திருக்கேதீஸ்வர மத வன்முறைச் சம்பவம்:
தமிழர்களுக்கு வெட்கக்கேடு; சாபக்கேடு
"சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலய வீதி என அறியப்பட்ட வீதியில் அமைக்கப்பட்ட பெயர் வளைவு மத வன்முறையாளர்களால் உடைத்து நொறுக்கப்பட்டதும், அவ்வேளையில் அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களும் ஒட்டுமொத்த தமிழினத்தையுமே வெட்கக்கேட்டுக்கும், சாபக்கேட்டுக்கும் உள்ளாக்கியுள்ளது."
- இவ்வாறு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
"தமிழர் ஒற்றுமையைக் கேள்விக்கும், ஏனைய இனத்தோர் மத்தியில் கேலிக்கும் உள்ளாக்கியுள்ள இந்நிகழ்வு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. அமைதிக்கு வழிகாட்ட வேண்டிய மதத் தலைவர்கள், வன்முறைக்குத் தலைமை தாங்குவதை கடுமையாகக் கண்டிக்கின்றேன்.
மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடு தேவாலயம் தமிழ் கத்தோலிக்கர்களால் பாதுகாக்கப்படும் கத்தோலிக்கத் தலம் என்பது போன்று, அதே மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வர ஆலயம், தமிழ் இந்துக்களால் பாதுகாக்கப்படும் பாடல் பெற்ற இந்துத் தலம் என்பதும் அறியப்பட வேண்டும். இரு தரப்புகளும், இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.
இதை மீறும் எந்தவொரு அடாவடி நடவடிக்கையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இது தொடர்பில், முதலில், இன்று (4ஆம் திகதி) சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற வேண்டும். அதற்குரிய பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இரண்டாவது, உடைக்கப்பட்ட தற்காலிக வளைவு தூக்கி நிறுத்தப்பட வேண்டும். மூன்றாவது, மத வன்முறையில் ஈடுபட்டவர்கள், 5ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட வேண்டும் என நேற்றிரவு மன்னார் பொலிஸ் தலைமையக அதிகாரி இரத்நாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீநாத் பெரேரா, பிரதி பொலிஸ்மா அதிபர் அபேவிக்கிரம ஆகியோருடன் பேசி பணிப்புரைகள் வழங்கியுள்ளேன்.
இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுமாறு மன்னார் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை தொலைபேசியில் அழைத்துக் கூறியுள்ளேன்.
சிவராத்திரியை அடுத்து, விரைவில் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு நேரடியாக வந்து சகல தரப்பினரிடமும் கலந்து பேசி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நான் பெற்றுத்தருவதாக திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர்களிடம் உறுதியளித்துள்ளேன்" - என்றுள்ளது.
No comments:
Post a Comment