சம்பந்தருக்கு அரசின் விசேட கௌரவம்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, March 9, 2019

சம்பந்தருக்கு அரசின் விசேட கௌரவம்!

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பதால் இலங்கை அரசாங்கத்தால் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என இலங்கை அமைச்சரவையில் விசேட பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணக்கம் தெரிவித்துள்ளார். 13 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2019 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கைக் காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு சமர்ப்பித்த பிரேரணையே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணையின் பிரகாரம் கொழும்பு-07 அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பௌத்தாலோக மாவத்தையில் ஒன்றரை ஏக்கர் காணியுடன் ஆடம்பர வீடு ஒன்று வழங்கப்பட்டு அதற்கான அதிகாரிகள் மற்றும் பூந்தோட்டங்களைப் பராமரித்தல், வீட்டை துப்பரவு செய்தல் ஆகியவற்றுக்கு தலா இரண்டு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ள இந்த ஆம்பர வீடு, இலங்கைப் படையினரால் துப்பரவு செய்யப்பட்டு மீள வடிமைக்கப்பட்டுள்ளது.

பிரேரணை மூலமாக நிறைவேற்றப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி சம்பந்தன் பயன்படுத்துவதற்கு இரண்டு அதிநவீன வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஒன்று KX 2330 என்ற இலக்கமுடைய டிஸ்கவரி லான்ரோவர் ரக வாகனம், இந்த வாகனம் இலங்கைப் பெறுமதியில் சுமார் நான்கரைக்கோடி ரூபா. இரண்டாவது KO 6339 என்ற ஆடம்பர வாகனம்.

இந்த இரண்டு வாகனங்களும் சமபந்தனின் அரச மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

அத்துடன் குறித்த வீட்டுக்கான மின்சாரம். நீர்க்கட்டணங்கள் மற்றும் செலவுகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படும். குறிப்பாக காணி, மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு சம்பந்தனின் வீட்டுச் செலவுகளுக்குரிய நிதியை பொறுப்பேற்கும்.

இவ்வாறு பல வசதிகளுடன் குறித்த வீட்டில் சம்பந்தன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்வதற்குரிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த சம்பந்தன் பாடுபடுகிறார். கொழும்புக்கு வருகை தரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள். மற்றும் உயர்நிலை அதிகாரிகள் சம்பந்தனை சந்தித்து நல்லிணக்கம் தொடர்பாகக் கலந்துரையாடுகின்றனர்.

ஆகவே இதனடிப்படையில் சம்பந்தனுக்கு இலங்கை அரசாங்கம் இந்த உயர்ந்த கெளரவத்தை வழங்கியுள்ளதாக அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையிலும் இந்த உயர் கௌரவத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைச் சபாநாயகர் கரு ஜயசூரியவின் வேண்டுகோளுக்கு அமைவாக காணி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சு இந்தப் பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகரித்துள்ளது.

ஏதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சம்பந்தனை விலக்கி, மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயர் கரு ஜயசூரிய இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார்.

அதனையடுத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குபவர் என்ற காரணத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அந்தஸ்த்தும் அதனைவிட உயர்ந்த கௌரவமும் சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் என சபாநாயர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார்.

அதேவேளை, நல்லிணக்கம் என்ற பெயரில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை அரசாங்கம், இலங்கைப் படைகளின் ஒத்துழைப்புடன் காணி அபகரிப்பு. புத்தர் சிலை வைத்தல் போன்ற இன ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இவ்வாறனதொரு நிலையில் நல்லிணக்கத்துக்காக சம்பந்தன் பாடுபடுகின்றார் என்ற அடிப்படையில், இலங்கை அரசாங்கம் சம்பந்தனுக்கு கௌரவம் வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்திடம் இருந்து சம்பந்தன் பெற்ற இந்த கௌரவம் மாபெரும் காட்டிக்கொடுப்பு என கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ்ச் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொழும்பு-07 அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பௌத்தாலோக மாவத்தையில் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள வீடு அமைந்துள்ள பகுதியில் இலங்கைப் படைகளின் மூத்த தளபதிகள், இலங்கைப் பொலிஸ் மா அதிபர், மற்றும் மூத்த அமைச்சர்கள். உயர் இராஜதந்திரிகள் ஆகியோரின் வீடுகள் அமைந்துள்ளன.

பம்பலப்பிட்டிச் சுற்று வட்டத்தோடு அமைந்துள்ள தும்முல்லச் சந்தியில், ஹவலொக் வீதியின் ஆரம்ப முனையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் அமைந்துள்ளது.

அங்கிருந்து பிற்பக்கமாக கொழும்பு பல்கலைக்கழக மைதானம் வரை செல்லும் பௌத்தாலோக மாவத்தை போர்க்காலத்தில் 20 ஆண்டுகளாக மூடப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தன.

பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியேற்றதும் அந்த வீதி போக்குவரத்துக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad