வத்தளை, நீர்கொழும்பு முதல் அப்புறம் புத்தளம், மாவட்டத்தில் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் "மதம் - இனம்" மாறினார்கள் என்ற விடயம் தொடர்பில்;
மேற்கு கரையோரமாக வத்தளை முதல் புத்தளம் வரை இன்று வாழ்கின்ற கணிசமான சிங்களவர்கள், ஒரு காலத்தில் தமிழர்களே என்ற கூற்று உண்மையானது.
அவர்கள் முதலில் கத்தோலிக்க மதத்துக்கு போனார்கள். அவர்களது பிள்ளைகள் கத்தோலிக்க பாடசாலைகளில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள்.
வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் அடைந்தார்கள்.
இப்போதும் இந்த பிரதேசத்தில் வாழும் முதிய சிங்களவர்களை கண்டு பேசினால் அவர்கள் கொச்சை தமிழ் பேசுவது தெரியவரும். அவர்களது சிங்களத்திலும் கணிசமான தமிழ் சொற்களை காணலாம்.
ஆனால், புத்தளத்துக்கு மேலே மன்னார் மாவட்டத்தில், தமிழ் மொழி ஊடான கத்தோலிக்க பாடசாலைகள் சிங்கள மொழி பாடசாலைகளாக மாற்றப்படவில்லை. அதனால் பாடசாலை மொழியும், வீட்டு மொழியும் எப்போதும் தமிழ்தான். ஆகவே மதம் மாறிய தமிழர் ஒருபோதும் இனம் மாறவில்லை.
அதுமட்டுமல்ல, போராட்ட காலங்களில், அந்த மன்னார் மாவட்ட கத்தோலிக்க தமிழர்கள், தமிழின உணர்வுடன் பெரும் பங்களிப்பை வழங்கினர். இவை வரலாற்றுரீதியான கடந்த கால உண்மைகள்.
இனி எதிர்காலத்தை பார்ப்போம். தமிழ் இனத்தை காக்க வேண்டுமென்றால், அதற்கு வழி தமிழ் இந்துக்களும், தமிழ் கத்தோலிக்கர்களும் மோதிக்கொள்வது என்பதல்ல.
அப்படி மோதிக்கொண்டால் நாம் ஒரு இனமாக, இருப்பதையும் இழந்து, நாசமாகத்தான் போவோம். வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது. மோதல்களை தூண்டும் தமிழ் தலைவர்களை வரலாறு தண்டிக்கும்.
இரு தரப்பும் ஒருவரை ஒருவர் அங்கீகரித்து, “நாம் தமிழர்” என்றும், அப்புறம் எல்லா தரப்பும் “இலங்கையர்” என்றும் ஒன்றுகூட வேண்டும்!
பதிவர் - மனோகணேசன்
No comments:
Post a Comment