TMK: பிரிக்குமா? ஒட்டி வளருமா? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, February 3, 2019

TMK: பிரிக்குமா? ஒட்டி வளருமா?

விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். "அவர் சம்பந்தரால் பரசூட் மூலம் அரசியலுக்குள் இறக்கப்பட்டவர். ஆனால் ஒரு கட்சியை பரசூட் மூலம் இறக்க முடியாது." என்று. இதே தொனிப்பட பல மாதங்களுக்கு முன்பு டாண் ரி.வியின் பணிப்பாளரும் என்னிடம் சொன்னார். "கொழும்பு மைய விக்னேஸ்வரனால் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தன்னோடு நிற்பவர்களுக்கு சம்பளத்தையும் கொடுத்து முழு நேரமாக ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா?" என்று. விக்னேஸ்வரனின் ஐந்தாண்டுகால பதவிக்காலத்தை காய்தல், உவத்தலின்றி மதிப்பீடு செய்த பலரும் அவருடைய 79ஆவது வயதில் ஒரு புதிய கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா என்றே சந்தேகப்படுகிறார்கள். 

அவர் கட்சியை அறிவித்த பின்னர்தான் மாற்று அணிக்குள் முரண்பாடுகள் அதிகரித்தன. குறிப்பாக கஜேந்திரகுமாரையும், சுரேஸ் பிரேமச்சந்திரனையும் விக்னேஸ்வரனின் கூட்டுக்குள் ஒன்றாக வைத்திருக்க முடியாது என்ற நிலையே இன்றளவும் காணப்படுகிறது. கூட்டுக்குள் இணைவதற்கு கஜேந்திரகுமார் முன்வைக்கும் நிபந்தனைகள் காரணமாக ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்தித்தவர்கள் மத்தியில் ஒருவித சோர்வு ஏற்பட்டது. ஒரு புதிய கட்சியை அறிவிக்கப் போவது பற்றி அவர் பேரவை முக்கியஸ்தர்கள் எல்லோருக்கும் முன்கூட்டியே தெரிவித்திருக்கவில்லை என்பதால் பேரவைக்குள் ஒரு பகுதியினர் அக்கட்சியோடு ஒட்டாமல் விலகி நிற்பதைப் போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது. அதோடு பேரவைக்குள்ளிருந்து அவருடைய கட்சியில் இணைவதற்கு மிகச்சிலரே தயாராகக் காணப்பட்டார்கள். அவர்களில் ஒருவராகிய வசந்தராஜா முதலில் சம்மதித்துவிட்டு பின்னர் மறுத்துவிட்டார். 

இது தவிர தனது புதிய கட்சிக்காக விக்னேஸ்வரன் சில பிரபலஸ்தர்களை அணுகியதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் முழுநேர அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்றும் தெரியவருகிறது. அவருடைய கட்சிக்குள் பெறுப்புக்களை ஏற்பார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்ட ஐங்கரநேசனும், அனந்தியும் அவருடைய கட்சிக்குள் சேரவில்லை. அவர்கள் தமது கட்சிகள் அல்லது அமைப்புக்களுக்கூடாக தமிழ் மக்கள் கூட்டணியோடு ஒரு கூட்டை வைத்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இவற்றுடன் மேலதிகமாக டெனீஸ்வரனின் வழக்கில் கிடைக்கக்கூடடிய தீர்ப்பும் விக்னேஸ்வரனின் நிம்மதியைக் கெடுக்குமா? என்ற சந்தேகமும் உண்டு. 

இவ்வாறாக பெருமளவிற்கு எதிர்மறையான ஓர் அரசியற் சூழலில்தான் கடந்த கிழமை விக்னேஸ்வரன் அவருடைய புதிய கட்சியின் மத்திய குழுவை அறிவித்திருக்கிறார். ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்காக கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக உழைத்த அரசியற் செயற்பாட்டாளர்களில் பெரும்பாலானவர்கள் அக்குழுவிற்குள் இல்லை. அம்மத்தியகுழுவில் மிகச்சிலரே பிரபலஸ்தர்கள். ஏனையவர்கள் அதிகம் வெளித்தெரிய வராதவர்கள்.

 அதாவது ஏற்கெனவே அரசியற் செயற்பாட்டாளர்களாக துருத்திக்கொண்டு தெரியாதவர்கள். 
ஒரு கட்சியை அறிவித்த நாளிலிருந்து விக்னேஸ்வரன் எதிர்கொண்ட எதிர்மறைச் சூழல் காரணமாக அவர் தளரவில்லை. தொடக்கிய காரியத்தை தனது வயதையும், உடல்நிலையையும் பாராது எப்படியும் முடித்தே தீருவது என்ற திடசித்தத்தோடு தன்னால் இயன்ற அளவிற்கு அவர் உழைத்து வருகிறார் என்பதைத்தான் கடந்த கிழமை அவர் வெளியிட்டிருக்கும் மத்திய குழு காட்டுகிறது. கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு 79வயது முதியவர் யாழ்ப்பாணத்தில் கைலாசபிள்ளையார் கோயிலுக்கருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த ஐந்தாண்டுகளாக தான் சம்பாதித்து வைத்திருக்கும் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டுக்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் இருந்து கிடைக்கும் உதவிகளின் மூலம் கட்சிக்கான மத்தியகுழுவை உருவாக்கியிருக்கிறார். முதலில் கட்சிக்கான ஒரு யாப்பை வரைந்து அந்த யாப்பிற்கு ஏற்ப ஒரு கட்சி கட்டமைப்பை வரைந்து அக்கட்டமைப்பிற்கு வேண்டிய ஆட்களையும் தெரிந்து ஒருவாறாக முதற்கட்டத்தை கடந்துவிட்டார். 
அடுத்த கட்டமாக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். அவர் இப்பொழுது நியமித்திருக்கும் அமைப்பாளர்கள் தமக்கென்று ஒதுக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் வேலை செய்து கட்சிக்கு ஆட்களைத் திரட்ட வேண்டும். எனினும் இடையில் ஏதும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வதற்கு ஏதோ ஓர் அடிப்படைக் கட்டமைப்பை விக்னேஸ்வரன் உருவாக்கியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா?

ஒரு மாற்று அணியைக் குறித்து கடந்த சில ஆண்டுகளாகச் சிந்திக்கப்பட்ட பொழுது அதை ஒரு கட்சிகளின் கூட்டாகவே பெரும்பாலான அரசியற் செயற்பாட்டாளர்கள் நம்பினர். விக்னேஸ்வரன் அவருடைய புதிய கட்சியை அறிவித்த பொழுதும் அது ஒரு கூட்டின் பெயரா? அல்லது கட்சியின் பெயரா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் கஜேந்திரகுமார் அக்கூட்டுக்குள் இணைவதற்கு நிபந்தனைகளை விதித்த பொழுது விக்னேஸ்வரன் தனக்கென்று ஒரு கட்சியைப் பலப்படுத்துவது என்ற தெரிவை நோக்கி உழைக்கத் தொடங்கியதாகத் தெரிகிறது. இப்பொழுது எந்தக்கட்சியோ அல்லது அமைப்போ அவருடன் இணைந்தாலும் இணையாவிட்டாலும் தனக்கு சரியெனப்பட்ட ஓர் அரசியல் வழியில் தொடர்ந்து முன்னேற அவருக்கென்று ஒரு சொந்தக்கட்சிக்கான அத்திவாரம் போடப்பட்டு விட்டது. 

உண்மையில் இந்த அத்திவாரம் விக்னேஸ்வரன் என்ற ஒரு தனி மனிதனுக்கு உரியதல்ல. அது ஓர் அரசியல் செயல்வழிக்கு உரியது. தமிழ் எதிர்ப்பு அரசியல் வழித்தடத்திற்குரியது. கடந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் விக்னேஸ்வரன் அவருடைய அடைவு என்று சொல்லிக்காட்டத் தக்கதும் அதுதான். ஒரு முதலமைச்சராக ஒரு நிர்வாகியாக ஒரு தலைவராக அவருடைய அரசியல் ஆளுமையில் பல குறைபாடுகள் உண்டு. எனினும் தமிழ் மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காத ஓர் எதிர்ப்பு அரசியல் தடத்தை அவர் ஓரளவிற்காவது பலப்படுத்தியிருக்கிறார். இதற்காக அவர் தனது கொழும்பு மையப் பிரமுக வாழ்வில் சம்பாதித்த உறவுகளையும் பெயரையும் இழக்கவும் தயாராகக் காணப்படுகிறார். தனக்கு சரியெனப்பட்ட ஒன்றுக்காக தன்னுடைய எழுபத்திநான்கு வயது வரையிலும் சம்பாதித்தவற்றை ஒரு மனிதன் இழக்கத் தயாராகக் காணப்படுவது என்பது இங்கு முக்கியமானது. 
எனினும் அவருக்குள்ளிருக்கும் நீதிபதி அவரை ஒரு தலைவராக வளர விடுகிறாரில்லை. உதாரணமாக புதிய கட்சியைக் கட்டியெழுப்பும் போது அதில் முக்கிய பொறுப்புக்களை வழங்கும் விடயத்தில் அவருக்குள் இருக்கும் நீதிபதியே சில முடிவுகளை எடுத்ததாகத் தெரியவருகிறது. மேலும் சித்தார்த்தனை இணைத்துக்கொள்வது பற்றிய கேள்விக்கு கூட்டமைப்பை உடைக்கலாமா? என்ற அறநெறி வாய்ப்பட்ட ஒரு கேள்வியை அவர் எழுப்புகிறார். அது போலவே மட்டக்களப்பிலுள்ள அவருக்கு நெருக்கமான ஒரு கூட்டமைப்பு பிரமுகரை தன்னை நோக்கி வளைத்தெடுப்பதற்கும் அவருடைய அறநெறி நோக்குநிலை தடையாகக் காணப்படுகிறது. தேர்தல் அரசியல் என்று வந்தபின் கூட்டமைப்பை உடைக்க மாட்டேன் என்று அவர் கூறுவதை எப்படி விளங்கிக் கொள்வது? 

இப்படியாக அவருக்குள் இருக்கும் நீதிபதி அவர் ஒரு தலைவராக மேலெழுவதற்கு இப்பொழுதும் தடையாகத்தான் இருக்கிறார். எனினும் அந்த நீதிமானே சாதாரண சனங்களை அதிகம் கவர்பவராகவும் காணப்படுகிறார். தமது இலட்சியத்திற்காக சாகத் துணிந்த போராளிகளைப் போற்றிய ஒரு சமூகம் பொய்யும் புரட்டும் கபடமும் நிறைந்த அரசியல்வாதிகளின் மத்தியில் ஒப்பீட்டளவில் நீதிமானாக துருத்திக்கொண்டு தெரியும் ஒருவரை எதிர்பார்ப்போடு பார்ப்பதில் வியப்பில்லை. ஆனால் நவீன அரசியல் எனப்படுவது தனிய நீதிநெறிகளின் மீது மட்டும் கட்டியெழுப்பப்படுவதில்லை. அது ஒரு விதத்தில் சூது. ஒரு விதத்தில் சூழ்ச்சி. இதை விக்னேஸ்வரன் கண்டுபிடிக்கும் பொழுது அவருடைய கட்சி எங்கே நிற்கும்? அவருடைய சர்ச்சைக்குரிய உதவியாளர்களை ஒவ்வொருவராகக் கண்டுபிடித்து அகற்றுவதற்கே அவருக்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வரை சென்றதே? 

சில மாதங்களுக்கு முன்பு வடமாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்த கையோடு யாழ் நூலகத்தின் குவிமாட மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. "வண் ரெக்ஸ்" என்று அழைக்கப்படும் ஓர் அரசசார்பற்ற நிறுவனம் இச்சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் இதில் பங்குபற்றினார்கள். வடமாகாண சபையிலிருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் அமையவிருக்கும் புதிய மாகாணசபையை எப்படித் திட்டமிட வேண்டும் என்ற தொனிப்பொருளில் அங்கு கலந்துரையாடப்பட்டது. அதில் விக்னேஸ்வரனின் அரசியல் அறம் பற்றிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட பொழுது தவராசா ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார். தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் அரசியல் நடைமுறைகளுக்குமிடையில் எப்பொழுதும் இடைவெளிகள் இருக்கும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்படும் கவர்ச்சியான வாக்குறுதிகள் வாக்குகளைக் கவரும் நோக்கிலானவை. ஒரு விஞ்ஞாபனத்தை அப்படியே பின்பற்றி வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவது கடினம் என்ற சாரப்பட அவர் அங்கு கருத்துத் தெரிவித்தார். 

விக்னேஸ்வரன் கூட்டமைப்பிடமிருந்து வேறுபட்டு நிற்கும் இடமும் இதுதான். வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டுமென்று அவர் நம்புகிறார். தன்னைச் சந்திக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடமும் அவர் தனது நிலைப்பாட்டை விட்டுக்கொடுப்பின்றி வெளிப்படுத்தி வருகிறார். அவர் முதலமைச்சராக இருந்தவரை அவர் இடைக்கிடை வெளியிடும் கேள்வி பதில் வடிவிலான அறிக்கையை ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டன. அனால் இப்பொழுது அவ்வறிக்கைகள் தலைப்புச் செய்திகளாக வருவதில்லை. ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு அவர் சொன்ன பதில்களுக்கு ஒரு கவனிப்பு இருந்தது. இனிமேல் அப்பதில்களுக்குரிய ஓர் அரசியல் செயல்வழியை நிறுவனமயப்படுத்தி அதற்கான மக்கள் ஆணையை அவர் பெறவேண்டியிருக்கும். 

இது வரையிலும் அவர் கூட்டிய கூட்டங்களுக்கு மக்கள் தானாகவே வந்து சேர்ந்தார்கள். ஆனால் அண்மை மாதங்களாக தமிழ் பிரதிநிதிகள் கூட்டும் கூட்டங்களுக்கு ஆட்களைச் சேர்ப்பது பெரும் பாடாக இருக்கிறது. ஏதாவது ஒரு பொருளைத் தருவதாகக் கூறி சனங்களை வரவழைக்க வேண்டியிருக்கிறது. தமிழ் பிரதிநிதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் கிராம மட்டத்தில் தாங்கள் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்களை பிரசித்தப்படுத்தி தமது வாக்கு வங்கியைப் பாதுகாக்க முற்படுகிறார்கள். இவ்வாறானதோர் பின்னணிக்குள் தமிழ் மக்கள் கூட்டணி என்ற ஒரு புதியகட்சியைக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.

கூட்டமைப்பிடம் ஏற்கெனவே மேலிருந்து கீழ்நோக்கிய ஒரு பலமான வலைப்பின்னல் கட்டமைப்பு உண்டு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடமும் இப்பொழுது குறிப்பிடத்தக்களவிற்கு ஒரு கட்டமைப்பு உண்டு. தமிழ்மக்கள் கூட்டணி இனிமேல்தான் அப்படியொரு வலைப்பின்னலைக் கட்டியெழுப்ப வேண்டும். விக்னேஸ்வரனுக்குள்ள ஜனவசியத்தை வாக்குகளாக மாற்ற அக்கட்டமைப்பு அவசியம். அதுமட்டுமல்ல. கஜேந்திரகுமாரும் உட்பட ஏனைய தோழமைக் கட்சிகளோடு மிடுக்கான ஒரு கூட்டை வைத்துக்கொள்ள அக்கட்டமைப்பு அவசியம். 
மக்கள் முன்னணியோடு ஓர் உடன்பாடு எட்டப்படவில்லையென்றால் முதலில் வரக்கூடிய தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியானது சிலசமயம் இருமுனை எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருக்கும். இது சாதாரண தமிழ்ச் சனங்களுக்கு குழப்பமான சமிக்ஞைகளைக் கொடுக்கும். இதனால் வாக்குகள் மேலும் சிதறும். அது தென்னிலங்கை மையக்கட்சிகளுக்கு வாய்ப்புக்களைக் கொடுக்கும். 
கடந்த ஒக்ரோபர் மாத ஆட்சிக் குழப்பத்தின் போது யாழ் திருமறைக்கலாமன்ற மண்டபம் ஒன்றில் தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது. மாற்று அணியை ஒரு பெருங்கூட்டாக உருவாக்குவதில் உள்ள சவால்களைக் குறித்து அங்கு உரையாடிய பொழுது யாழ் பல்கலைக்கழக புலமைசாரா ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பின்வரும் தொனிப்படச் சொன்னார். 

"இவர்கள் ஒற்றுமைப்படாவிட்டால் அடுத்த தேர்தலை அப்படியே எதிர்கொள்வோம். பிரிந்து நிற்க முயலும் கட்சிகள் யாவும் தனித்தனியே போய் முட்டுப்படட்டும். அதில் அவரவர் பெறக்கூடிய அனுபவத்தின் அடிப்படையில் அதற்குப் பின்னாவது ஒரு புதிய கூட்டைப்பற்றிச் சிந்திக்கட்டும்" என்று. தமிழ் மக்கள் கூட்டணி எனப்படும் ஒரு புதிய கட்சியின் வருகையோடு ஏற்கெனவே பல துண்டுகளாகிக் கிடக்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தில் மற்றொரு பிளவு ஏற்பட்டுள்ளதா? அல்லது எல்லாப் பிளவுகளையும் ஒட்டவைக்கும் புதிய இடை ஊடாட்டப் பெருந்தளம் ஒன்று திறக்கப்பட்டுள்ளதா?

No comments:

Post a Comment

Post Bottom Ad