ரணில் - சுமந்திரன் கூட்டின் புதிய தந்திரம் இதுதான் - விளக்குகிறார் கஜேந்திரன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, April 12, 2019

ரணில் - சுமந்திரன் கூட்டின் புதிய தந்திரம் இதுதான் - விளக்குகிறார் கஜேந்திரன்

கூட்ட மைப்பு அரசைக் சிக்க வைக்க முயற்சிக்கிறது போலவும், ரணில் விக்கிரமசிங்க ஏதோ அதற்கு எதிராக துணிந்து நின்று போராடுவது போன்றதாகவும் நாடகம் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறோம் என்று தென்னிலங்கை மக்களுக்குக் காட்டுவதன் ஊடாக ரணில் நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை. அவர்தான் நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றிக் கொண்டு போகின்றார் என்ற ஒரு நம்பிக்கையைச் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி எதிர்காலத்தில் அவர்களது வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 


இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்.

அவர் காலைக்கதிருக்கு வழங்கிய விசேட செவ்வி வருமாறு:

கேள்வி - ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னர் போர்க்குற்றங்கள், மனித குலத் துக்கு எதிரான குற்றங்கள் தொடர் பில் பரவலாக பேசப்படுகின்ற நிலையில் அது குறித்து உங்கள் கட்சி எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது?

பதில் - தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இனப்படு கொலைகள், போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒரு முழுமையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாடு. இலங்கை அரசு இந்தப் படுகொலை களில் அரசாகவே ஈடுபட்டுள்ள காரணத்தால் உள்ளக விசாரணையோ அல்லது இலங்கை அரசு பங்கு பெறுகின்ற வகையில் உருவாக் கப்படுகின்ற கலப்புப் பொறிமுறை மூல மான விசாரணையோ தமிழ் மக்களுக்கு நீதியைத் தராது. ஆகையினாலேயே பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணையை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.

கேள்வி - உங்கள் இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்து வருகின் றீர்கள்?

பதில் - எங்களைப் பொறுத்தவரை 2012 ஆம் ஆண்டு இலங்கை விவகாரம் ஜெனீவாவிலே கொண்டு வரப்பட்ட நாளில் இருந்து ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதை ஆணித்தரமாக வலி யுறுத்தி வருகின்றோம். புலம்பெயர் மக்களோடும் தாயகத்தில் இருக்கின்ற சிவில் அமைப்புக்களோடும் இணைந்து இந்தக் கோரிக்கைளை நாங்கள் வலியுறுத்திக் கொண்டு வருகின்றோம். பல் வேறுபட்ட இராஜதந்திரத் தரப்புக்களையும் சந்தித்து அவ்வாறான கோரிக்கைகளைத் தான் நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத் திக் கொண்டு வருகின்றோம்.இலங்கைத் தீவில் இருந்து முதன் முதலாக ஒரு சர்வதேச விசாரணையைப் பற்றிப் பேசியது அல்லது .நா பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதி மன்றுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டு மென்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியது எல்லாமே நாங்கள் தான்.அதாவது எங்கள் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் எங்கள் கட்சியும் தான் முதன் முதலில் அந்த நிலைப் பாட்டை வலியுறுத்தியது என நான் நினைக் கின்றேன். ஆகையால் அது தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியாக ஆணித்தரமான நிலைப்பாடுகளை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.

கேள்வி - போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தமிழ்த் தரப்புக்கள் எவ் வாறான நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன எனக் கருதுகின்றீர்கள்?

பதில் - தமிழ்த் தரப்புக்களைப் பொறுத்த வரை தமிழ் மக்களின் நலன்களுக்காகச் செயற்படுகின்ற தரப்புக்களும் உண்டு. தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு இலங்கை அரசுக்காகச் செயற்படும் தரப்புக்களும் உண்டு. இந் தியா, மேற்கு நாடுகளின் முகவர்களாகச் செயற்படுகின்ற தரப்புக்களும் உண்டு. அதனை விட சுயமாக ஏதாவது ஒரு நிலைப் பாட்டை வலியுறுத்த வேண்டுமென்பதற்காகக் கதைத்துக் கொண்டிருக்கின்ற தரப்புக்களும் இருக்கின்றன. இந்தத் தரப்புக்களில் சிங்களப் பேரின வாதக் கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற் றிருக்கின்றவர்கள் அரசுடன் துணை இரா ணுவக் குழுவாகச் செயற்பட்டு ஜனநாயகப் போர்வையில் தற்போது செயற்பட்டு வரு கின்ற .பி.டி.பி. போன்றவர்கள், கருணா, பிள்ளையான் அணிகள் போன்றவர்கள் அரசின் கைக்கூலிகளாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆக அவர்களைப் பொறுத்தவரை இங்கு ஒரு குற்றமும் நடக்கவில்லை. இங்குள்ள மக்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்ற கருத்தைத் தான் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். 

அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பதவிகளுக்கு வந்திருந்தாலும் இந்தியாவின் முகவர்களாகவும் மேற்கு நாடுகளின் முகவர்களாகவும் செயற்படுகின்றனர். இந்தியா, மேற்கு நாடுகளின் நலன்களை இலங்கையில் பேணிக் கொள்வதற்கு தமிழ் மக்கள் என்ன நிலைப்பாடு எடுத்தால் அந்த நாடுகளுக்கு நல்லதாக இருக்குமோ அத னைத் தமிழ் மக்களின் விருப்பங்களாக அவர்கள் பேசி வருகின்ற செயற்பாட்டையே தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றார்கள். எங்களைப் பொறுத்தவரை எங்கள் மக்களுக்கு நிரந்தரமான ஒரு நன்மையைத் தருவதற்கு எது நல்லதாக இருக்குமோ அத னையே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். போர் முடிந்த பிற்பாடு அரசியல் தீர்வு விடயமாக இருக்கலாம் அல்லது போர்க்குற்ற விட யம் சர்வதேச அரங்கிலே பேசு பொருளாக வருகின்றபொழுது அது தொடர்பான எங்களது நிலைப்பாடாக இருக்கலாம் அன்று நாம் சொன்னது தான் இன்றைக்கு உண்மை யில் சரியாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்தப் போர்க் குற்றங்கள் தொடர்பில் எங்கள் கட்சியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லவேண்டுமென்கின்ற பொழுது கூட கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் இது ஒரு நாளும் சாத்தியமில்லை என்று பொய்யைச் சொல்லியிருந்தார்.

அத்தோடு இந்த .நா மனித உரிமைகள் கூட்டத் தொடர் முடிவடையும் வரைகூட சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்வது ஒரு நாளும் சாத்தியமில்லை. ஆகையால் விண்ணாதி விண்ணர்கள் இருந்தால் - அதற்கு இயலும் என்றால் கொண்டு சென்று பாருங்கள் என்று ஊடகங் களுக்கு முன்னால் பெரிய வீராப்பு பேசி சவால் விட்டிருந்தார்.ஆனால் அதே சுமந்திரன் தான் இன்றைக்கு .நா. சென்று அந்த நாடுகளின் எடுபிடியாக நின்று அவர்களுக்குச் சேவகம் செய்து போட்டு அந்தக் கூட்டத் தொடர் நடைபெற் றுக்கொண்டிருக்கின்றபொழுதே பல நாடு களுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு அங்கிருந்து வெளியேறி அங்கு எல்லாம் முடிவடைந்த பிறகு இலங்கை நாடாளுமன்றத்தில் வந்து வீராப்பு பேசியிருக்கின்றார்

அதாவது ஜெனீவாத் தீர்மானத்தை அரசு சரியான முறையில் அமுல்படுத்தாவிட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சொல்லுவோம் என்று சொல்லியிருக்கின் றார். அவை எல்லாம் எதைக் காட்டுகின்றன என்றால் இது எல்லாம் சாத்தியமே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த சுமந்திரன் இன்று குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு போகப் போவதாகச் சொல்கின்றார் என்றால் குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்வது சாத்தியம் என்றதை அவர் ஒப்புக் கொண்டிருக்கின்றார். இந்த நிலைப்பாட்டையே நாங்கள் ஆரம் பத்தில் இருந்து வலியுறுத்தி வந்திருக்கின்றோம். ஆனால் இதனை வேறு எந்தவொரு தரப்பும் வலியுறுத்தவில்லை.

ஆகவே மற்றைய தரப்புக்கள் சொன்னது எல்லாமே பொய்யாகவே நடந்து முடிந்திருக்கின்றன. ஆகவே தமிழ்த் தரப்புக்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர மற்றத் தரப்புக்களில் சும்மா ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கின்றவர்களும் அதே நேரத்தில் மக்களை ஏமாற்றி ஏதோ படிப்படியாக நல்லது நடக்கிறது என பொய்யாகக் காட்டி மக்களை ஏமாற்றி ஏதோவொரு நிகழ்ச்சி நிரலுக்கும் கொண்டு செல்கின்ற கூட்டமைப்பு போன்ற தரப்புக்களும் உள்ளன. அது போல டக்ளஸ் தேவானந்தா போன் றவர்கள் இங்கு உழாத மாடு அங்கு போய் உழுமோ என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற தரப்புக்களும் உள்ளன. டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுக்கு பதற்றம் இருக்கிறது. ஏனெனில் விசாரணை நடந்தால் தாமும் தூக்குக்கு போகவேண்டுமென்ற பதற்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இருக்கிறது. ஏனென்றால் பல கொலைகளில் ஈ.பி.டி.பிக்கு சம்பந்தம் இருப்பதாக மக்களிடம் பல குற்றச் சாட்டுக்கள் இருக்கின்றன. ஆகையினால் தூக்கில் ஏறப் போகின்றவர்களின் பெயர்களில் அவர்களின் பெயர்களும் நிச்சயமாக வரு மென்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரனாக இருக்கலாம், சுதந்திரக் கட்சியின் அங்கஜனாக இருக்கலாம். இவர்கள் எல்லாருமே தங்கள் எஜமான்களுக்காகத் தமிழின விரோதச் செயற்பாட்டைச் செய்தவர்கள் தான். ஆகையினால் அவர்கள் ஒரு நாளும் எங்களது நிலைப்பாட்டின் அடிப்படையிலான கோரிக்கைளை விரும்பமாட்டார்கள். ஆகையினால் தமிழ்த் தரப்பு என்ற அடிப்படையில் எங்களுடைய தரப்பு மட்டும் தான் இந்த விடயங்களில் உறுதியாக இருக்கின்றது.

கேள்வி - இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனீவாவில் ஏற்கனவே சில பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டி ருக்கின்ற நிலையில் தற்போது நிறை வேற்றப்பட்டிருக்கின்ற தீர்மானத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் - இந்தத் தீர்மானம் நிறைவேற்றத் தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. இது வெறுமனே இலங்கை மீது ஒரு பிடியை மீண்டும் வைத்திருப்பதற்காக இந்தியா மற் றும் மேற்கு நாடுகள் 40/1 தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால் இலங்கை அரசாங்கம் ஒன்றையும் செய்யப் போவதில்லை என்பதும் அவர்களுக்கும் தெரியும். ஏனென்றால் இப்போதைய மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்திலும் தமக்கு விருப்பம் இல்லை என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இலங்கையின் அதியுச்ச அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதியும் அவருக்கு அடுத்த நிலையில் அதிகாரத்தில் இருக்கின்ற பிரதமரும் தெட்டத் தெளிவாக இந்த விசாரணையை தாங்கள் ஒருநாளும் நடத்தமாட்டோம் என்று சொல்லிக் கொண்டு வருகின்றார்கள். மனித உரிமைகள் பேரவையின் தீர்மா னம் வலுவுள்ளதாக அல்லது அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டுமென்றால் ஒரு நாட்டின் பெயர் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்போது அந்த நாடு விரும்பினால் மட்டுமே அதனை அமுல்படுத்தலாம்.

அந்தப் பேரவையின் சட்ட ஏற்பாடுகளும் அப்படித்தான் இருக்கின்றன. ஆகையினால் இந்த நாடே தாங்கள் அதனை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கூறுகின்ற நிலையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்தத் தீர்மா னத்தில் எதுவும் நடக்கப் போறதில்லை. ஆக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எடுபிடியாக இருக்கின்ற சுமந்திரன் நாடாளுமன்றத்தில் பேசியமைக்குப் பதிலளித்த ரணில், பொத்திக் கொண்டு அடக்கமாக ஒடுக்கமாக இருக்க வேண்டுமென்று தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

பிரதமரின் அந்தக் கருத்துக்கு இன்றைக்கு பேரினவாத மட்டத்தில் வரவேற்பும் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகச் சொல்லிய தரப்புக்கள் கூட இன்றைக்கு ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தை வரவேற்றிருக்கின்றார்கள்.
இந்தத் தீர்மானத்தால் இங்கு ஒன்றுமே நடக்கப் போவதில்லை என்று கூறியிருக்கின்றோம். போர்க்குற்றங்கள் இனவழிப்புத் தொடர்பாகச் சாட்சியங்களாக இருக்கக் கூடியவர்கள் இறக்கின்றார்கள் - மறந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள் அல்லது அச்சுறுத்தப்பட்டு மெளனமாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இப்படி எல்லாம் நடந்து நடந்து இந்தப் போர்க்குற்றங்கள் இன அழிப்புத் தொடர்பான சாட்சியங்கள் இல்லாமல் செய்கின்ற நடவடிக்கைகள்தான் நடக்கப்போகின்றனவே தவிர வேறேதும் நடக்கப் போவதில்லை. ஆனாலும் மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் இது ஒரு வழியில் உதவும். அது எப்படியென்றால் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்தத் தேர்தலில் சீன சார்பு ஆட்கள் பதவிக்கு வந்தால் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு இந்தத் தீர்மானங்கள் உதவியாக இருக்கும்.

அதாவது இங்கு ஒன்றும் நடக்கவில்லை. நடக்கவில்லை என்று இந்தத் தீர்மானத்தை வைத்து பிரச்சினையாக்கலாம். அடுத்தது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் இந்தியா -மேற்கு நாடுகளின் எடுபிடியாக இருக்கக் கூடிய ரணிலைத் தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவோ அல்லது கோட்டாபயவோ வேட்பாளராக வந்து வெற்றி பெற்றால் அதன் போது அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு இந்த விடயங்கள் கையில் எடுக்கப்படலாம்.

கேள்வி - ஜெனீவாத் தீர்மனம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை எவ்வாறு அமைந்தள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில் - தமிழ் மக்களுக்கு இது முற்றிலும் ஏமாற்றம் தான். இந்தத் தீர்மானம் என்பது நூற்றுக்கு நூறு வீதம் முற்றிலும் ஏமாற்றமான ஒரு விடயம் தான்.

கேள்வி - இந்தத் தீர்மானம் கால அவகாசம் என்று சில தமிழ்த் தரப்புக்க ளால் சொல்லப்படுகின்ற நிலையிலும் இந்தத் தீர்மானம் சர்வதேச மேற்பார்வை தான் என்று கூட்டமைப்புத் தரப்பினரால் சொல்லப்படுகின்றதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் - சுமந்திரன் இதனைக் கால அவகாசம் என்று சொல்லாமல் சர்வதேசக் கண்காணிப்பு என்று சொல்லலாம். ஆனால் ஒரு கண்காணிப்பு என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கொடுப்பதற்குத்தான் தேவை. ஆனால் அந்தக் கண்காணிப்பு பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதாக இருக்கப் போகின்றதென்றால் அதனால் பிரயோசனமும் இல்லை.

ஆகையினால் சுமந்திரன் தன்னுடைய சட்ட வல்லமையையும் வாதத் திறமையையும் வைத்து இந்த மக்களை ஏமாற்றுவதற்காக பயன்படுத்துகின்ற வார்த்தை ஜாலமே இது. அதைத் தவிர இந்தக் கண்காணிப்பு தமிழ் மக்களின் நலன்களுக்காக அல்லது தமிழ் மக்களுக்கு நீதி கொடுப்பதற்கானதும் அல்ல. மாறாக இலங்கையின் பிடியை இந் தியா - மேற்கு நாடுகள் வைத்திருப்பதற்காக தமிழ் மக்களின் வாயை மூடி சுமந்திரன் செய்கின்ற துரோகம் தான் இது. அந்தத் துரோகத்தை மூடி மறைப்பதற்காக சுமந்திரன் கண்டு பிடித்திருக்கின்ற ஒரு வார்த்தை ஜாலம் தான் இந்தக் கண்காணிப்பை நீடித்தல் என்பதாகும்.

கேள்வி - ஜெனீவாவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நடை முறைப்படுத்தாவிட்டால் சர்வதேச பொறிக்குள் சிக்க வைப்போம் என்று நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் - அது முற்றிலும் ஒரு பொய். ஒரு நாடகம். அடுத்தடுத்து தேர்தல்கள் வரவும் இருக்கின்றன. குறிப்பாக ஜனாதிபதித் தேர் தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என தேர்தல்கள் வரப் போகிறதால் இந்த மூன்று தேர்தல்களையும் நோக்ககாக் கொண்டே செயற்பட ஆரம்பித்திருக்கின்றனர். இந்த மூன்று தேர்தல்களிலும் கொழும்பில் இவர்கள் தங்கள் பேரம் பேசல்களை அதிகரித்து இன்னும் மாளிகை வீடுகளையும் சொகுசு வாகனங்களையும் தங்கள் சுகபோகங் களையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இவர்கள் வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குகளை இந்திய மேற்குத் தரப்புக்கள் விரும்புகின்றவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதன் ஊடாகத் தான் அந் தச் சுகபோகங்களை அனுபவிக்க முடியும்

தாங்கள் இன்னும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக இன்னமும் தாங்கள் இந்த விடயங்களில் உறுதியாக இருக்கிறோம் நேர்மையாக இருக்கிறோம் என்று மக்களை ஏமாற்றுவதற்காச் சொல்கிற வார்த்தை ஜாலம் மட்டும் தான் இவை எல்லாம்சர்வதேசப் பொறிக்குள் சிக்க வைக்கி றோம், குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சொல்லப் போகின்றோம் என்று கூறுவது எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள் மட் டும் தான். அதனைவிட வேறொன்றும் இல்லை. இவர்கள் விரும்பினாலும் விரும் பாவிட்டாலும் கூட எதிர்காலத்தில் இந்தியா - மேற்குலகைச் சார்ந்தவர்கள் இந்த நாட் டின் அதிகாரத்துக்கு வருவதற்கான தேர்தல்களில் பெற்றி பெற முடியாவிட்டால் நிச்சயமாக இது பாதுகாப்புச் சபையை நோக்கி கொண்டு செல்லப்படும்.

ஏனென்றால் இலங்கை மீது நெருக்கடி கொடுப்பதற்கு இந்த நாடுகள் கட்டாயமாக அதைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. அப்படியொன்று நடக்க இருக்கை யில் தாமும் அதைச் சொன்னதாகக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்ற முன்னேற் பாடே தவிர வேறேதும் இல்லை.
அத்தோடு வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்கும் மீண்டும் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்கும் தங்களுக்குச் சாதக மில்லாத அரசு ஒன்று வருகின்றபொழுது அடுத்த கட்டத்திற்கு இந்த நாடுகள் போகும்போது ஏதோ தாங்கள் படிப்படியாகச் சொன்னது என்று மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சி தான் இது.

இது தவிர ஒரு நேர்மையான முயற்சி அல்லது நிலைப்பாடுகள் இவையல்ல.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு முண்டு கொடுத்து அரசைப் பாது காப்பாதாக நீங்கள் உள்ளிட்ட பலரும் குற்றச் சாட்டுக்களை முன்வைத்திருந்த நிலையில் ஜெனீவா தீர்மான விவகாரத்தில் தற்போது அரச தரப்பினரும் கூட்டமைப்பினரும் மாறு பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி முரண்பட்ட நிலைமைகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் - இலங்கையில் கூட்டமைப்பைப் பொறுத்தவரை சம்பந்தன் தனக்கு கொடுத்த மாளிகைகளையோ அல்லது சொகுசு வாக னங்களையோ திருப்பிக் கொடுக்கவில்லைத் தானே. ஆக பெறவேண்டிய அத்தனையையும் 16 உறுப்பினர்களும் பெற்று விட்டனர். அவ்வாறு தங்களுக்கான சுகபோகங்களைப் பெற்று தங்கள் எதிர்காலத்துக்குரிய சகலவித மானதையும் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்

அப்படிப்பட்ட ஒரு இடத்தில் பாதுகாக்கப் படவேண்டியது ரணில் அரசு தான். அத்தோடு எதிர்காலத்தில் ரணிலின் பதவியும் தான். ரணிலுக்கும் கூட்டமைப்புக்கும் முரண்பாடு வந்துவிட்டது. ரணில் இப்போது கடும் தேசியவாத நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். கூட்டமைப்பு விரும்பியதற்கு அவர் இடமளிக்கவில்லை என்ற அபிப்பிராயமொன்றை தென்னிலங்கையில் ஏற்படுத்தினால் தான் வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அல்லது ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றி பெறலாம். அவ்வாறு இல்லையென்றால் அவர் வெல்ல முடியாது. ஆகையினால் தான் இந்திய - மேற்கு நாடுகளுக்கு இது தேவை யான முதலீடு. ஆனபடியினால்தான் தற்போது இந்த நாடகங்கள் நடக்கின்றன. பிரதமருக்கும் கூட்டமைப்புக்கும் பகை.

கூட்ட மைப்பு அரசைக் சிக்க வைக்க முயற்சிக்கிறது போலவும், ரணில் விக்கிரமசிங்க ஏதோ அதற்கு எதிராக துணிந்து நின்று போராடுவது போன்றதாகவும் நாடகம் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறோம் என்று தென்னிலங்கை மக்களுக்குக் காட்டுவதன் ஊடாக ரணில் நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை. அவர்தான் நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றிக் கொண்டு போகின்றார் என்ற ஒரு நம்பிக்கையைச் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி எதிர்காலத்தில் அவர்களது வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

அரசிற்கு ஆதரவாகச் செயற்பட வேண்டு மென்பதற்காக கூட்டமைப்பிற்கு கொடுக்கப்பட்ட கம்பெரெலியத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா, கூட்டமைப்பின் சிபாரிசு இல்லாமல் அந்தத் திட்டம் நடக்கிறதா என்று பார்த்தால் அப்படி ஏதும் இல்லை. ஆனால் அவை எல்லாம் உள்ளால் நடந்து கொண்டிருக்கையில் வெளியில் ஒரு நாடகம் தான் இப்போது நடக்கின்றது. ஆக தமிழ் மக்களுக்கு சுமந்திரன் ஒரு வீரன் என்றும், அவர் விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்கிறார். அதில் தீவிரமாக நிற்கிறார் கொதித்தெழுகிறார் என்றும் காட்ட வேண்டும். 

ஏனென்றால் அவ்வாறு காட்டுவதனூடாக கூட்டமைப்பு வாக்கு பெற வேண்டும். அதே நேரம் கூட்டமைப்பின் இத்தகைய நிலைப்பாட்டிற்கும் அல்லது சுமந்திரன் போன்றவர்களின் கருத்துக்க்களுக்கு ரணில் பதிலடி கொடுக்கவும் வேண்டும். ஏனென்றால் போர்க்குற்றங்களில் இருந்து இராணுவத்தைப் பாதுகாப்பதாகத் துணிந்து நிற்கிறார் என்று சிங்கள மக் களுக்குக் காட்ட வேண்டும். இதுவெல்லாம் இன்று நடக்கின்ற ஒரு கூட்டு நாடகம். தற்காலிகமாக ஜனாதிபதித் தேர்தல் முடிவ டையும் வரை ரணிலை ஒரு தீவிரமான சிங்கள பெளத்த தேசியவாதியாக காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அது இந் திய - மேற்கு நாடுகளின் கூட்டாகத் திட்டம் தீட்டப்பட்டுத் தான் நடக்கிறது.

கேள்வி - ஜெனீவாத் தீர்மானத்திலுள்ளது போன்று கலப்பு பொறிமுறைக்கு எதிரான நிலைப்பாட்டில் சிங்களத் தரப்புக்கள் எல்லாம் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்து இருக்கின்ற போதிலும் தமிழ்த் தரப்புக்கள் இந்த விடயங்களில் ஒருமித்த நிலைப்பாடு இல் லாமல் மாறுபட்ட நிலைப்பாடுகளிலேயே இருக்கிறதே. ஏன் அந்த ஒற்றுமையாக அல்லது ஒரு மித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் இருக்கின்றது?

பதில்- என்னைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் கூட்டமைப்புக்குத் தான் வாக்களித்திருக்கின்றனர். கடந்த 2015 நாடாளுமன்றத் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விஜயகலாவுக்கு வாக்களித்தவர்களைத் தவிர ஏனைய அனைத்து மக்கள் ஒற்றுமையாகக் கூட்டமைப்புக்கே வாக்களித்திருக் கின்றனர். ஆனால் அந்த ஒற்றுமையை வைத்து இவர்கள் தற்போது இனத்தைக் காட்டிக் கொடுக்கின்றார்கள். 

இந்த 16 பேரும் அசரம் தப்பாமல் தங்கள் சுகபோகங்களைப் பெற்றுக் கொண்டே காட்டிக் கொடுக்கின்றார்கள். 16 பேரின் கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது. ஆக தமிழ்த் தரப்பு பிரிந்து நிற்கின்றது என்ற கருத்தும் இதில் கிடையாது. ஆகையினால் ஜெனீவாக் கூட்டத் தொடர் என்ற ஒன்று வருகின்றபோது மக்கள் ஒன்றாக நின்று சாதிக்கக் கூடிய விடயங்கள் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே இந்த மக்கள் விரும்பி நாடாளுமன்றத் தேர்தலில் கொஞ்சப் பேரைப் பிரதிநிதிகளாகத் தெரிந்து விட்டிருக்கின்றனர். வடக்கு - கிழக்கிலே தெரிந்தோ தெரியாமலோ மக்கள் ஈ.பி.டி.பிக்கும் வாக்களித்திருக்கின்றனர்.

அதே போன்று பேரினவாதக் கட்சிகளுக்கும் வாக்குப் போட்டிருக்கின்றனர். மேலும் ஒரு சில முஸ்லிம் கட்சிகளுக்கும் வாக்குப் போட்டிருக்கின்றார்கள். கூட்டமைப்பிற்கு வாக்குப் போட்டிருக்கின்றனர். இதில் யாராவது ஒருவர் இந்த மக்களுக் காக போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென ஜெனீவாவில் சென்று கதைக் கக் கூடியவர்களாக இருக்கின்றார்களா என் றால் இல்லை.

அப்படியிருக்கத்தக்கதாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட நூறு வீதமான பிரதிநிதிகளும் உள்ளக விசாரணைக்குச் சந்தர்ப்பம் கொடுங்கள் என்றும் அல்லது விசாரணையே தேவையில்லை என்றும் கேட்கின்ற ஆட்களாகத்தான் இருக்கின்றனர். தமிழ்த் தரப்பு ஒற்றுமையாகத் தான் இருக்கிறது. ஒற்றுமையாகத் தான் கூட்டமைப்பினருக்கு வாக்கு அளித்திருக்கின்றனர். அந்த வாக்கைப் பெற்றுக் கொண்டு கூட்டமைப்பினர் இனத்தை விற்பதற்கு யார் பொறுப்பு. இன்னொரு நாடாளுமன்றத் தேர் தலில் மக்கள் ஒற்றுமையாக இவர்களை வீட்டுக்கு அனுப்பாவிட்டால் இவர்கள் மீளவும் இதனையே செய்வார்கள்.

கேள்வி - கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கால அவ காசம் வழங்குவதற்கு உடன்பட்டதாகக் கூறு கின்றீர்கள். ஆனால் கூட்டமைப்பில் இருக் கின்ற பங்காளிக் கட்சிகள் அதற்கு தாம் உடன் படவில்லை எனக் கூறி வெளியில் இருக்கின்ற தமிழ்த் தரப்புக்களுடன் இணைந்த வேறு நிலைப்பாடுகளை எடுக்கின்றனவே?

பதில் - அவை எல்லாம் முழு நாடகம் தான். இதனைச் சட்டக் கோணத்தில் நீங்கள் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சிவசக்தி ஆனந்தன் தன்னுடைய கட்சி தனக்கு சபையில் பேசுவதற்கு இடம் தருவதில்லை எனச் சிறப்புரிமைப் பிரச்சனையைக் கிளப்பியிருந்தார். 

அங்கு அவர்கள் கூட்டமைப்பு என்று சொல்லப்பட்டாலும் நான்கு கட்சிகளும் நான்கு சின்னத்தில் போட்டியிடாமல் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தான் போட்டியிட்டார்கள். ஆக நாடாளுமன்றத்தில் சட்டபூர்வமான பதிவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி என்று தான் இவர்கள் எல்லோரும் இருக்கின்றனர். ஆகையினால் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தான் அங்கு ஒதுக்கீடுகள் செய்யப்படும். அந்தக் கட்சி தான் தங்களுடைய உறுப்பினர்கள் யாருக்கு நேரம் கொடுக்கிறதென்பதை அங்கு தீர்மானிக்கும். 

அந்த இடத்தில் சிவசக்தி ஆனந்தன் தனக்கு தமிழரசுக் கட்சி நேரம் தரவில்லை என ஆட்சே பனை தெரிவித்து சிறப்புரிமைப் பிரச்சனை யைக் கிளப்புகின்றார். அந்த இடத்தில் தினேஸ் குணவர்த்தன எழும்பி இவருக்கு ஆதரவாகக் கதைக்கின்றார். அங்கு சபாநாயகர் கூறியது என்னவென்றால், சிவசக்தி ஆனந்தன் தனித்து இயங்குவதாக தனக்கு இன்னமும் அறி விக்கவில்லை என்று தெரிவித்தார். அப்படி என்றால் அதன் பொருள் இவர்கள் ஒரு அணி யில் தான் இருக்கின்றனர். சிவசக்தி ஆனந்தன் வெளியில் நடிக்கின்றார் ஒழிய சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நிலைப்பாட் டில் தான் இருக்கின்றார். 

இவை எல்லாம் எங்கள் மக்களை ஏமாற்றும் முயற்சிதான்.உண்மையில் செல்வம் அடைக்கல நாதன் சரியானவர் - நேர்மையானவர் என்றால், தமிழரசுக் கட்சி துரோகமிழைக்கிறது. மக்களுக்குத் துரோகம் இழைப்பதால் தொடர்ந்தும் என்னால் கட்சியில் இருக்க முடியாது என்பதால் இந்தக் கட்சியில் இருந்த நான் வெளியேறி தனித்து இயங்குகின்றேன் என்று சபாநாயகருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செல்வமும் சிவசக்தி யும் சித்தார்த்தனும் தமிழரசுக் கட்சி துரோகம் இழைக்கிறது நாங்கள் தனித்துவமாக இயங் கப் போகிறோம் என்று எழுதிக் கொடுக்கட்டும் பார்ப்போம்.

கேள்வி - தேர்தல் வரவிருக்கிறதாகச் சொல்கின்றீர்கள். ஆகவே அத் தேர்தலை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ள போகின்றீர்கள்?

பதில் - தேர்தல்கள் வரும்போது நாங்கள் அந்தத் தேர்தல்களை எதிர்கொள்வோம். எங்களைப் பொறுத்தவரை விடுதலையைத் தரக் கூடிய வகையில் அரசியல் முடிவுகளை எடுத்துக் கொண்டு போக வேண்டும். உதார ணமாக நாடாளுமன்றத்தில் பலர் பதவியில் இருந்து கொண்டு கால அவகாசம் வழங்கு வதான ஒரு முடிவை எடுத்து அறிவித்துவிட்டு வெளியில் வந்து கால அவகாசம் வழங்கக் கூடாதென்று படம் போடமாட்டோம். அந்த விளையாட்டுக்களை நாங்கள் செய்யமாட் டோம். ஆகையால் எம்மைப் பொறுத்தவரை ஒரே நிலைப்பாட்டை ஒரு குழப்பம் இல்லாமல் எல்லா இடத்திலும் நாங்கள் வலியுறுத்திக் கொண்டு செல்வோம்.

கேள்வி - கூட்டமைப்பு மக்களை ஏமாற்றி விட்டதாகவும் தவறான பாதையில் பயணிப்ப தாகமூம் நீங்கள் கூறுகின்ற அதே நேரத்தில் கூட்டமைப்பிற்கு எதிராக அணியொன்று உருவாக்கப்படுமானால் அதில் நீங்கள் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா?

பதில் - பல கட்சிகள் இணைந்தவுடன் அது மாற்றாக அமையாது. கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகளை ஒதுக்கி வைப்பதால் மட்டும் கூட்டமைப்பிற்குள் பிழை நடக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை ரெலோ, புளொட்,ஈபிஆர்எல்எப் ஆகியவற்றை ஒதுக்கி விட்டு அரசியல் தீர்வு என்ற விடயத்தில் தமிழரசுக் கட்சி சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற வகையில் ஒரு தீர்வை அரசியல் யாப்பில் முன்வைத்திருக்குமாக இருந்தால் ஒட்டு மொத்த தமிழினமும் அவர்களுக்கு பின்னால் நின்றிருக்கும். 

இந்த மூன்று கட்சிகளையும் நீங்கள் ஏற்கவில்லை. அதனால் நீங்கள் கூறுவதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூட மக்கள் சொல்லப் போவதில்லை. அதேபோல இவை எல்லாவற்றையும் வெளியில் விட்டுவிட்டு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை நடத் தப்பட வேண்டுமென தமிழரசுக் கட்சி வைத்திருக்குமாக இருந்தால் முழு இனமும் அவர்களுக்குப் பின்னால் நின்றிருக்கும். எங்களைப் பொறுத்தவரையில் பல கட்சிகள் சேர்ந்தவுடன் அது கூட்டமைப்புக்கு மாற்று அல்ல. தனியாகவோ கூட்டாகவோ கூட்டமைப்பு எந்தக் கொள்கையைக் கைவிட்டதாகச் சொல்கிறோமோ அந்த நிலைப்பாடுகளை யார் முன்னெடுக்கின்றார்களோ அந்த நிலைப்பாட்டோடு போகின்ற தரப்பு தான் நிச்சயமாக மாற்றாக எழும்பும்.

கேள்வி - எதிர்வரும் தேர்தல்களில் மாற்று அணியாக விக்கினேஸ்வரன் தலைமையிலான அணியுடன் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கட்சியும் உள்ளடக்கிய கூட்டில் நீங்கள் இணைந்து போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?

பதில் - எங்களைப் பொறுத்தவரை ஈபி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந் திரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கல நாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகி யோர் தலைமையிலான இந்த மூன்று கட்சி களுடனும் வாழக்கையில் கூட்டு இல்லை. அவர்களைக் சேர்த்து வைத்துக் கொண்டு யார் நின்றாலும் அவர்களுடனும் கூட்டு இல்லை. 

அதில் நாங்கள் தெளிவாக உள் ளோம். தனித்து நின்று இந்த மக்களுக்காகச் செய்யக் கூடியதைச் செய்வோம். ஆகையினால் இந்த மக்களை நாங்கள் ஏமாற்றுவதற்குத் தயார் இல்லை. ஒற்றுமை யின் பெயரால் மக்களை ஏமாற்றுங்கள் என்று சொல்கின்றனர். அந்த ஏமாற்று வேலையை செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஆகையினால் இந்த இடத்தில் விக்கினேஸ்வரன் ஐயா தான் முடிவு எடுக்க வேண்டும். அவரைப் பொறுத்தவரையில் இன்று வரையில் அவரது நிலைப்பாடாக அவர் சுரேஸ் பிரேமச் சந்திரனை விட்டுவிட்டு வரு வதற்குத் தயார் இல்லை.

கேள்வி - அவ்வாறாயின் எதிர்வரும் தேர்தலில் நீங்கள் தனித்தா போட்டியிடுவீர்கள்

பதில் - அது விக்கினேஸ்வரன் ஐயாவின் கையில் தான் உள்ளது. நாங்கள் வருகின்ற தேர்தலை நிச்சயம் எதிர்கொள்வோம். ஆனால் அதில் எங்களைப் பொறுத்தவரை யில் ரெலோ, புளொட்,,ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளுடன் கூட்டும் இல்லை. அவர்களோடு சேர்ந்து தான் கூட்டொன்று உருவாக்கப்படு மாக இருந்தால் நாங்கள் அந்தக் கூட்டில் இணைந்து கொள்ளாமல் தனியாகவே நிற்போம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad