கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் நேற்றைய கூட்டத்தில் முடிவு ஏதுமில்லை
வெள்ளியன்று மீண்டும் கூடிப் பேச முடிவு
கொழும்பில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிவு ஏதும் எட்டப்படாமலேயே வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவளிப்பதாயின் தமிழர் நலன் பேணும் விடயங்களை ஒட்டி எழுத்து மூல உறுதிப்பாட்டை கூட்டமைப்பு பெற வேணடும் என ரெலோ பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
எழுத்து மூல உறுதிமொழியை வலியுறுத்துவது பாதகமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது என்ற சாரப்பட சம்பந்தன் கருத்துத் தெரிவித்தார்.
நிபந்தனையாக விதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. பலவற்றில் இணக்கமும் எட்டப்பட்டது.
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை நடைமுறைப்படுத்தல், தற்காலிக இணைப்பையேனும் வலியுறுத்துதல் போன்ற விடயங்கள் இன்னும் பேசப்பட வேண்டியுள்ளன என்று கூறப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் இரா.சம்பந்தன், மாவை சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந் திரன் ஆகியோரும், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், ஆர்.இராகவன் ஆகியோரும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என்.ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோரும் நேற்றைய கூட்டத்தில் பங்குபற்றினர்.
No comments:
Post a Comment