மைத்திரிக்கு அடி! கலைப்பு தவறு என்றது நீதிமன்றம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, December 13, 2018

மைத்திரிக்கு அடி! கலைப்பு தவறு என்றது நீதிமன்றம்!!

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு அரசமைப்புக்கு எதிரானது என உயர்நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பளித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி  அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி, 13 மனுதாரர்கள், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை,இம்மாதம் 4ஆம் திகதி தொடக்கம், 7ஆம் திகதி வரையான நான்கு நாட்கள், உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம் விசாரணை நடத்தியிருந்தது.

இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று உயர்நீதிமன்றப் பதிவாளர் அறிவித்திருந்தார்.

எனினும், விசாரணை அறைக்கு நீதியரசர்கள் குறித்த நேரத்துக்கு வரவில்லை. 7 நீதியரசர்களும் மாலை 4.50 மணியளவிலேயே 502 ஆம் இலக்க நீதிமன்ற அறைக்கு வந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் தீர்ப்பை வாசித்தனர். இந்தத் தீர்ப்பிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவு சட்டவிரோதமானது என்று ஏகமனமாக தீர்ப்பளித்தனர்.

நான்கரை ஆண்டுகளுக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று ஏழு நீதியரசர்களும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியே அதனை செய்ய முடியும் என்றும் நீதியரசர்கள் தீர்ப்பில் கூறினர்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், உயர்நீதிமன்றத்துக்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொளுத்திப் பெரும் ஆரவாரக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

அதேவேளை, உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பெருமளவு பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad