கலிபோர்ணிய நீதிமன்றத்தில் கோத்தபாயா!? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, April 8, 2019

கலிபோர்ணிய நீதிமன்றத்தில் கோத்தபாயா!?

கோத்தா மீது அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அமெரிக்க நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கோத்தபாயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சாவால் முதலாவது வழக்கு கோத்தபாயவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு இரண்டாவது வழக்கினை கோத்தபாயவிற்கு எதிராக தாக்கல் செய்துள்ளது.

தமது தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர் என்ற அடிப்படையில் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில், அஹிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ள சிவில் பாதிப்பு வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கன் பல்பொருள் அங்காடி வளாகத்தில் உள்ள Traders Joe's என்ற வணிக நிலையத்தின் வாகனத் தரிப்பிடத்தில் நேற்று இரவு கோத்தபாய ராஜபக்சவிடம் நீதிமன்றக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, படையினரின் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சார்பில், யஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம், அமெரிக்க சட்ட நிறுவனமான Hausfeld உடன் இணைந்து மற்றொரு வழக்கை கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ளது.

இந்த சிவில் பாதிப்பு வழக்குத் தொடர்பாகவும், கோத்தபாய ராஜபக்சவிடம் நேற்றிரவு Traders Joe's வாகனத் தரிப்பிடத்தில் வைத்து நீதிமன்ற அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட றோய் சமாதானம் என்ற தமிழரே, கோத்தபாய ராஜபக்சவிடம், இழப்பீடு கோரி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் இவர், 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைது செய்யப்பட்டு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். 2010ஆம் ஆண்டு இவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad