அங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூறியபோது யோகேஷ்வரன் ஐயா அதை எதிர்த்து அவர் பொருத்த மற்றவர் என கூறி எனது பெயரை முன்மொழிந்தார்.
தலைவர் மாவை அண்ணர் துரைராசசிங்கத்தின் பெயரை ஏற்கனவே முன்மொழிந்தமையால் தலைவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவரும் விரும்பவில்லை அதை ஏற்றுக்கொண்டதால் என்னை வழிமொழியவில்லை என்பதே உண்மை.
இதில் மட்டக்களப்பில் இருந்து இரண்டு தெரிவுகள் வந்த போது மூன்றாவது தெரிவாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த குலநாயகம் என்பவரின் பெயரும் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. அதன்பின் சம்மந்தன் ஐயா போட்டிகள் தேவை இல்லை துரைராச்சிங்கம் தொடர்ந்தும் செயலாற்றுவதற்கு ஒத்துழைப்பு வாங்குமாறு கேட்டார்.
அதன்பின் யோகேஷ்வரன் ஐயா தமது முன்மொழிவை மீளப்பெறுவதாகவும் தாம் ஏன் துரைராசசிங்கத்தை எதிர்ப்பதற்கான காரணம் என்ன எனவும் விளக்கமாக கூறினார்.
இதற்கு பதில் வழங்கிய தலைவர் மாவை அண்ணர் மூன்றுமாத காலத்திற்குள் துரைராசசிங்கம் அவர்கள் சரிவர இயங்காவிட்டால் மாற்று வழியை மேற்கொள்வதாக கூறினார்.
அதன்போது யாழில் இருந்து முன்மொழியப்பட்ட குலநாயகம் தான் செயலாளர் தெரிவில் இருந்து விலகுவதாக கூறினார்.
இதுதான் அங்கு நடந்தது.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் உண்டு உண்மையை அறியலாம்.
தமிழரசுக்கட்சி ஏனய கட்சிகள் போன்று இல்லை எப்போதும் கட்சி தலைக்கு மதிப்பு வழங்குவதிலும் அவர்கள் எடுக்கும் முடிவுகளையும் மதிக்கின்ற பாரம்பரியம் தொடர்ந்து பேணப்படுவது வழமை அது 16இவது தேசிய மாநாட்டிலும் பிரதி பலித்தது.
பதிவர் - அரியம்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் தெரிவில் இன்று சுவாரஸ்மான பல சம்பவங்கள் நடந்துள்ளன. சிலபல இழுபறியின் பின்னர் கி.துரைராசசிங்கமே செயலாளராக மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கி.துரைராசசிங்கத்தின் நடவடிக்கைகளிற்கு கிழக்கிலேயே கடுமையான எதிர்ப்புக்கள் உள்ளன. கிழக்கு கட்சி பிரமுகர்கள் பலர் அவருடன் நல்ல உறவில் இல்லை.
என்றாலும், இரா.சம்பந்தன் தனது நம்பிக்கைக்குரிய விசுவாசியாக அவரை கருதுகிறார். கிழித்த கோட்டை தாண்ட மாட்டார் என சம்பந்தன் நம்புவதால், அவரையே தொடர்ந்து செயலாளராக வைத்திருக்க சம்பந்தன் விரும்புகிறார்.
தமிழ் அரசு கட்சியின் 15 தேசிய மாநாடுகள் இதுவரை நடந்துள்ளன. அவை எதிலும் நடக்காத விதத்தில் இம்முறை செயலாளர் தெரிவு நடந்தது.
செயலாளராக கி.துரைராசசிங்கத்தையே தொடர வைக்க கட்சி தலைமை விரும்புவதை அறிந்ததும், மட்டக்களப்பு எம்.பி சீ.யோகேஸ்வரன் செயலாளர் பரிந்துரையொன்றை எழுத்துமூலம் வழங்கியிருந்தார். முன்னாள் மட்டக்களப்பு எம்.பி அரியநேந்திரனை அவர் பிரேரித்திருந்தார்.
இந்த விவகாரத்தை இன்று காலையில் கவனத்தில் எடுத்த கட்சி தலைமை, செயற்குழு கூடுவதற்கு முன்பாக மார்ட்டின் வீதி அலுவலகத்தில் அவசரமாக ஆலோசித்தனர். போட்டி வரை சென்றால் சிக்கலாகிவிடும் என்று கருதியதால், வேறொரு உத்தியை பாவிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி கூட்டம் தொடங்கியதும், வழக்கத்திற்கு மாறாக மாவை சேனாதிராசா உரையாற்றினார். அப்போது அவர் ஒரு பீடிகை போட்டார். நான் ஒரு தெரிவு முன்வைக்கப் போகிறேன், உங்களிற்கு ஆட்சேபனையில்லையெனில் அதை அங்கீகரியுங்கள் என்று குறிப்பிட்டு, கட்சியின் துணைத்தலைவர்களாக சீ.வீ.கே.சிவஞானம், பொன்செல்வராசா ஆகியோரை பரிந்துரைத்தார். அதற்கு உறுப்பினர்கள் அங்கீகாரம் அளித்தனர்.
இதையடுத்து, கட்சியின் செயலாளராக கி.துரைராசசிங்கத்தை நியமிப்பதாக அறிவித்தார்.
உடனே, சீ.யோகேஸ்வரன் எழுந்த ஒரு பிடிபிடிக்கத் தொடங்கினார். சொந்த தொகுதியை கோட்டை விட்டவர், மாவட்டத்தில் எம்முடன் பேசாம், எம்மை ஒதுக்கி செயற்படுபவர். மாவட்ட மட்டத்தில் செயற்படுபவர் கட்சிக்கு செயலாளராக தேவையில்லையென்றார்.
இதற்குள் எம்.ஏ.சுமந்திரன் ஒரு கருத்தை சொன்னார். கட்சி தலைவரால் நியமனங்கள் வழங்கப்பட்டால் அதற்கு உறுப்பினர்களின் அங்கீகாரம் தேவையில்லை, கட்சி தலைவருக்கு நியமிக்கும் அதிகாரமுள்ளது என்றார்.
இதையடுத்து, யோகேஸ்வரின் பரிந்துரையை வழிமொழிவதற்கு ஏனையவர்கள் தயங்கினர். இதற்குள், குலநாயகத்தின் பெயரை குருமூர்த்தி முன்மொழிய, இன்னொருவர் வழிமொழிந்தார். அரியநேந்திரனின் பெயர் வழிமொழியப்படாததால், குலநாயகம், துரைராசசிங்கத்திற்கிடையில் வாக்கெடுப்பு விடப்பட தயாரான போது, இரா.சம்பந்தன் உரையாற்ற போவதாக கூறி, ஒலிவாங்கியை பெற்றார்.
வாக்கெடுப்பு தேவையில்லை, துரைராசசிங்கமே பதவியில் தொடரட்டும் என்றார்.
இதை ஏற்ற குலநாயகம், போட்டியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டார்.
எனினும், துரைராசசிங்கத்தின் நியமனத்தை சீ.யோகேஸ்வரன் எதிர்த்தார். இரா.சம்பந்தனும், மாவையும் அவரை சமரசப்படுத்தினர். இனிமேல் செயலாளர் முன்னரைப் போல நடக்க மாட்டார், அவருக்கு மூன்று மாத அவகாசம் கொடுங்கள், அதற்குள் மாற்றமில்லையென்றால், ஆனை மாற்றலாமென எதிர்ப்பை தற்போதைக்கு தள்ளி வைத்துள்ளார்கள்.
No comments:
Post a Comment