கூடிப்பேசிவிட்டு, 'மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காத அறிக்கைகளை' பன்னாட்டு அமைப்புகளுக்கும் சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனவா? எனும் கேள்வி இங்கு பலமாக தொனிக்கின்றது. ஏனெனில், குறித்த பிரமுகர் அமைப்புகள் மற்றும் கட்சிகள் வலியுறுத்தும் அரசியலுக்கும், நிஜத்தில் பொதுமக்களின் வாழ்க்கை முறைமைகளுக்கும் ஏகப்பட்ட முரண்நிலைகள் உண்டு.
'போரில் அவையங்களை இழந்துள்ள எனக்கு வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த ஒரு பெட்டிக்கடை அமைத்து தரவும். நாளாந்த சீவியத்தை முன்கொண்டு நகர்த்த கறவைமாடு வாங்கித்தரவும். எனது குடும்பம் குடியிருப்பதற்கு சிறிய வீடு கட்டித்தரவும். பாடசாலைக்கு நீண்டதூரம் நடந்துசெல்லும் எனது பிள்ளைகளுக்கு துவிச்சக்கர வண்டி வாங்கித்தரவும். பல்கலைக்கழக கல்வியைத் தொடரும் எனக்கு மாதாந்த உதவிக்கொடுப்பணவு தரவும். உயர்கல்வி கற்கும் எனக்கு மடிக்கணனி வாங்கித்தரவும். பகுதி நேரக்கற்றலுக்கு அப்பியாசக்கொப்பிகள் வாங்கித்தரவும். கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தும் எமக்கு நிவாரணப்பொருட்கள் தரவும். கண், இதயம், சிறுநீரக நோய்களுக்கு இலவச அறுவைச்சிகிச்சை செய்ய உதவவும். வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் எனக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கு உதவவும், தையல் இயந்திரம் தரவும். வீட்டுத்தோட்டம் செய்வதற்கு நீர்ப்பம்பி தரவும். மலசலகூட வசதி செய்து தரவும். குடிநீர் வசதி இன்றி அவதியுறும் எமக்கு கிணறு அமைத்து தரவும்.' இவ்வாறான கோரிக்கைகளில் அமைந்த உதவி கோரும் கடிதங்கள், யாழ்ப்பாண பாதுகாப்பு படைக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள குடும்பங்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து நாளாந்தம் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தனிநபர் உதவிகோரல்களோ இவ்வாறிருக்க,
சமூகத்தின் முக்கிய கட்டமைப்புகளாகிய பாடசாலைகள், ஆலயங்கள், மாதர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மரண ஆதாரச்சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், சனசமூக நிலையங்கள், முன்பள்ளிகளிலிருந்தும் கற்றல் உபகரணங்கள், பாதணிகள், சீருடைகள், அலுவலக தளவாடங்கள், சீமெந்து, மணல், கூரைத்தகடுகள், கம்பித்தூண்கள் உள்ளிட்ட கட்டுமாணப் பொருட்கள் வாங்கித்தருமாறும், மைதானத்தை புனரமைத்து தருமாறும், முகப்பு நுழைவாயில், சுற்றுமதில், கட்டடங்கள், பாதுகாப்பு வேலிகள் அமைத்து தருமாறும், மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிப்பதற்கு விறகுகள் தருமாறும், கிணறுகளை சுத்தப்படுத்தியோ ஆழப்படுத்தியோ தருமாறும், யாழ்ப்பாண மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு முகவரியிட்டு அனுப்பப்படும் 'நிர்வாக அமைப்பு ரீதியான பலதரப்பட்ட கோரிக்கை கடிதங்களால்' பலாலி அஞ்சலக தபால்பெட்டி நிறைந்து வழிவதாக அறியக்கிடைக்கின்றது.
அதாவது, தாங்கள் தேர்தல் ஒன்றில் வாக்களித்து வெற்றிபெறச்செய்த அமைச்சர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் உரிமையோடு கேட்பது போலவே, அவர்களின் ஸ்தானத்தில் இருத்தி, மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியிடம் 'தமது வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு உதவுமாறு' மக்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அந்தளவுக்கு இராணுவத்தினரது மனிதநேய வேலைத்திட்டங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில், நைய்ந்து போயுள்ள சனங்களின் உளவியலை - வறுமையை பயன்படுத்தி இராணுவத்தினர் 'ஸ்கோர்' செய்துவிட்டதாக, வெறுமனே எழுந்தாமானமாக இராணுவத்தினர் மீது தமிழ் அரசியல் தரப்புகள் வழமைபோலவே குற்றம் சாட்டப்போகின்றனவா? அல்லது மக்களை அரசியல் மயப்படுத்த தவறிய தமது பக்க குற்றம் குறைகளை ஏற்றுக்கொள்ள, நம்மிடையே எத்தனை கட்சிகள், அமைப்புகள் தயார்?
இவ்விடத்தில் 2018ஆம் ஆண்டின் முற்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும். பணி இடம் மாற்றலாகிச் செல்லும் அந்தப் பிராந்தியத்துக்கு பொறுப்பான கேர்ணல் தர இராணுவ அதிகாரி ஒருவரை, அப்பகுதிக்குரிய ஊர் மக்கள் ஒன்றுகூடி, கட்டிப்பிடித்து ஆரத்தழுவி, அழுது புலம்பி, தமது தோள்களில் தூக்கிச்சுமந்து கொண்டாடி வழியனுப்பியிருந்தனர்.
இத்தனைக்கும் இராணுவத்தில் வழக்கமான மரபு ஒன்று உண்டு. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சாதாரண சிப்பாய்களிலிருந்து உயரதிகாரிகள் வரை பணி இடம் மாற்றம் வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அவ்வாறாயின், அந்த இரண்டே வருடங்களில் குறித்த இராணுவ அதிகாரியால் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ள முடிந்திருக்கிறது என்றால், ஐந்து வருடங்களாக பதவியில் தொடரும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், இந்த விடயத்தில் தோல்வி கண்டிருக்கின்றார் என்று தானே அர்த்தப்படும். இத்தனை வருட தமிழ் அரசியல் பரப்பில், தேர்தல் ஒன்றில் தமது பிரதிநிதி ஒருவர் தட்டுத்தடுமாறி தோற்றுவிட்டார் என்பதற்காகவோ, அல்லது அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறார் என்பதற்காகவோ, அவரது தொகுதிக்குரிய ஊர் மக்கள் பெருந்திரளாக ஒன்றுகூடி, தாளாத சோகத்தில் அழுது புலம்பியதாக பதிவுகள் உண்டா? அரசியல் அநாதை ஆக்கப்பட்டுள்ள தங்களை 'வரலாம் வரலாம் வா வைரவா' எனும் கணக்காக, மறுபடியும் அரசியலுக்கு வந்து தத்தெடுக்குமாறு அழைத்ததுண்டா?
இந்த நடப்பு ஆண்டில் எதிரும் புதிருமான இருவேறு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இதுவரை காலமும் தமிழ் மக்கள், தாங்கள் யாருக்கு எதிராக பகைமை உணர்ச்சிகளை கொண்டிருந்தனரோ, அந்த இராணுவத்தரப்பை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். 'தமிழ் தேசியத்தின் பெயரால்' பெரும் எழுச்சியாக திரண்டு வந்து வாக்களித்து வெற்றிபெறச்செய்து வந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பை செருப்பால் அடித்துத் துரத்தியிருக்கிறார்கள். (யாழ். வடமராட்சி கிழக்கில், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவுக்கு இத்தகையதொரு கசப்பான சம்பவம் நிகழ்ந்திருக்க, வடக்கு கிழக்கில் ஆங்காங்கே இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவிகளும் செருப்புகளால் மாலையிட்டு இழுத்துவரப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டிருந்தன.) இது எப்படி சாத்தியமாயிற்று?
நீண்ட நெடிய போருக்கு முன்னரும் சரி, போருக்குப் பின்னரான காலத்திலும் சரி, இராணுவத்தினர் மீது தமிழ் மக்களுக்கு ஒருவித வெறுப்புணர்ச்சியும், பகைமை உணர்வும் கூடியளவில் இருந்தது உண்மை தான். ஆனால் இந்த வெறுப்புணர்ச்சியை இரட்டிப்பாக்கி, அதை வைத்தே மக்களிடத்தில் எதிர்ப்பு அரசியல் செய்து ஆதாயம் தேடிக்கொள்வதில், தமிழ் அரசியல் தரப்புகள் கூடியளவு சிரத்தைக்கொண்டிருக்க, மாறாக இராணுவ தரப்பினரோ 'ரிஸ்க்' எடுத்து, இரு தரப்புக்கும் இடையில் பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்தி, நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் கூடியளவு வெற்றி கண்டிருக்கின்றனர் என்பதையே இத்தகைய சம்பவங்கள் இயம்புகின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கீரிமலை பிரதேசத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட 'நல்லிணக்கபுரம்' மாதிரிக்கிராமம் கூட தமிழ் அரசியல் தலைமைகளுக்கு பலத்த பேரிடி தான்.
இவை ஒருபுறமிருக்க, முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதிக்குரிய தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொண்டுள்ள அளவுக்கு, அதே மாவட்டத்தின் கிழக்கு மூலைப்பகுதியான 'ஈழத்தின் இதயப்பகுதி என்று அழைக்கப்படும் மணலாறு' பிரதேசத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு பகுதி வாழ் தமிழ் மக்களின் மனங்களை, இராணுவத்தினரால் வெற்றிக்கொள்ள முடியவில்லை என்றே சொல்லவேண்டும். அங்கு எல்லையோரக் கிராமங்களில் நடைபெற்றுவரும் சிங்கள குடியேற்றங்களாலும், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளினாலும் தமிழ் - சிங்கள இன முரண்பாடுகளினால் கலவரபூமியாகிக் கிடக்கிறது அந்தப்பகுதி. நல்லிணக்கத்தை தாறுமாறாக சீர்குலைக்கும் இதை ஒத்த சம்பவங்கள் யாழ்.வடமராட்சி கடல் பிரதேசங்களிலும், ஆனையிறவு சுண்டிக்குளம், மாத்தளன் சாலை கரையோரப்பகுதிகளிலும் இடம்பெற்றுவருவதாக தமிழ் மக்களுக்கு மெத்த மனக்கசப்பு உண்டு. அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தோடும், இராணுவத்தினரின் அனுசரணையோடும் இவை நிகழ்த்தப்படுவதாக தமிழ் அரசியல் தரப்புகள் காரசாரமாக குற்றம் சாட்டுகின்றன. ஆதலால் நல்லிணக்கம் தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புகள், இந்தப் பகுதிகளிலும் கொதித்துக்கொண்டிருக்கும் முரண்பாடுகளை அணைப்பதே நன்மை பயக்கும். நிலையான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு இது மிகவும் அவசியமானது.
'யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்கள் தத்தமது காணிகளில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். மக்களுக்கு உரித்துள்ள ஆதனங்கள் மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும். குறித்த கொள்கைக்கு அமைய, கட்டம் கட்டமாக காணிகளை விடுவித்து மக்களின் மீள்குடியேற்றத்துக்கும், இயல்பு வாழ்க்கைக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். ஆயினும், தேசிய பாதுகாப்பு காரணங்களினால் இவ்வாறு சில காணிகள் கையளிக்கப்பட முடியாது போனால், அந்தக்காணிகளுக்கு உரித்துடையவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கி மாற்றுக்காணிகளில் குடியமர்த்த வேண்டும். இதற்கென நிலையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும். கடந்தகால அரசாங்கம் இந்த விடயத்தில் தவறிழைத்து உள்ளது. தற்போதைய அரசாங்கமாவது இதைக்கவனத்தில் கொள்ள வேண்டும்.' என்று கடந்த 24 மார்ச் 2018 அன்று, யாழ்.பாதுகாப்பு படைக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். இதற்கமைய ஒழுங்கமைக்கப்பட்டவாறு பகுதி பகுதியாக காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
2015 டிசெம்பர் 30ஆம் திகதியிலிருந்து 2018 ஒக்டோபர் 19ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வடக்கில் 88 ஆயிரத்து 599 ஏக்கர் காணிகளும், கிழக்கில் 61 ஆயிரத்து 126 ஏக்கர் காணிகளும் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தலைமையகம் அறிவித்துள்ளது.
இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, இவ்வருட இறுதிக்குள் (டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர்) காணி உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் என்று, ஒக்டோபர் 03.2018 அன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற 'வடக்கு கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி தொடர்பான' ஜனாதிபதி செயலணியின் மூன்றாம் கட்டக்கூட்டத்தின் போது, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் பணிப்புரை விடுத்துள்ளார்.
சமகாலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, உழைப்புக்கேற்ப ஊதியம் இன்மை உள்ளிட்ட நாளாந்த சீவியத்துக்கான பிரச்சினைகளினால் இலங்கை திணறிக்கொண்டிருக்கின்றது. அதிலும் யுத்தத்தால் மிகவும் மோசமாக சிதைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தப்பிரச்சினையோ பூதாகரமாக தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. வேலையற்ற பட்டதாரிகள் நாடு முழுவதும் கவனவீர்ப்பு, கண்டனப்பேராட்டங்களை நடத்திவருகின்றனர். இத்தகையதொரு நெருக்கடியான சூழலில் எப்படியாவது பணம் சம்பாதித்துவிட வேண்டும் எனும் உந்துதலில், சட்டவிரோத தொழில்களில் ஈடுபடவும் தமிழ் இளைஞர் யுவதிகள் தலைப்பட்டுள்ளதை நாளாந்தம் செய்திகளில் காணக்கிடைக்கின்றது. இந்நிலையில் அவர்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவதையும், நெறிபிறழ்வான நடத்தைகளுக்குள் இழுபட்டுச்செல்வதை தடுத்துநிறுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு, இராணுவ கட்டமைப்புக்குள்ளே இராணுவம் சாராத தொழில்வாய்ப்புகளை உருவாக்கி, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மட்டும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான இளையோர்கள், இலவச மருத்துவ காப்பீடு - ஓய்வூதியம் உள்ளிட்ட அரச சலுகைகள் அடங்கலாக, நாற்பதாயிரம் முதல் நாற்பத்தைந்தாயிரம் வரையான அரசாங்க ஊதியக்கொடுப்பணவோடு தொழில்நிலைகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் கூறுகின்றன.
இதற்கமைய, யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியால், பலாலி படைத்தளப்பிரதேசத்தில் நூற்றுக்கும் அதிகமானோருக்கு தொழில்நிலைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொழில்நிலைகளில் அதிகளவாக உள்வாங்கப்பட்டுள்ளோர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் ஆவர். கூடவே, பட்டதாரிகளுக்கு அவர்களின் பட்டப்படிப்புகளுக்கு ஏற்ப இராணுவத்தில் தொழில்களை வழங்கமுடியாது எனினும்கூட, சாதாரணநிலைப் பணிகளுக்கு அவர்களை உள்ளீர்த்து தொழில்நிலைகள் வழங்கப்பட்டுள்ளன. 'இது உப்புக்கல்லை நீரில் போட்டக்கதை தான். கடைசியில் உப்புக்கல்லைத்தேடும் போது அது எப்படி கரைந்து காணாமல் போயிருக்குமோ, அதையொத்த இதுவொரு அரசியல் நிகழ்ச்சிநிரல். தமிழ் இளைஞர் யுவதிகளை காலப்போக்கில் இராணுவத்துக்குள் முழுமையாக உள்ளீர்த்து, அவர்களின் இனத்தத்துவத்தை மூழ்கடிக்கும் நீண்டகால நோக்கத்தைக்கொண்ட வேலைத்திட்டம் இது.' என்று, தமிழ் அரசியல் அவதானிகள் சாடுகின்றனர். அவர்களின் சந்தேகங்களை களைந்து, குறித்த விமர்சனங்கள் - குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியதும் இராணுவ தலைமையகத்தின் கடமை.
எதுவாயினும், விவசாயப்பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முன்னாள் போராளி ஒருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் இந்த பத்தியாளருக்கு கிடைத்தது. 'தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் குடும்பத்தின் மொத்தச்சுமையும் என்மேல் பொறுத்துவிட்டது. இப்படியொரு சுமை 2009க்கு முன்னர் என்மீது விழுந்ததில்லை. ஆதலால் எனக்கு இதுவொரு புதிய அநுபவமாக இருந்தது. நிரந்தரத்தொழில் தேடி அலைந்துகொண்டிருந்தேன். எனக்கானது என்று ஒரு தொழிலை வரையறை செய்துகொள்வதில் இலக்கு அற்று ஓடிக்கொண்டிருந்தேன். கூலி வேலைகளுக்கு கையாள் ஆக யார் யாரெல்லாம் கூப்பிடுகிறார்களோ, அவர்களுக்குப் பின்னால் எல்லாம் ஒரு எடுபிடியாக திரிந்துகொண்டிருந்தேன். போதியளவு ஊதியம் கிடைக்கவில்லை. குடும்பச்சுமை என்னை மேலும் மேலும் அழுத்திக்கொண்டிருந்தது. அதிலிருந்து வெளியே வந்து அமைதியாக இருக்கமுடியவில்லை. வாழ்க்கை பற்றிய பெரியதொரு பயம் எப்போதும் என்னை சூழ்ந்திருந்தது. என்ன வாழ்க்கை இது? எதற்காக இந்தப்பிழைப்பு? என்று சலித்துக்கொண்டு பல சந்தர்ப்பங்களில் பலதரப்பட்ட மனிதர்களுக்கு முன்பாக கூனிக்குறுகி அவமானப்பட்டு நின்றிருக்கிறேன். யாருக்கும் தெரியாமல் எங்காவது அநாதரவாகப்போய் அடையாளம் காணாமல் செத்துவிடுவோம் என்றுகூட சிலநேரங்களில் யோசித்திருக்கிறேன். ஆனால், வயோபதிகால நோய்களால் அவதியுறும் அம்மா, திருமண வயதை தாண்டியிருக்கும் அக்கா, உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் தங்கைச்சி, இப்படி அவர்கள் பற்றிய எண்ணங்கள் எல்லாம் அடிக்கடி என் கண்முன்னே வந்து அச்சுறுத்திக்கொண்டிருக்கும். களத்தில் நின்று போராடியதை விடவும், நாளாந்தம் வாழ்க்கையோடு போராடி மேலே வருவது பெரும் போராட்டமாய் போய்ச்சு. செத்துவிடுவோமோ? தோற்றுவிடுவோமோ? என்று, பயந்து பயந்து மீண்டுவர முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். அந்த நாட்கள் மிகவும் கொடிய பயங்கரமான கருப்பு நாட்கள். நித்தமும் செத்துச்செத்து பிழைத்துக்கொண்டிருந்தேன். தனியார்துறைகளில் தொழில் கேட்டுப்போனால் 'முன்னாள் போராளி' என்பதைக்காரணம் காட்டி, தொழில்தருநர்கள் மிரண்டுபோய் நிற்கிறார்கள். அரசாங்க வேலை, அதை கற்பனை செய்துகூடப்பார்க்க முடியாது. குறைந்தபட்சம் அங்கு ஓ.எல் தரச்சித்தி கேட்கிறார்கள். நான் படித்தது என்னவோ எட்டாம் தரக்கல்வி வரைக்கும் தான். ஆனால் இன்று இந்த வேலைவாய்ப்பு, சமுகத்தில் நானும் வாழத்தகுதியுடையவன் என்ற தைரியத்தை எனக்கு தந்திருக்கு. மற்றவர்களுக்கு நானும் சமமானவன் என்று ஒரு உணர்வு இப்போது எனக்குள் இருக்குது. யாருக்கும் கைகட்டி நின்று சேவகம் செய்ய வேண்டியதில்லை. அம்மாவின் மருத்துவ செலவுகளை கவனிக்க முடியுது. தங்கையின் உயர்படிப்புக்கு சேமித்து வைக்க முடிந்திருக்கு. அக்காவுக்கு நல்லதொரு வாழ்க்கைத் துணையைத்தேடி அமைத்துக்கொடுக்க உதவியிருக்கு. எனது திருமணத்துக்காகவும் கொஞ்சப்பணம் சேமித்து வைத்திருக்கிறேன்.'
இப்படி அவர் சொல்லி முடிக்கும்போது, அவரது கண்களை உற்றுப்பார்த்தேன். அவரது கண்கள் கலங்கியிருந்தன. அந்தக்கண்ணீரில் தமிழ் சமூகம் சாட்டுவது போல, 'இனத்துக்கு எதிரான துரோகம்' தெரியவில்லை. மாறாக, 'தான் சார்ந்திருக்கும் சமூகம் தகுந்த நேரத்தில் தன்னைத் தாங்கிப்பிடிக்கவில்லையே, தன்னைத் தேற்றவில்லையே, தன்னை வாழவைக்கவில்லையே' என்ற கோபமும், விரக்தியுமே அந்தக் கண்ணீரில் எனக்குப்பட்டது. ஆம், உண்மை தான். தாம் சார்ந்திருக்கும் இனத்தின் விடுதலைக்காக போராடப்புறப்பட்டு களமுனைகளில் அபாரமான வெற்றிகளைப் பெற்றபோதெல்லாம், அந்தப் போராளிகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடிய ஒரு சமூகம், யுத்தத்தில் தோல்வியடைந்த பின்னர் அதே போராளிகளைத் தூக்கி குப்பைத்தொட்டிக்குள் கடாசி வீசியிருக்கிறது.
இறக்கைகள் துண்டிக்கப்பட்ட ஒரு பறவையை வானத்துக்கு சுமந்து சென்று, அதனைத் திடீரென்று அந்தரத்தில் மிதக்க விட்டால், அது எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக தரையை நோக்கி வந்து முகம் குப்புற வீழ்ந்து அடிபட்டுத் துடிக்குமோ? அதுபோலவே துடித்துக்கொண்டிருந்த முன்னாள் போராளிகள், இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள தொழில்துறைகளை, 'இதர அரசாங்க உத்தியோகத்தர்கள் போலவே தாங்களும் சமூகத்தில் சமவாய்ப்புடன் வாழ்வதற்கு' கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகவே உணருகின்றனர்.
பேருந்து தரிப்பிடம் ஒன்றில் தரித்து நிற்கும்போது, இராணுவ வீரர் ஒருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. 'யாழ்ப்பாணத்தில் மினிபஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, அதில் ஏறிய தமிழ் கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு யாருமே எழுந்து இடம்கொடுக்கவில்லையாம். இதனை அவதானித்த எங்கோ தொலைவில் அமர்ந்திருந்த மற்றுமொரு இராணுவ வீரர் தான் அந்த கர்ப்பிணிப்பெண்ணை கூப்பிட்டு, எழுந்து தனது இருக்கையை கொடுத்து உதவியதாகக் கூறி, தமிழ் மக்களிடம் இரக்க மனோபாவம் இல்லை.' என்று குறைபட்டுக்கொண்டார். இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலும் இல்லை. சமீபகாலமாக மூத்தோரை மதிப்புறுத்தும் மாண்பு, தமிழ் சமூகத்தினரிடையே அருகி வருவதை பொதுஇடங்களிலும், பேருந்து பயணங்களின் போதும் தாராளமாக காண முடிகின்றது. அரசியல் சமூக பொருளாதார செயற்பாட்டு இதழான நிமிர்வின் ஆசிரியரும், எனது ஊடக நண்பருமாகியவர் தனது முகப்புப்புத்தக பக்கத்தில், 'பனங்கொட்டை பதியம் போடுவதற்கு கூட, கூலிக்கு ஆட்களை தேடியலைவதைக் காண முடிகின்றது. உடல் உழைப்பும் - அர்ப்பணிப்பும் அற்ற ஒரு சமூகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றோமா?' என்று பதிவிட்டு, தனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தியிருந்தார். அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் 'பனம்' பழத்தின் சுவையை விடவும், 'பணம்' பழத்தின் சுவை அதிகமாகவே உணரப்படுவதால் தான், இந்த நிலைமையோ? யார் அறிவார்?
இருந்தபோதிலும், அந்த இராணுவ வீரருக்கு இருவேறு சம்பவங்களை சுட்டிக்காட்டினேன். இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ; சேனநாயக்க, 'யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை உரித்துடையவர்களிடம் மீளவும் ஒப்படைக்க வேண்டும். யுத்த காலத்தில் இருந்த நிலைமைகள் தற்போது இல்லை. ஆதலால் படைகள் நிலைகொண்டுள்ள பிரதேசங்களை குறுக்கி, நிலங்களை மக்களிடம் கையளிப்பதற்காக சில இடங்களை அடையாளப்படுத்தி உள்ளோம். பொதுமக்களின் காணிகளில் உள்ள படைமுகாம்கள் மற்றும் இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கும், அந்த இடங்களிலிருந்து இராணுவ முகாம்களை அப்புறப்படுத்துவதற்கும் சிறிது காலஅவகாசம் தேவைப்படுகின்றது.' என்று, எவ்வளவுக்கு எவ்வளவு மனிதாபிமானத்தை வெளிப்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நியாயத்தோடு பேசியிருக்கிறார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள முன்னாள் இராணுவத்தளபதியும், இந்நாள் அமைச்சருமாகிய சரத்பொன்சேகா, 'இராணுவ பாதுகாப்பு கல்லூரியில் படிக்காதவர்களை இராணுவத்தளபதியாக நியமித்தால் இதுதான் நிலைமை. இப்படித்தான் முட்டாள்த்தனமாக ஏதாவது உளறிக்கொண்டிருப்பார்கள். காணிகளை ஒப்படைத்து படைகளை குறைக்கும் யோசனையானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும். இந்த நடவடிக்கை இராணுவத்தளபதியின் அநுபவ இன்மையைக் காட்டுகின்றது. இராணுவத்தளபதி இடிஅமீன் போல சர்வாதிகாரமாக தொழில்படுகின்றார். காணிகளை ஒப்படைப்பதற்குப் பதிலாக, தேவையேற்பட்டால் மக்களின் காணிகளை இன்னும் கையகப்படுத்தி, இராணுவத்தை பலப்படுத்தி நிலைகொள்ளச்செய்ய வேண்டும். நான் பதவியில் இருந்தால், எனது நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கும்.' என்று, எவ்வளவுக்கு எவ்வளவு இனத்துவேசத்தை கக்க முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு முஷ;டியை முறுக்கிக்கொண்டு நிற்கிறார். தமிழ் - சிங்களம் இருதரப்பிலும் நல்ல பண்புகளை உடையவர்களும் உள்ளனர். குரூர எண்ணங்களை உடையவர்களும் உள்ளனர். எதையும் பொத்தம் பொதுவாக மதிப்பிட்டுப் பேசிவிட்டுப்போக முடியாது. என்று, அந்த இராணுவ வீரருக்கு தெளிவுபடுத்தினேன்.
இத்தகைய குரூர சிந்தனைகளைக் கொண்டுள்ள சரத்பொன்சேகாவுக்கு தானே, தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு வழங்கி, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் வாக்களித்து அவரை பெற்றிபெறச்செய்யுமாறு, தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இன்றைக்கு அந்தச்சூழலை மீள்நினைவுபடுத்தும்போது, சந்தர்ப்பவாதங்களுக்கு ஏற்ப மட்டும் முடிவுகளை எடுத்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களை எப்படியெல்லாம் தவறாக வழிநடத்திச் சென்றிருக்கிறது? மக்களின் வாக்குரிமையை எப்படியெல்லாம் கபளீகரம் செய்திருக்கிறது? என்பதன் ஆபத்தை உணர முடிகின்றது அல்லவா? மைத்திரி - ரணில் கூட்டு அரசிலும்கூட சரத்பொன்சேகா, தனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியைத்தருமாறு ஒற்றைக்காலில் நின்றார், நிற்கின்றார். இப்போதும் அந்த அமைச்சு பதவி பற்றியே கனவு காண்கின்றார். ஆனால் சரத்பொன்சேகாவுக்கு கிடைத்தது என்னவோ, வனஜீவராசிகள் அமைச்சு பொறுப்புத்தான். காட்டாட்சி சிந்தனை கொண்டுள்ளவருக்கு இது மிகவும் பொருத்தமான அமைச்சு தான்.
நிலைமைகள் இவ்வாறிருக்க, இராணுவத்தினரின் மனிதநேய வேலைத்திட்டங்கள் தொடர்பில், வவுனியாவில் வசிக்கும் சிவில் சமூக மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஒருவரிடம் கருத்துக்கேட்டேன். 'அவர்கள் மக்களுக்கு என்ன தான் செய்தாலும், இறந்த காலத்தில் நடத்தப்பட்டுள்ள சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறையில் தவறிழைத்து விடுவார்களாயின், அது இதுநாள் வரைக்கும் அவர்கள் நடந்துவந்து கொண்டிருக்கும் நல்லிணக்கப் பாதையிலிருந்து நீண்ட தூரம் அவர்களை பின்னோக்கித்தள்ளிவிடும்.' என்று எச்சரித்தார்.
யாழ்.பாதுகாப்பு படைகளின் தலைமையகம் பலாலியில், கடந்த 20 செப்டம்பர் 2018 வியாழக்கிழமை அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், 'யார் விமர்சித்தாலும் - தடுத்தாலும், தமிழ் மக்களுக்கான எமது நலவாழ்வுத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும். எவரது விருப்பு வெறுப்புகளுக்காகவும் திட்டங்களை நிறுத்த முடியாது. இவை, எத்தகைய பிரதிஉபகாரங்களையும் எதிர்பாராமல், மக்களுக்கான சேவை என்பதை மட்டுமே முழுவதும் நோக்கமாகக்கொண்டு, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக மேம்பாட்டுக்கான உதவித்திட்டங்கள்.' என்று, யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அறிவித்திருக்கிறார்.
இந்த பத்தியின் தொடக்கத்தில் ஏலவே நான் குறிப்பிட்டுள்ளதைப்போல, தமிழ் மக்களும் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப்போல நித்தமும் அணுகத்தொடங்கிவிட்டனர். இளகிய இரும்பைக் கண்டால், கொல்லன் எதையோ தூக்கித்தூக்கி அடிப்பானாம். அதைப்போலவே இராணுவத்தினரும் முன்னரைப்போல அதிக 'ரிஸ்க்' ஏதும் இல்லாமல், 'உதவித்திட்டங்களின் பெயரால்' தமிழ் மக்களின் மனங்களில் சாவகசமாகப் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல்பிரிவைப் போன்று இனிவரும் காலங்களில் இலங்கை இராணுவத்தினரும், பலாலி கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வெளியே, கிராம அலுவலர் பிரிவுகளை 'கோட்டங்களாக' ஒருங்கிணைத்து, ஆங்காங்கே 'மக்கள் நலன் காப்பகம்' என்ற பெயரிலோ, 'மக்கள் தொடர்பகம்' என்ற பெயரிலோ, சிவில் அலுவலகங்களை திறந்தாலும் கூட இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
'சிங்களப்படை வெறியன் சிரிச்சா, நீ சிரிக்காத. அவன் சிரிச்சுப் பேச வீட்டுக்கு வந்தா, பாய் விரிக்காத' என்று, இனஓர்மம் கற்பிக்கும் ஈழத்தின் உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தனின் பாடல்களுக்கான தேவைகள் அற்றுப்போய், 'வீட்டுக்கு வீடு வாசல்படி போல, வீட்டுக்கு வீடு இராணுவம் வேண்டும்.' என்று, தமிழ் மக்களே வலிந்து திணித்து கேட்பது போல, ஒரு ஈர்ப்புச்சூழல் உருவாகி வருகிறது. 'பல்லுக்குத்தவும், தலைவலிக்கு தைலம் தேய்க்கவும் கூட இராணுவத்தினரை கூப்பிடும் அளவுக்கு' மக்களின் மனம் நெகிழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்தப்போக்கு நல்லதா - கெட்டதா? சரியா - தவறா? என்பதற்கு அப்பால், இது இராணுவத்தரப்பினரின் வெற்றியா? இல்லை, தமிழ் அரசியல் தலைமைகளின் தோல்வியா?
இவ்வருடம் செப்டம்பர் மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழமுதம் விழா முற்றத்தில் நின்று, தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளரும் பிரபல ஓவியருமான புகழேந்தி அவர்கள் கூறியது போலவே, 'அறிவற்ற உணர்வும் - உணர்வற்ற அறிவும், ஈழத்தமிழர்களுக்கு இனி ஒருபோதும் தேவையே இல்லை தான்.' என்பது எத்தனை பொருத்தம்!
- செஞ்சுடர்.சே –
(இந்த பத்தி 2018.10.10 புதன்கிழமை அன்று எழுதப்பட்டது.)
நன்றி: தமிழ்தந்தி 28 ஒக்டோபர் 2018 ஞாயிற்றுக்கிழமை பதிப்பு
No comments:
Post a Comment