பகிரங்க மன்னிப்பு கோராவிட்டால் கூட்டமைப்பிற்கு வழங்கிய ஆதரவை மீள்பரிசீலனை செய்வோம்: கருணாவின் கட்சி எச்சரிக்கை
மட்டக்களப்பில் தமது ஆதரவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்த உள்ளூராட்சிசபைகளின் ஆதரவை மீள்பரிசீலனை செய்யும் நிலையேற்படும் என விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது.
தமது கட்சியின் தலைவரான கருணாவைப் பற்றி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீண்பழி சுமத்தி பகிரங்கமாக உரையாற்றி வருவதாகவும், இதற்காக கருணாவிடம் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தாம் வழங்கிய ஆதரவை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுமென்றும் எச்சரித்துள்ளனர்.
மட்டக்களப்ப கல்லடியிலுள்ள அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்த எச்சரிக்கையை விடுத்தனர்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பிரதித்தலைவரும், முன்னாள் கிழக்கு அமைச்சருமான து.நவரெட்ணராஜா, பொதுச்செயலாளர் கமலதாஸ், ஊடகப்பேச்சாளர் எஸ்.வசந்குமார் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
வவுணதீவில் பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது வீண்பழி சுமத்தி உண்மையை மறைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்படுகிறது, தமது கட்சியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் இப்படியான வீண்பழிகளை சுமத்துவதாகவும் அவர்கள் குற்றம்சுமத்தினர்.
அண்மையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் வவுணதீவு சம்பவத்துடன் கருணாவை தொடர்புபடுத்தி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment