அமைச்சுப் பதவிகளை நாம் துறந்தாலும் அரசைப் பலவீனப்படுத்த இடமளிக்கமாட்டோம். நாடாளுமன்றத்தில் பின்னிலை எம்.பிக்களாகச் செயற்பட்டு அரசுக்கான ஆதரவை வழங்குவோம்."
– இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஏப்பிரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆனால், இந்தத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகளை மையப்படுத்தி நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் இரத்தக்களரியை உருவாக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர்.
எனவே, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, நாட்டின் நலன், அமைதி உட்பட மேலும் பல காரணங்களைக் கருத்தில்கொண்டே நாம் அமைச்சுப் பதவிகளைத் துறக்கும் முடிவை எடுத்தோம். சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக நிற்கின்றோம்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பிரதமருடனும், அமைச்சர்களுடனும் கலந்துரையாடினோம்.
பிரதமருடன் பேசியதன் பின்னர் பதவிகளைக் கூட்டாக இராஜிநாமா செய்யும் முடிவை அறிவித்துள்ளோம்..
முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும்.
புனித நோன்பு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்கின்றன. அவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அப்பாவி முஸ்லிம் மக்களைக் கைதுசெய்ய வேண்டாம் எனவும், அவர்களை அச்சுறுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்
அதேவேளை, தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களும் வதைக்கப்படுகின்றனர். இவை நிறுத்தப்படவேண்டும். அனைத்துவித நடவடிக்கைகளும் சட்டத்தின் பிரகாரம் இடம்பெறவேண்டும். அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
தீவிரவாதத்துக்கு உதவியவர்கள் யாராவது இருப்பின் அவர்களுக்குரிய தண்டனையை வழங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இதற்கு நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்" – என்றார்.
இங்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம், "நியாயமான விசாரணைகளுக்கு இடமளித்து அமைச்சுப் பதவிகளைத் துறக்கின்றோம்" – என்றார்.
No comments:
Post a Comment