வெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்; சம்பந்தன் கொதிப்பு!
கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் இனரீதியிலான வெட்டுப்புள்ளி வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிங்களவர் 105, முஸ்லிம்கள் 120, தமிழர்கள் 130 என்ற அடிப்படையில் வெட்டுப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, கிழக்கு ஆளுனருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தின் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கௌரவ.ரோஹித்த போகொல்லாகம ஆளுநர் கிழக்கு ஆளுநர் ஆளுநர் செயலகம் உவர்மலை திருகோணமலை
கௌரவ ஆளுனர் அவர்கட்கு,
கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு தொடர்பாக மேற்குறித்த விடயம் தொடர்பில் எனக்கு கிடைத்துள்ள தகவல்களை பாதக விளைவுகள் எதுவும் ஏற்படும் முன்னர்,நீங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை கடந்த ஜூலை 14ம் திகதியன்று இடம்பெற்றிருந்தது.
விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடாத்தப்பட்ட போது, இனரீதியிலான அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்பதற்கான எந்தவொரு பிரத்தியேக பிரிவுகளும் கொடுக்கப்படவில்லை. எல்லா விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தற்போது கிழக்கு மாகாண சபையின் சில நிர்வாக உத்தியோகத்தர்களினால் ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் இனரீதியிலான அடிப்படையில் பின்வருமாறு அமையும் என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிங்களவர் 105 முஸ்லிம்கள் 120 தமிழர்கள் 130
ஆட்சேர்ப்பு தொடர்பில் இப்படியான ஒரு நடைமுறை முன்னர் எப்போதும் பின்பற்றப்படவில்லை என்பதோடு, இது அப்பட்டமான ஒரு பாகுபாடு காட்டும் அநீதியான செயலாகும். எந்த அடிப்படையில் இப்படியான ஒரு தீர்மானத்தினை உத்தியோகத்தர்கள் எடுத்தார்கள் என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்தில் தனிப் பெரும்பான்மை சமூகமான தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பாதக விளைவுகளை உருவாக்கும்
அண்மைக்காலங்களில் கல்வி விடயங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகம் தமிழ் சமூகமாகும். 30 வருடங்கள் நிலைத்த ஆயுத போராட்டமானது, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களிலேயே இடம்பெற்றது, இதன் நிமித்தம் தமிழ் பாடசாலைகள் தேவையான ஆசிரியர்களும் ஏனைய சலுகைகளும் இன்றி இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் இந்த பிரதேசங்கள் கல்வியில் பின்னோக்கி நகர நேர்ந்தது. இந்த பின்னணியில், 3ம் பந்தியில் குறிப்பிட்டுள்ளவாறு எவ்வாறு வெட்டுப்புள்ளிகள் முடிவு செய்யப்பட்டது என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை.
எனவே அனைத்து விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்படுவதையும் இன அடிப்படியில் எந்தவொரு பாகுபாடும் காட்டப்படாமல் இருப்பதனையும் நீதி நிலைநாட்டப்படுவதனையும் உறுதி செய்யும் முகமாக உரிய திருத்த நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என நான் மிக வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள இரா. சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் திருகோணமலை எதிர்க்கட்சி தலைவர் இலங்கை பாராளுமன்றம்
No comments:
Post a Comment