அண்மையில் மாவீரர் நாள் ஒன்றுகூடலின்போது மூன்று விடயங்களை பதிவுசெய்தேன்.
ஒவ்வொரு மாவீரர்களுக்கு பின்னாலிருந்த வலிகள். தங்கள் குடும்ப கஸ்டங்களை கடந்து மக்களின் துன்பகரமான வாழ்வுக்கு நிரந்தர விடிவை பெற்றுக்கொள்வதற்கான அவர்களின் தேடல், விடாமுயற்சி.
ஜெயசிக்குறு என்ற பெரும்சமரை எதிர்கொண்டபோது ஒரு நேர கஞ்சியோடும் கால்களில் போடுவதற்கு செருப்புகளுமின்றி கடலை பார்த்த நாட்கள்.
ஆனால் அவற்றை கடந்து ஓயாத அலைகளாய் எமது மண்ணை மீட்கும் போரில் அடைந்த பெருவெற்றிகள் அவர்களின் இறுக்கமான வாழ்வை வெளிப்படுத்தியிருக்காது.
எதிரிகளின் கூடாரங்களுக்குள்ளே புகுந்த ஒரு வேவுப்போராளியின் வாழ்வு, குண்டுமழை மத்தியில் காயப்பட்ட போராளிகளுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் வாழ்வு, சுற்றிவளைப்புக்குள்ளே நிற்கும் போராளிகளுக்கு சாப்பாடு கொடுக்கவேண்டும் என்ற வழங்கற் போராளிகளின் வாழ்வு, கவசவண்டிகளோடு வரும் எதிரியை தமது ஆர்பிஜிகளால் விழுத்தினாலே களப்போராளிகள் தப்பமுடியும் என தனித்து நின்று போராடிய கொமாண்டோ போராளிகளின் தனித்திறன், உப்புநீரில் ஊறி விறைத்துப்போகும் கடற்புலிகள் வாழ்வு என நீண்டுசெல்லும் அவர்களின் பாதங்களை திரும்பி பாருங்கள்.
இரண்டாவதாக ஒரு மகனாக ஒரு கணவனாக மூன்று பிள்ளைகளின் தந்தையாக ஒரு இனத்தின் நம்பிக்கையான தலைவனாக எத்தனை மனச்சுமையை தன்மேல் ஏற்றிக்கொண்டு ஒரு இறுக்கமான களமுனையில் தனது பிள்ளைகளோடு நின்று களமாடியிருப்பார் எமது தலைவர். வளங்கள் வற்றிய நிலையில் வல்லாதிக்கங்கள் பின்னிய வலையில் போராட்ட சக்கரத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த எப்படி துடித்திருக்கும் அவர் மனது?
மூன்றாவதாக, ஒரு பெரிய அழிவை சந்தித்துள்ளோம். ஆனால் அடுத்த கட்டம் என்ன? இன்று தமிழர்கள் இல்லாத நாடு எதுவுமே இல்லை என்றளவில் எங்களில் ஒரு பெரும்பகுதியினர் - மூன்று பேருக்கு ஒருவர் - புலம்பெயர்ந்து நட்சத்திரங்களாக பிரகாசித்து கொண்டிருக்கின்றோம்.
உலகெங்கும் பிரகாசிக்கும் அத்தனை நட்சத்திரங்களும் இணைந்தால் எமது தேசத்து மக்களின் வாழ்வுக்கு ஒரு சூரியனாக எமது தேசத்திற்கு ஒளியூட்டமுடியும்.
அனைவரும் இணைவோம்!!!!
பதிவர் - கீதன் இளையதம்பி
பதிவு 2016
No comments:
Post a Comment