தம்பி வரைந்த வரைபடம் வலுவிழந்துவிட்டது - விக்கி - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, June 2, 2019

தம்பி வரைந்த வரைபடம் வலுவிழந்துவிட்டது - விக்கி

இந்தியாவின் தெற்கத்தைய கடல்சார் பாதுகாப்பு இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் பின்னணியிலேயே தங்கியுள்ளது என்பதை இந்தியா உணரத் தொடங்கியுள்ளது. புதிய பிரதமர் மோடி அவர்களின் இரண்டாவது ஆட்சிக்கால முதற் பயணம் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் அமைவது தற்செயலான ஒரு காரியமாக எனக்குப் படவில்லை. அதாவது தமிழர்களான எமது பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்த வேண்டிய ஒரு கடப்பாடு இந்தியாவிற்கு எழுந்துள்ளது. வடகிழக்கு இணைப்பு, தாயகத்தில் சுயாட்சி போன்ற கருத்துக்களை நாம் செம்மையாக எடுத்துரைத்தால் இந்தியா ஒரு முக்கியமான விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டி வரும். எமது பிராந்தியங்களில் எமது சுயாட்சி அரசு அமையும் போது அரபிக்கடலும் வங்கக் கடலும் இந்தியாவின் பாதுகாப்புக்காக கைகோர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன்.

தமிழ் மக்கள் பேரவையின் புதிய உறுப்பினர்கள் அறிமுகம் இன்று கந்தர்மடத்திலுள்ள பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய போதே, இப்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்தகால எமது அரசியல், பொருளாதார, சமூக செயற்பாடுகள் எமது உரிமைகளுக்கான அரசியலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் நாம் தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம். எந்த உரித்துக்களையும் தராமலே ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம். ஆனால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று யூகித்தறியக் கூட எமக்கு வல்லமை இல்லாமல் போய் விட்டது. இன்று மக்கள் மத்தியில் விரக்தியும், ஏமாற்றமுமே மேலோங்கி நிற்கின்றன. கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியிலும் எமது நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. எமது இளைஞர்கள் யுவதிகள் ஏதோ காரணங்களுக்காக தொடர்ந்து தமது தாயகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக்குவதற்கு 1919ம் ஆண்டுக்குப் பின்னர் போட்ட திட்டம் எந்த மாற்றமும் இன்றி செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்கள் கண்கள் முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் திட்டச் செயற்பாட்டை தடுத்து நிறுத்த திராணி அற்றவர்களாக நாங்கள் இன்றுள்ளோம். கையாலாகாதவர்கள் ஆகிவிட்டோம் நாம். ஆண்ட பரம்பரையினர் என்று மார் தட்டிய நாங்கள் ஆண்டிகள் ஆகி வருகின்றோம். பிச்சைப் பாத்திரம் ஏந்தும் பிடுங்கல் பெயர்வழிகள் ஆகிவிட்டோம். அரசியல்வாதிகளும் அவிவேகிகள் ஆகிவிட்டார்கள். கிடைத்ததைச் சுருட்டும் கிறுக்கர்கள் ஆகி வருகின்றார்கள். சுற்றி நடப்பவற்றில் அக்கறை அற்று வாழத் தலைப்பட்டு விட்டோம்.

எனினும் நிலைமை இன்னமும் கைமீறிப் போய்விடவில்லை. வலுவான ஒரு மாற்று அணி ஒன்றை உருவாக்கி, உபாயங்களை வகுத்து, சாணக்கியமாக செயற்பட வேண்டிய ஒரு கட்டாய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தமிழ் மக்கள் பேரவை காத்திரமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வழிநடத்தும் காவலனாகவே தமிழ் மக்கள் பேரவை உருவாகியது. ஆனால் இன்றைய தருணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் மிகவும் தளர்வடைந்து இருப்பதுடன் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவை தனது உறங்கு நிலையைக் கலைத்து இயங்கு நிலைக்கு செல்வதற்கான காலத்தின் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை இன்றைய கூட்டத்தின் முக்கிய விடயமாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.

எல்லாவற்றையும் நாம் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கும் நிலையில், எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றியும் அதேசமயம் எவ்வாறு நிலையான சமாதான நடவடிக்கைகளை நோக்கி எமது அரசியலை முன்னெடுப்பது என்பது பற்றியும் பேரவை புதிய உபாயங்களை வகுத்து செயற்பட வேண்டும். இதன் பொருட்டு முதலில் பேரவை மறுசீரமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும்.

பலமான மாற்று அணி ஒன்றை உருவாக்கும் அனுசரணைப் பணியை மேற்கொள்ளும் உடனடி பொறுப்பு பேரவைக்கு தற்போது ஏற்பட்டுள்ளதாக நான் உணர்கின்றேன். இத்தகைய பணிகளை பேரவை நடு நிலைமையுடன் காத்திரமான முறையில் மேற்கொள்வதற்கு ஒரு அரசியல் கட்சியின் தலைவராக செயற்படும் நான் தொடர்ந்தும் இணைத் தலைவர் பதவியில் இருப்பது குந்தகமாக இருக்கும் என்றே கருதுகின்றேன். ஆகவே என்னைத் தொடர்ந்து இணைத்தலைவராக வைத்திருப்பதைப் பற்றியும் நீங்கள் ஆராய வேண்டும். பேராசிரியர் சிற்றம்பலம் போன்றோர் இக்காரியத்தில் ஈடுபட முன்வரமாட்டார்களா என்று ஆராய வேண்டுகின்றேன். நான் வந்து உங்களோடு ஒருவனாக சபையில் இருந்து பங்குபற்ற ஆயத்தமாக இருக்கின்றேன்.

இன்னொரு விடயத்தையும் நாங்கள் கணக்கில் எடுக்க வேண்டும். இன்று இந்தியாவில் பலம் பொருந்திய அரசாங்கம் ஒன்று பதவிக்கு வந்திருப்பதை நாம் வரவேற்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். இதற்காக என்னை இந்தியாவின் கைப்பொம்மை என்று அரசியல் கத்துக் குட்டிகள் சிலர் தப்புக் கணக்குப் போடக் கூடாது. என்னைப் பொறுத்த அளவில் இந்தியாவின் பங்கை நன்கறிந்தவன் நான். இந்திய அரசாங்கங்களின் எந்த வித அறிவுறுத்தல்களையோ உதவிகளையோ தனிப்பட்ட முறைகளில் பெறாமலே என் முடிவுகளுக்கு வந்தவன்.

இந்தியாவிற்கு இன்று இருக்கும் சவால்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வடமேற்கே பாகிஸ்தான் வடகிழக்கே பங்களாதேஷ் உள்ளன. இரண்டுமே இஸ்லாமியப் பெரும்பான்மை அரசுகள். பாகிஸ்தான் அணு ஆயுத பலம் கொண்டது. அத்துடன் இந்தியாவினுள் 20 கோடிக்கும் மேலாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். காஷ்மீர் இன்னமும் பிரச்சனை நிலையிலேயே இருக்கின்றது.

உள்நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் எழுந்தால் நாட்டின் பாதுகாப்பு சவால்களுக்கு உள்ளாகி விடும். எனவே அயல் நாட்டு உள்நாட்டு இஸ்லாமிய பிரச்சனையை இந்தியா தற்போது எதிர்நோக்கியுள்ளது. வட எல்லையில் இருக்கும் சீனா 1962லேயே இந்தியாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு இந்தியாவின் ஒரு பகுதியை இன்றும் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டிருக்கின்றது. அப் போர் நடந்த போது நாங்கள் சட்ட மாணவர்கள். அன்றைய சட்ட மாணவ தலைவர் என்ற முறையில் என் தலைமைத்துவத்தில் அன்று கொழும்பு நகரெங்கும் ஆக்கிரமித்த சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடைபவனிகளையும் முன்னெடுத்தோம். அன்று என்னுடன் தோளுக்குத் தோள் நின்று நடைபவனியில் ஈடுபட்ட ஜோன் அமரதுங்க அவர்கள் இன்றைய அரசாங்கத்தின் மூத்த அமைச்சராவார். இன்று இந்தியாவின் நிலைமை இன்னமும் மோசமாகிவிட்டது.

சீனாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் கொண்ட நாடுகள். இருவரும் சேர்ந்து தரை வழியாக சீனாவுக்கு இந்து சமுத்திரத் தொடர்பை ஏற்படுத்தியுள்ளன. சீனாவின் "One belt one Road" செயற்றிட்டத்திற்கு இது அவசியமாகியுள்ளது. இங்குதான் இலங்கையின் முக்கியத்துவம் புலப்படுகிறது. இந்தியாவைச் சுற்றிவளைத்தல் (Encirclement) சூழ்ந்தடைத்தல் (Envelopment) சிக்கவைத்தல் (Entanglement) என்ற மூன்று வழிகள் மூலம் இந்தியாவைச் சூழ்ந்து இருந்து அந்நாட்டை சிக்கலுக்கு உள்ளாக்க இலங்கை மிகவும் பொருத்தமான மையப்புள்ளியாக இருக்கின்றது.

அண்மையில் இங்கு நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இந்தியாவின் உள்நாட்டு அயல்நாட்டு சவால்களுக்கு மேலதிகமாக தற்போது சர்வதேச இஸ்லாமிய நாடு என்ற IS சவாலையும் இலங்கையினூடாக எதிர் கொள்ள வேண்டியதாக வந்துள்ளது. இலங்கை ஊடாக இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவை ஊடுறுவதற்கான வாய்ப்புக்களை இந்திய புலனாய்வுத்துறை வெளிப்படுத்தி இருந்தது. அதிகாரத்தில் இருந்த எம்மவர்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. எனவே மூன்று இஸ்லாமிய அமைப்புக்களின் சவாலானது இலங்கையின் ஊடாக இந்தியாவை வந்து சேரக் கூடும் என்ற பயம் இந்தியாவுக்கு உண்டு. இதனால்த்தான் முற்கூட்டியே இந்தியா இலங்கை இரண்டுக்கும் வரக் கூடிய இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி இந்தியா எமது அரசாங்கத்துக்கு வெளியிட்டு இருந்தது. ஆனால் எமது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஆதங்கம் இந்தியாவிற்கு உண்டு.

தொடர்ந்து வந்துள்ள இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவை இலங்கையின் வரலாற்று எதிரியாகவே கணித்து வந்துள்ளனர். ஆனால் எம்முடன் நடந்து கொள்வது போன்றே இராஜதந்திர உள்நோக்கத்துடன் இந்தியாவை வெளிப்படையாக நட்பு நாடு என்று காட்டிக் கொண்டாலும் அவர்களது அடிமனதில் இந்தியா எதிரி நாடாகவே கணிக்கப்பட்டு வருகின்றது. அதனால்த் தான் தமக்கு வாய்ப்பு ஏற்படும் போது எல்லாம் இந்தியாவின் எதிரி நாடுகளுடன் இலங்கை கைகோர்த்து வந்துள்ளது. முக்கியமாக சீனாவுடன் ஆத்மார்த்த உறவைப் பேணி வந்துள்ளது இலங்கை.

அண்மையில் குண்டுத் தாக்குதல் நடந்ததும் இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பயணம் சீனாவிற்கானதாகவே அமைந்தது. இவை யாவும் இந்தியாவால் அவதானிக்கப்பட்டு வருகின்றது.

ஒருவேளை இலங்கைத் தமிழர்களை முற்றாக நசித்து விட்டால் இந்தியாவுடன் நெருங்கிப் பழகாமல் இந்தியாவின் எதிரி நாடுகளுடன் வலுவாகக் கைகோர்க்க முடியும் என்று இலங்கை எண்ணக் கூடும். இதனால்த்தான் எமது காணிகளை அபகரித்து, இராணுவத்தை உள் நிறுத்தி பலவிதத்திலும் எம்மைப் பாதிப்படையச் செய்து வருகின்றார்கள் என்று எண்ண இடமிருக்கின்றது. பல விதங்களில் எம்மைப் பலவீனமடையச் செய்துள்ளன தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள்.

வடகிழக்கு பிரிக்கப்பட்டு இலங்கை இந்திய ஒப்பந்தச் சரத்துக்களை அர்த்தமற்றதாக்கிவிட்டது இலங்கை. ஆனால் அண்மைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சில புதிய பாடங்களை எமக்குக் கற்பித்துத் தருகின்றது. இந்தியாவின் தெற்கத்தைய கடல்சார் பாதுகாப்பு இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் பின்னணியிலேயே தங்கியுள்ளது என்பதை இந்தியா உணரத் தொடங்கியுள்ளது. புதிய பிரதமர் மோடி அவர்களின் இரண்டாவது ஆட்சிக்கால முதற் பயணம் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் அமைவது தற்செயலான ஒரு காரியமாக எனக்குப் படவில்லை.

அதாவது தமிழர்களான எமது பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்த வேண்டிய ஒரு கடப்பாடு இந்தியாவிற்கு எழுந்துள்ளது. எமது பரஸ்பர பாதுகாப்பை முன்வைத்து இந்தியாவுடன் சுமூகமான உறவு முறையைப் பேண வேண்டிய அவசியம் இருதரப்பாருக்கும் உண்டு என்பதே எனது கருத்து. வடகிழக்கு இணைப்பு, தாயகத்தில் சுயாட்சி போன்ற கருத்துக்களை நாம் செம்மையாக எடுத்துரைத்தால் இந்தியா ஒரு முக்கியமான விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டி வரும். எமது பிராந்தியங்களில் எமது சுயாட்சி அரசு அமையும் போது அரபிக்கடலும் வங்கக் கடலும் இந்தியாவின் பாதுகாப்புக்காக கைகோர்க்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு கடல் ரீதியான ஊடுறுவல் அச்சமின்றி பலமுற்று இருக்க நாங்கள் தக்க நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்.

எல்லா விடயங்களுக்குமான முடிவுகளை இன்றைய கூட்டத்தில் எடுத்துவிட முடியாது. ஒவ்வொரு விடயமாக நன்கு ஆராய்ந்து முடிவுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். சகலதையும் ஆராய்ந்து ஒரு முழுமையான நோக்குடன் நாங்கள் செயல்ப்பட வேண்டும். ஆகையால், என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றோம் என்பதனை அடையாளம் கண்டு அவை தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவதற்கான ஒரு கால அட்டவணையை தயாரித்து செயற்படுவது சிறந்தது என்று நினைக்கின்றேன். இன்று பேரவையின் புதிய உறுப்பினர்களாகஇறங்குபவர்களும் இவ்வாறான அரசியல், பொருளாதார, சமூக, கல்வி இத்யாதி காரியங்களில் போதிய சிரத்தைக் காட்ட வேண்டும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். சிங்கள சகோதரர்கள் 1919ம் ஆண்டு தொடக்கமே இலங்கைக்கான பௌத்த சிங்கள வரைபடத்தைத் தயாரித்து விட்டார்கள். 1971ம் ஆண்டு முதல் பதுர்டீன் மகுமுட் காலத்தில் இருந்து முஸ்லீம் சகோதரர்கள் தமது இஸ்லாமிய வரைபடத்தைத் தயாரித்து விட்டனர். தம்பி தயார் செய்த வரைபடம் 30 ஆண்டுகளின் பின்னர் வலுவற்றுப் போய்விட்டது. புதிய வரைபடம் ஒன்று எமக்குத் தேவையாக உள்ளது. அதைத் தயாரிப்பது உங்கள் பொறுப்பு" என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad