சிறிதரனின் ஏமாற்றுக்களை நம்பமாட்டேன் - சம்பந்தர் அதிரடி! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, November 24, 2018

சிறிதரனின் ஏமாற்றுக்களை நம்பமாட்டேன் - சம்பந்தர் அதிரடி!

போர்க்களமானது கூட்டமைப்பின் எம்.பிக்கள் கூட்டம்… சம்பந்தன் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்கள்… 

ஒற்றுமைக்காக சத்தியக்கடதாசியில் கையெழுத்திட்டார் சிறிதரன்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று மதியம் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தபோது ஏற்பட்ட கடுமையான மோதலிற்கு பின்னர், இன்றைய சந்திப்பிலேயே மிகக்கடுமையான வார்த்தை மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலின் உச்சக்கட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய சி.சிறிதரன், அவர் பிழையாக நடப்பதாக குற்றம்சாட்டினார்.

இன்று நாடாளுமன்ற அமர்வுகள் மதிய போசணத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மதிய போசணத்தை முடித்துக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஒன்று கூடினர். அவசர சந்திப்பிற்காக அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வது பற்றி இரா.சம்பந்தன் விளக்கமளித்தார்.

ஒக்ரோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சட்டவிரோதம், நாடாளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் தொடர்வது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், அதற்கு மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்த 122 எம்.பிக்களும் கையொப்பமிட வேண்டுமென்றும் இரா.சம்பந்தன் கோரினார். அந்த "இந்த அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாங்களும் ஆதரவாக வாக்களித்தோம்." என்ற சத்தியக் கடதாசியிலேயே கையொப்பமிட கோரப்பட்டது.

மேலோட்டமான சில விவாதங்கள், கருத்து முரண்பாடுகளின் பின்னர் எம்.பிக்கள் கையெழுத்திட சம்மதித்தனர்.

அப்போது திடீரென சிறிதரன் எம்.பி, தான் கையெழுத்திட மாட்டேன் என்றார்.

கையெழுத்திட வேண்டுமென இரா.சம்பந்தன் வற்புறுத்தினார். இரு தரப்பும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க, சிறிது நேரத்தில் உக்கிரமான வார்த்தை மோதல் ஆரம்பித்தது.

மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு நிபந்தனை விதித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறது என சிறிதரன் கேள்வியெழுப்பினார்.

இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளிற்கிடையிலான மோதலில் நாங்கள் ஒரு தரப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லையென்றார். ரணிலிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கூட்டமைப்பு ஆதரிப்பதாக சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்களிடமும் பகிரப்படும் கருத்துக்களை சுட்டிக்காட்டினார்.

எனினும், இரா.சம்பந்தன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

"நீர் கையெழுத்திடாவிட்டால், மஹிந்த ராஜபக்சவிடம் காசு வாங்கிக் கொண்டுதான் கையெழுத்திட மறுத்ததாகத்தான் சனங்கள் கதைப்பார்கள். ஏற்கனவே எங்களிடமிருந்து ஒருவர் போய்விட்டார். நீர் இரண்டாவது ஆளாகுவீர். தனியே உம்மை மட்டுமல்ல, கூட்டமைப்பையும் சேர்த்துத்தான் காசு வாங்கியதாக கதைப்பார்கள். சனங்கள் மட்டுமல்ல, நானும் சொல்வேன்- நீர் மஹிந்தவிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கையொப்பமிட மறுத்தீர் என." என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இரா.சம்பந்தனிடமிருந்து இப்படியொரு கருத்து வருமென யாரும் எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக நிதானம் தவறாத இரா.சம்பந்தர் இன்று அப்படி கதைத்தது சிறிதரனை மேலும் சீண்டியிருக்க வேண்டும். சம்பந்தர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். சம்பந்தரும் பதிலுக்கு குற்றம்சாட்ட, கடுமையான மோதலாகியது.

மோதலின் உச்சக்கட்டத்தில்- "நீங்கள் செய்வதெல்லாம் பிழைதானே. யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் என்ன செய்தீர்கள்? வடக்கில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள், நீங்கள் சுகாதார அமைச்சரை பிடித்து உங்கள் மாவட்ட ஆட்களை நியமித்துள்ளீர்கள். இது சரியா சொல்லுங்கள்" என கிடுக்குப்பிடி பிடித்தார்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. வரவு செலவு திட்டங்களிற்கு ஆதரவளிப்பது தொடக்கம், அரசியலமைப்பு உருவாக்க பணிகளிற்காக வழங்கப்படும் நிபந்தனையற்ற ஆதரவு, அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களையெல்லாம் கடும்தொனியில் குறிப்பிட்டார்.

சம்பந்தரிற்கு ஆதரவாக எம்.ஏ.சுமந்திரனும் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். "சர்வதேசமும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஒற்றுமையை குழப்பக்கூடாது" என கூட்டமைப்பு தலைமையால் கூறப்பட்டது.

"சர்வதேச சமூகம் எமக்காக நிற்பதாக கூறுகிறீர்கள். சரி, இப்போது நாம் கையொப்பமிடுவதால் எமக்கு தீர்வை பெற்றுத்தருவார்கள் என இரண்டு நாடாவது வாக்குறுதியளித்ததா?" என சிறிதரன் கேள்வியெழுப்பினார்.

"கையெழுத்திடா விட்டால், நான் ஊடகங்களின் முன்பாக நீர் குழப்பியதாக கூறுவேன்" என இரா.சம்பந்தன் கூறினார்.

" அரசியலமைப்பு பணிகள் தொடர்பாக நாங்கள் சில விமர்சனங்களை வைத்தபோது, எங்களை முட்டாள்கள் என்பதை போல ஒருமுறை கூறியிருந்தீர்கள். அதற்கு நாம் ஊடகவயலாளர் சந்திப்பு வைத்து பதிலளித்தோமா?. அரசியலமைப்பின் ஒற்றையாட்சிதன்மை குறித்து நாம் பேசியபோது, சுமந்திரன் எமக்கு சமஷ்டியை பற்றி தெரியாதென்றார். நாம் பகிரங்கமாக பதில் சொன்னோமா?. ஒற்றுமைக்காகத்தான் நாம் பொறுமையாக இருந்தோம்" என்றார் சிறிதரன்.

இடையிடையே மாவை சேனாதிராசா குறுக்கிட்ட போது, மாவை சேனாதிராசாவை கடும் தொனியில் பேசி, அடக்கினார் சிறிதரன்.

சிறிதரன் குற்றம்சாட்டியபோது, வாய்திறவாமல் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த சுமந்திரன், பின்னர் மெதுவாக "இங்கே பாருங்கள் சிறி… இது ரணிலை ஆதரிப்பதில்லை. நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் சத்தியக்கடதாசிதான்" என நீண்ட விளக்கமளித்து, சமரசப்படுத்தினார்.

இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னரும் மஹிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை. ஒருமுறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பார்ப்போமே என்றும் கூறினார்.

பின்னர், பல எம்.பிக்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

பின்னர், "ஒற்றுமையென்று ஐயா சொல்கிறார். அதனால் கையொப்பமிடுகிறேன். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கை உயர்த்த மாட்டேன்" என கூறி, அந்த சத்தியக் கடதாசியில் சிறிதரன் கையொப்பமிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad