புதிய அரசமைப்பு வரும்! தமிழருக்குத் " ஏக்கியராஜ்ஜிய" உறுதி!! - ரணில் அறிவிப்பு - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, December 12, 2018

புதிய அரசமைப்பு வரும்! தமிழருக்குத் " ஏக்கியராஜ்ஜிய" உறுதி!! - ரணில் அறிவிப்பு

"புதிய அரசமைப்பை நாம் கொண்டு வந்தே தீருவோம். அதனூடாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்."
- இவ்வாறு நாடாளுமன்றத்தில் இன்று வாக்குறுதியளித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கக் கோரும் நம்பிக்கைத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டதையடுத்து, வாக்களித்த அனைத்து எம்.பிக்களுக்கும் சபையில் ரணில் நன்றி தெரிவித்து உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எமது அரசில் சில குறைப்பாடுகள் காணப்பட்டமை உண்மைதான். இரு பிரதான கட்சிகளுடன் இணைந்து பணியாற்றியதால் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இந்தக் குறைப்பாடுகள் தோற்றம் பெற்றன. அதனால், மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றுவதில் சில தாமதங்களும் ஏற்பட்டன.
ஆனால், கல்வி, சுகாதாரம், வீடமைப்பு போன்ற சமூக பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிக தொகையை செலவிட்ட அரசு என்ற வகையில் நாம் பெருமை அடைகின்றோம். சீரழிந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்க முடியும். நாம் சொன்னதைச் செய்வோம். படிப்படியாக நிவாரணம் வழங்கி பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் உரையை அவதானித்தேன்.
வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்த நாம் நன்கு அறிவோம். எமது அபிவிருத்தி செயற்பாடுகளில் அவர்களது பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம். அதேபோல் சட்டரீதியான பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.
புதிய அரசமைப்பின் ஊடாக பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை வழங்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதில் மாகாண சபையைப் பலப்படுத்துதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல் தொடர்பில் உறுதியாக இருக்கின்றோம்.
இந்நாட்டின் ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க நாம் இணைந்துள்ளோம். நாம் அனைவரும் இன்று சிங்களவர்களாகவோ, தமிழர்களாகவோ, முஸ்லிம்களாகவோ செயற்படவில்லை. இலங்கையர்கள் என்ற ரீதியில் செயற்பட்டுள்ளோம்” - என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad