கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் 26.08.1993 அன்று….
‘மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! இப்ப எப்படி இருப்பானோ ?’
அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது, “புலிக்கு…..” என்று புறப்பட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூடக் காணவில்லை.
இடையில் ஒரு நாள்…..
சண்டை ஒன்றில் கண்ணிவெடி (மைன்ஸ்) வெடித்து பிள்ளைக்குக் கால் போய்விட்டதாம் என்ற துயரச்செய்தி அம்மாவுக்கு எட்டியது. அம்மாவின் கண்களில் அருவி, வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ…? “அம்மா….!” என்று அழுவானோ….? அவள் மகனையே நினைத்துக்கொண்டிருப்பாள். கொஞ்ச் நாட்களாக அம்மாவின் இரவுகள் துக்கம்று நீண்டு கழிந்தன.
காலம் அசைந்தது.
“பிள்ளை இப்ப யாழ்ப்பாணத்திலையாம்….. கடற்புலியாக கிளாலியில நிக்கிறானாம்… சிங்கள நேவியிட்ட இருந்து சனங்களைக் காப்பாத்துகிற வேலையாம்…..” அவர்கள் அறிந்தார்கள்.
‘எவ்வளவு காலமாகிவிட்டது….? எப்படி இருக்கிறானோ…? மகனைப் பார்க்க அம்மா ஆசைப்பட்டாள். பாசமும், ஆவலும் அவளை அவரசப்படுத்தியது.
சோதனைச் சாவடிகள், இராணுவக் கெடுபிடிகள். கொச்சைத் தமிழில் துளைத்தேடுக்கும் கேள்விகள், கிரானில் துவங்கி தாண்டிக்குளத்தில் முடிந்த துயரப் பயணத்தின் இறுதியில், அம்மா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள்.
மட்டக்களப்பு தொடர்பகத்தில் பெயரைப் பதித்து, பிள்ளைக்குத் தகவல் அனுப்பிவிட்டு ஆவலோடு காத்திருந்தாள். தங்கியிருந்த வீட்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருக்க ஒரு நாள் கடந்து போனது; ஆனால் மகன் வரவில்லை.
“கிளாலியில நேவிக்கு கரும்புலித் தாக்குதல் நடந்ததாம்…. கனக்க நேவியும் முடிஞ்சுதாம்…..” என்று ஒரு செய்தி மட்டும் வந்தது.
எல்லோருக்கும் சோகம் கலந்த மகிழ்ச்சி. அம்மாவுக்கும் தான் மாலையானதும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தச் செய்தியைத் தாங்கி, “ஈழநாதம்” விசேட பதிப்பு அம்மாவின் கைகளிற்கு வந்தபோது…. அந்த படங்கள்….! அந்தப்படம்….! அம்மா உற்று உற்றுப் பார்த்தாள்…. கண்கள் இருண்டன…..! உடல் விறைத்துப்போனது. நம்பவே முடியவில்லை. அம்மாவின் பிள்ளை…. வரதன்…..? அவன்தானா என்று பெயரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஆம்! அது அம்மாவில் பிள்ளையே தான். அள்ளி அனைத்து முத்தமிட ஆசையோடு ஓடோடி வந்தாளே….. அதே பிள்ளைதான்.
கறியில்லாமல், காசுமில்லாமல் அடுப்பெரியாத நாட்களில், “சோறு காய்ச்சனை கரியோட வாறன்” என்று துவக்கெடுத்துக் கொண்டு காட்டுக்குப் போவானே…… அதே மகன்.
வீதியில் சிங்களப் படை மறித்து கிறினேட்டைக் கையில் கொடுத்து “வாயுக்குள்ள போடடா….” என்றபோது,” விருப்பமெண்டா உணர வாயுக்குள்ள போடு……” என்று துணிவோடு திரும்பிக் கொடுத்துவிட்டு வந்தானே…. அந்த மகன்!
சோகத்தோடு அனைத்து நிற்கும் தலைவனருகில், பூரிப்போடு சிரித்து நின்றான் அந்தக் கரும்புலி.
தாங்கமுடியாத பெரும் சுமையாய் துயரம் நெஞ்சை அழுத்த அம்மா அழுதாள். கவலையைத் தீர்க்க கண்ணீர் தீரும்வரை அழுதாள்.
கந்தசாமி ஐயாவுக்கும் அம்மாவுக்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளுக்குள் நான்காவது வரதன். இராமச்சந்திரன் என்பது இயற்பெயர்.
1973ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஒவ்வொரு வருடமும் தமிழ்ப் புத்தாண்டிற்கு இரண்டு நாள் முன்னதாக வரதனின் பிறந்த நாள் வந்து போகும்.
கல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் மிகுந்தவனாக துடிப்புடன் பள்ளிக்குப் போனவனை, அப்பாவோடு வயலுக்குப் போகவைத்தது குடும்பநிலை.
குடும்பச்சுமை பகிர்ந்து உழைச்சு, 16 வயதுவரை வீட்டோடு இருந்தவனை இயக்கத்துக்குப் போக வைத்தது நாட்டு நிலை.
மன்னம்பிட்டிக்குக் கிழக்கே 15 மைல் தூரத்திலுள்ள கள்ளிச்சை வடமுனைதான் ஊர். ஆக்கிரமிப்பின் கொடிய வழியை அனுபவிக்கும் எங்கள் தாயகத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்று.
மட்டக்களப்பில் பயிற்சியை முடித்தவனுக்கு அங்கு கண்ணிவெடிப் பிரிவில் பனி.
சிங்களப் படையுடன் மீண்டும் போர் துவங்கி, வெடியோசைகளால் நிறைந்து நகர்ந்து கொண்டிருந்த நாட்களுள் ஒன்று. கள்ளிச்சை வடமுனைக்கும் பெண்டுகல்செனைக்கும் இடையில் எதிரி விதைத்துவிட்டுப் போயிருந்த மிதிவெடிகளுள் ஒன்று, விநியோக வேளைகளில் ஈடுபட்டிருந்த வரதனின் வலது காலைப் பிய்த்தது.
காட்டு முட்கள் கீறிக் கிழிக்க நரக வேதனைக்கு நடுவில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டான் வரதன். சிகிட்சை முடிய புகைப்படப் பிரிவில் பணி.
கிளாலியிலிருந்த கடற்புலிகளின் தளம் .
எங்கள் அன்புக்கினிய மக்களை, இரத்தப்பசி கொண்டலையும் இனவாதப் பேய்களிடமிருந்து காத்து நிற்கும் உன்னத பணியில் அவர்கள்.
இரவில் விழித்திருந்து அலைமடியில் காவல், பகலை இரவாக்கி துங்க முயலும் வாழ்வு.
முகாமில் எப்பொழுதும் கலகலப்பை நிறைத்திருப்பவன் மதன் தான். துடிதுடிப்பான சுபாவம் அவனுடையது.
வரதனும், மதனும் உற்ற நண்பர்கள். புகைப்படப் பிரிவில் ஒன்றாக வேலை செய்தபோது மெல்ல அரும்பிய உறவுதான். இன்று உயிருக்குயிரான சிநேகிதமாக இறுக்கம் பெற்றிருந்தது.
ஒன்றாகத் தலைவருக்குக் கடிதம் எழுதி, ஒன்றாகக் கடற்புலிகளுக்கு வந்து, ஒற்றரைக் கால்களோடு நீந்திப் பழகி, பயிற்சி பெற்று, படகேறி கடலில் களமாடி, ஒன்றாகக் கிளாலியில் பணி செய்தவர்கள் ஒன்றாக கரும்புலிக்கும் பெயர் கொடுத்து, இறுதியிலும் ஒன்றாகவே போனார்கள்.
மதன் துடிதுடிப்பானவன். ஒற்றைக் காலில்நின்று கூத்தாடி…. ஊன்று தடியோடு துள்ளியோடி… கும்மாளமடித்தபடி திரிந்து….. அவன் ஓய்வதில்லை .
திருமலைக் காட்டில் மிதிவெடி ஒன்று கழற்றிவிட்ட இடதுகாலுகுப் பதிலாக மதனுக்கு ஜெய்ப்பூர் கால் கொழுவப்பட்டிருன்தது பொய்க்காலை கழற்றிவிட்டு, ஒன்றரைக் காலில் மரத்திலேறி மாங்காயும் இளநீரும் பிடுங்கித்தந்து, எங்களோடு சேர்ந்திருந்து சாப்பிட்டு மகிழ்ந்த உயர்ந்த நண்பன் அவன்.
இரவெல்லாம் படகொடி கடலில் சமராடிவிட்டு, பகலில் ஓய்வெடுத்துத் துங்கமுயலும் தோழர்களை ஊன்று தடியால் தட்டித் குழப்பித் தொந்தரவு செய்துவிட்டுத் துள்ளி ஓடி அவர்களுடியே அன்பான சினப்பிற்க்கும் ஆளாகின்றவன் அந்தக் குழப்படிக்காரன். அவன் கூட தானும் இரவு சண்டைக்குப் போயிருப்பான்: ஆனால் பகலில் ஓடித்திரிவான்.
சண்டைக்குத் தயாரான ஓடுபாடுகள் இல்லாத ஓய்வான ஒரு மாலைப்பொழுதில்…. மதன் ஒரு தென்னைமர அடியில் சாய்ந்திருப்பான். கடற்காற்றோடு கலந்து ஒரு பாடல் விரியும். தன்னுடையது பாடுவதற்கு ஏற்ற ஒரு குரல் இல்லையென்பது தெரிந்திருந்தும் அவன் பாடுவான். அதில் ஒரு கவர்சியிருக்கும்; அருகிலிருப்பவர்களை ஈர்க்கும்.
எப்போதும் எதிலும் கவனமில்லாத ஒருவனைப் போல பகிடி சொல்லித் திரிகின்ற மதன், தனது திறமையை வேலைகளின் போது செயலில் காட்டுவான். எங்களால் செய்யமுடியாமல் போகிற சில சில வேலைகளை, ஒரு காலை இலந்தவனாயிருந்தும் அவன் செய்து முடிப்பான். பெரும்பாலும் தவறுகள் செய்யாமலே இருக்கின்ற மதன், சக தோழர்கள் தவறு செய்யும் போது சொல்லித் திருத்துகின்ற போராளி.
மதனுக்கிருந்த இயல்பான குழ்படித்தனத்தால், வரதனோடு துவங்கிய ஒரு பகிடிச்சண்டை கடைசியில் சீரியசாக முடிந்தது. அந்த உயிர் நண்பர்கள் கதைக்காமல் பிரிந்துபோய்விட்டார்கள். அடுத்த 24 மணிநேரம் வெறுப்பூட்டுவதாகக் கழிந்தது. வரதன் குளிக்கப் போனான். எப்போதும் இருவரும் சேர்ந்தே போவார்கள்; இப்போது வரதன் தனியே. முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு மதன் ஒரு மரக்குத்தியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். “போ” என்று நட்புத் துண்டவும் தன்மானம் தடுத்தது. ஊன்று தடியுடன் துள்ளிக்கொண்டு முந்தி ஓடிப்போய் வாலியை எடுத்த , வரதனுக்கு குளிக்கவார்க்கத் தொடங்கினான் அவன். சேரனிடம் இதைச் சொல்லும் போது வரதனின் கண்கள் பனித்திருந்தன.
வரதன் அமைதியானவன் அதிகம் பேசத் தெரியாதவன். கதைகளை விட செயல்களிலே அதிக ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவன். “கதைக்கும் போதெல்லாம் இயக்கத்துக்குப் பயன்படக்கூடியதாய் ஏதுங்கதியுங்க்கோடா” என்று எங்களுக்கு புத்தி சொல்பவன். அது, வெளியில் தெரியாமல் தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த ஓர் எரிமலை.
அம்மா அப்பாவைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து நீண்டகாலம். எங்கு இருக்கின்றார்களோ…..? ஆமிப்பிரசினைகளால் ஒடுக்கபட்டுத் திரிகின்றார்களோ….? வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதிப் பார்ப்பம் என்ற ஆவல் வரதனுக்கு எழுந்தது. வரதன் கடிதம் எழுதினான்; பதிலுக்காகக் காத்திருந்தான். அடுத்த தரம் எழுதினான்; காத்திருந்தான். பதிலில்லை. மூன்றாம்தரம் பதிலில்லை. நான்காவது கடிதமும் போனது: பதில் வரவே இல்லை.
இடம்பெயர்ந்து வந்து கிளாலியில் இறங்கிய உறவினர்கள் சிலரை எதிர்பாராமல் வரதன் சந்திக்க நேர்ந்தது. “ஒரு இரவு ஊருக்குள்ள ஆமி புகுந்து வெட்டியும், சுட்டும் நூற்றுக் கணக்கில் சனங்களைக் கொண்டவங்கள்…. தம்பி…. தப்பி ஓடிவந்து எங்களுக்குள்ள உன்ரை வீட்டுக்காரர் வரேல்லை… என்ன நடந்ததோ…..? கடவுளுக்குத்தான் தெரியும்!” வானத்தைப் பார்த்து கைகளை விரித்துச் சொல்லிவிட்டு, ஒரு பெருமூச்சோடு அவர்கள் போய்விட்டார்கள்.
காதுகளில் இடியென இறங்கிய செய்தியால் அவன் துடித்துப்போனான். ஏற்கனவே அவனுக்குள் வீசிக்கொண்டிருந்த புயல் ஆவேசம் கொண்டெழுந்தது. ஆனாலும் அது ஒரு வதந்தி மட்டுமே என்பது, கடைசிவரை அவனுக்குத் தெரியாமலே போய்விட்டது.
கிளாலியின் விரிந்த கடல்.
தமிழர்களின் இரத்தமே அலைகளாய் அசையும் 20 மைல் நீளச் செந்நீர்ப்பரப்பு.
இரத்தப்பசிகொண்டு அலையும் சிங்களப் படை. உயிர் விழுங்கும் துப்பாக்கி வாய்களோடு காத்து நிற்கும் மரணவலையம். அந்த மரண வளையத்திலும், கடலரண்களாய் கடற்புலிகள் காவல் நிற்க, எங்கள் மக்கள் துணிவுடன் அயநிக்கும் குடாநாட்டுக்கான தனியொரு பாதை.
நாகதேவன்துறையில் போருத்தபட்டிருக்கும் சக்திவாய்ந்த ராடர்களின் திரைகளில் புள்ளிகளாய் அசையும் எங்கள் படகுகளை, துல்லியமாக இனம் கண்டு தாக்கி மூழ்கடிக்க விரைந்து வரும் எதிரிப் படகுகளை, உள்ளங்கையைக் கூடப் பார்க்க முடியாத கும்மிருட்டிலும் கூட, கண்களை மட்டுமே நம்பி எதிர்கொண்டு விரட்டியடிக்கும் சாதனைக் களம்.
எதிரி தடை செய்த வலையத்தை எதிரிக்குத் தடைசெய்து வீர சாதனை படைக்கும் கடற்புலிகளின் போர்த்திறனையும், அதனைப் பிரமாண்டமான ஒரு வளர்ட்ச்சி நிலையை நோக்கி உயர்த்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் முயற்சியையும் ஆற்றலையும் உலக அரங்கில் பறைசாற்றிக் கொண்டிருந்த போர்முனை.
கிளாலிக் கடலில் மக்கள் போக்குவரத்துச் செய்யத்துவங்கிய நாளிலிருந்து அங்கு காவல் பணியாற்றிக் கொண்டிருக்குக்கும் கடற்கரும்புலிகளின் அணி, வரதனையும் மதனையும் கொண்டிருந்தது.
அந்தக் கடற்களத்தில் புலிகள் எதிரியைச் சந்தித்த ஒவ்வொரு சண்டையிலும், இவர்களின் கைகளிலிருந்து துப்பாக்கிகள் கனன்றிருக்கின்றன.
விடிகாலைகளில், பயணம் போன எம்மக்கள் செத்த பிணங்களாய்க் கரையொதுங்கிய போதெல்லாம், அவர்களுக்குள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டெரியும்.
அவர்கள், துணிகரமான சண்டைக்காரர்கள். அவர்களுடைய வண்டிகளில், எதிரியின் படகுகளை மூக்குக்கு நேரே எதிர்கொண்டு அவனைத் திகைப்பிலாழ்த்துவார்கள். கண்ணைக்கட்டி இருளில் விட்டது போன்ற இருட்டிலும் எதிரியின் படகுகளை இனம் கண்டு, நல்ல வியூகங்களில் தளம்பலின்றி வண்டியைச் செலுத்தி, அவனைத் தாக்கித் திணறடிப்பார்கள். அந்த மயிர்க்கூச்செறியும் கணங்களில் எதிரி தலை தெறிக்க ஒட்டமெடுப்பான். அந்த நேரங்களில் அவர்கள் சொல்வார்கள்; “இப்பமட்டும் ஒரு சக்கை வண்டி இருக்குமெண்டால், இவங்களின்ரை கதை இதிலேயே முடியும்.”
அவர்கள் ஒரு கரும்புலித் தாக்குதலுக்காகக் காத்திருந்தார்கள். “எங்களின் மக்களைக் கொன்றொழித்தவர்களை இதே கடலில் வைத்துக் கொன்றொழிக்க வேண்டும்” என்ற வீர சபதம். அவர்களின் இதயங்களில் முழங்கிக்கொண்டிருந்தது. கரும்புலித் தாக்குதலை நடாத்தும் இரவை , அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்தார்கள்.
“ஏன் கரும்புலியாகப் போகின்றீர்கள்?” என்பதற்கு, ஒரு தத்து வார்த்த விளக்கத்தை அளிக்கக்கூடிய அறிவை அவர்கள் பெற்றிருக்கவில்லையாயினும், அதன் தேவையை, அதன் முக்கியத்துவத்தை, அதன் பலத்தை, உளப்பூர்வமாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
வரதன் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பான். அருகில் போகிற நண்பனிடம் “தலைவர் சொன்னதையே நான் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருக்கிறன். எனது சிந்தனையெல்லாம் அதிலேயே இருக்கு. அந்த ஒரு நொடிப்போழுதுக்காக நான் எவ்வளவு காலமும் காத்துக் கொண்டிருப்பேன். என்றோ ஒரு நாள் கிளாலிக் கடலில ஒரு ‘வோட்டர் ஜெற்’ நொறுங்கும்” என்பான்.
மதனும் அப்படித்தான். அவன் அடிக்கடி சொல்லுவான், “எங்கட எவ்வளவு சனங்களின்ரை ரத்தம் இந்தத் தண்ணியோட கலந்தது. இதுக்கெல்லாம் ஒரு நாளைக்குப் பாடம் படிப்பிச்சே ஆகோணும். அதை நான் சாதிச்சே தீருவேன். அவனுகளையும் இந்தக் கடலிலேயே அழிக்கவேணும்.”
மதன் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். சீனிவாசன் சிவகுமார் என்பது அவனுடைய இயற்பெயர் 1975 ஆம் ஆண்டு, செப்ரெம்பர் திங்கள் 7 ஆம் நாள். அந்த வீரமைந்தனைப் பெற்றால் ஒரு வீரத்தாய். குடும்பத்தில் மூன்று அண்ணன்களுக்கும், ஒரு தங்கைக்கும் இடையில் அவன். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் 9ம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் பொது 1989 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள், பள்ளிக்கூடத்துக்கேன்று புறப்பட்டுப்போனவன் திரும்பிவரவில்லை; “இயக்கத்துக்குத்தான் போயிருப்பான்….” என்ற வீட்டிலுள்ளவர்களின் ஊகிப்பும் பிழைத்துவிடவில்லை.
கிளாலியின் கடற்போர் முனை.
ஏறக்குறைய 60 நாட்கள் அலைகள் போல அசைந்து கடந்துவிட்டன.
அந்த உயரிய சாதனையை நிகழ்த்த அவர்கள் கடலிக்குப் போய்ப்போய்த் திரும்பிவரவேண்டியிருந்தது. நாட்கள் செல்ல செல்ல அவர்களுடைய உறுதி இறுகிக்கொண்டே போனதேயன்றி, இலகியதில்லை.
ஒவ்வொரு தடவையும் சண்டை துவங்கும். துப்பாக்கிக் குழாய்கள் சிவக்க எங்களது படகுகள் பகைவனை எதிர்கொள்ளும். ‘சக்கை’ வண்டி அவனை மின்னலென நெருங்கும். எதிரி ஒட்டமெடுப்பான். சக்கை வண்டி கலைக்க இடைவெளி குறுகும். எதிரியின் வேகம் கூடும். அதிகரித்த வேகத்தோடு சக்கை வண்டி அண்மிக்க, ஒரு அடி உயர நீரில் ஓடக்கூடிய தன் நவீன படகை எதிரி ஆழம் குறைந்த நீர்ப்பரபினூடு செலுத்துவான். சக்கைப் படகுகள் தரை தட்டும். தொடர்ந்தும் கலைக்க முடியாமல் கரும்புலிகள் திரும்ப வேண்டியிருக்கும்.
மறுநாள்….
முகாமின் ஒரு மூஇயில் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு இருப்பார்கள். இரவு தங்களால் இடிக்க முடியாமல் போய்விட்டதே என்பதற்காக , அவர்கள் கவலைப் பட்டுக்கொண்டிருப்பார்கள். 61 நாட்களும் இப்படித்தான் நகர்ந்தன.
25.08.1993.
வழமையான இரவு.
நிலவு உலா வராத இருண்ட வானம்.
சிலிர்ப்பூட்டும் குளிர்.
உடலுக்கு அசதியைத் தந்தாலும், உள்ளத்துக்கு உற்சாகமூட்டும் உவர்க்காற்று.
கடற்புலிகள் காவல் உலா வர, மக்களின் பயணம் துவங்கிவிட்டது.
சக்கை நிரப்பிய ‘புலேந்திரன்’, ‘குமரப்பா’வில் மதனும் வரதனும் தயாராக நின்றார்கள்.
கடந்துபோனவைகளைப் போல அல்லாமல் இந்த 62 ஆவது நாளின் இரவில், அவர்களின் முகங்களில் நம்பிககியின் தெறிப்பு; இனம்புரியாத பூரிப்பு.
அருகில் நின்ற கண்ணாளனிடம் குப்பியைக் கலர்ரிக்கொடுத்து விட்டு மதன் சொன்னான்; “இன்றைக்கு இடிச்சே தீருவேன். திரும்பி வரமாட்டேன்.”
நேரம் நாடு இரவைத் தாண்டியிருந்தது. நாகதேவன்துறைத் தளத்திலிருந்து அலைகளைக் கிழித்துக்கொண்டு முன்னேறினான் எதிரி. இன்று அவனது தாக்குதல் வடிவம் வித்தியாசமானதாக இருந்த்தது.
ஒவ்வொரு தடவையும் மாறுபட்டதாக இருக்கின்ற போதிலும் இன்று அவன் அமைத்து வந்த வியூகம் புதுவிதமானது. இரண்டு அணிகள். ஒன்று ஒருபுறத்தில் புலிகளைத் தடுக்க, மற்றையது மறுபுறத்தில் மக்களைத் தாக்கும்.
ஆனால் பகைவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவனை இருமுனைகளிலும் எதிர்கொண்டனர் கடற்புலிகள். துப்பாக்கி முனைகள் தீ உமிழ, வானம் விழாக்கோலமானது.
சண்டை உக்கிரமடைந்து கொண்டிருந்த ஒரு கட்டத்தில், காத்திருந்த ‘புலேந்திரன்’ படகை ‘வோக்கி’ அழைத்தது. மதன் ஆவலோடு பதில் கொடுத்து, கட்டளைக்குக் காதுகொடுத்தான்.
மக்களைத் தாக்கவந்த எதிரி, புலிகளிடம் சிக்கிப்போயுள்ள முதலாவது சண்டை முனையில்; ஏற்க்கனவே விளங்கப்படுத்தப்பட்டிருந்த தாக்குதல் திட்டத்தின் படி,‘வோட்டர் ஜெற்’ படகொன்றைத் தாக்குமாறு வோக்கி கூறியது.
சுற்றியிருந்த தோழர்கள் கண்கலங்க, சிரித்த முகத்தோடு மதன் புறப்பட்டான். மின்னல் கீற்றென நெருங்கிய கரும்புலிப் படகைக் கண்டு எதிரி தப்பி ஓட முயல, அதற்க்கு அவகாசமில்லாமல், மதன் அதன் மையப்பகுதியோடு மோதினான். பிரகாசித்தேழுந்த ஒளிவெள்ளம் மறைந்தது, இருளோடு இருளாகக் கரும்புகை கரைந்து கொண்டிருக்கும் போது, இரண்டாகப் பிளந்து மூழ்கிக்கொண்டிருந்த ‘P 115′ இலக்க ‘வோட்டர் ஜெற்’ றிலிருந்து புலிகள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
தான் நேசித்த கடலோடும்….. காற்றோடும்….. எங்கள் மதனும்…. அவனது ‘புலேந்திர’ னும்..…
அந்தக் கடற்களம் நீண்டுகொண்டிருந்தது. கடற்புலிகள் கடலில் சந்தித்த முதலாவது பெருஞ் சமர் அதுவாகத்தான் இருக்கமுடியும்.
புலிகளைத் தாக்க வந்த அணியை புலிகள் தாக்கிக்கொண்டிருந்த இரண்டாவது சண்டைமுனையிலிருந்து, ‘குமரப்பா’ படகிற்கு அழைப்பு வந்தது. காத்துக்கொண்டிருந்த வரதன், களத்திற்கு விரைந்தான்.
புலிகளின் சண்டைப் படகுகளால் வளைக்கப்பட்ட நிலையில், தப்ப வழியின்றி தளத்துக்குத் தகவல் அனுப்பிவிட்டு உதவி வரும் வரை சண்டையிடத் தீர்மானித்து விட்ட ஒரு ‘வோட்டர் ஜெற்’ படகு, வரதனின் இலக்கு. ‘வோக்கி’ அவனுக்குத் தாக்குதல் வழிமுறையை வழங்கியது. உதவி கிடைக்குமுன் அதனை உடைக்க வேண்டும்.
இருள், ஆளை ஆள் பார்க்க முடியாத இருள். வளைத்து நிற்கும் புலிகளின் படகுகளை அவதானித்து விலத்தி ஓடி, ‘வோட்டர் ஜெற்’றை சரியாக இனம் கண்டு; அது அவனுடையது தான் என்பதை உறுதிப்படுத்தி இடிக்க வேண்டும். தவறுதலாக எங்களுக்குள் முட்டுப்பட்டாலோ விளைவு விபரீதமானதாக மாறிவிடும்.
சரியான இலக்கை நோக்கி வரதன் நெருங்கினான்; அதிகரித்த வேகத்தோடு. திகைத்த எதிரி எதுவுமே செய்ய முடியாமல் மலைத்துப்போய் நிற்க, அடுத்த கணப்பொழுதில்…..! அந்தக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்….! எதிரியின் படகு…….
எங்கள் அன்பு வரதனும் ‘குமரப்பா’வும் தான்…..
நாகதேவன்துறையிலிருந்த கடற்படைத் தளத்தில் தகவல் தொடர்பு சாதனம், ‘P 121′ என்ற தங்கள் போர்ப்படகை அழைத்துக்கொண்டிருக்க, மூழ்கிக்கொண்டிருந்த அந்தப் படகிலிருந்து, கடற்புலி வீரர்கள் ஆயுதங்களை எடுத்து முடித்துவிட்டார்கள்.
ஒரே பாயில் படுத்து, ஒரே கோப்பையில் சாப்பிட்டு, ஆளுக்காள் தண்ணி ஊற்றி, ஊத்தை தேய்த்து ஒன்றாகவே குளித்து, ஒரே இலட்சியத்தோடு வாழ்ந்த அந்த உயிர் நண்பர்கள்; கிளாலிக் கடலில் நடந்த ஒவ்வொரு சண்டையின்போதும், ஒன்றாகவே நின்று, சிங்களப் பிணந்தின்னிகளை நெருப்பெனச் சுட்டெரித்தவர்கள். சாகும்போது கூட ஒன்றாகவே போனார்கள்.
எங்களுக்காக….. மக்களுக்காக…. மண்ணுக்காக….!
விடுதலைப்புலிகள் (புரட்டாசி, ஐப்பசி 1993) இதழிலிருந்து
No comments:
Post a Comment