"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்படுத்தி வாக்குக் கேட்பதற்காகத் தமிழ் மக்களிடம் சரணாகதி அடைவதில் வெட்கம் இல்லையா? ராஜபக்ச அணியினர் எப்படியெல்லாம் அழுது ஓலமிட்டு வாக்குப் பிச்சை கேட்டாலும் அவர்களுக்குத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்கள்."
- இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
'ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதையோ அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை. அவருடைய வேண்டுகோளுக்கு அமைவாக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்திருந்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளை தமிழ் மக்கள் இப்போதும் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றால், ரணில் அரசுக்கு எதிராகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்' என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
மஹிந்தவின் கருத்துத் தொடர்பில் பிரதமர் ரணிலிடம், வெளிநாட்டு ஊடகத்தின் கொழும்புச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த ரணில் மேலும் தெரிவித்ததாவது:-
"மிகப் பெரிய மனித உரிமை மீறல்களைப் புரிந்துதான் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போரை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது ராஜபக்ச அரசு. இந்த மனித உரிமை மீறல்களால் தமிழ் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குரிய பதிலடியை 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வழங்கிவிட்டார்கள்.
இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் ராஜபக்ச அணியைத் தோற்கடிக்கும் வகையில் தமது வாக்குக்களை ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தமிழ் மக்கள் வழங்குவார்கள். அவர்கள் சலுகைகளுக்கு ஒருபோதும் விலைபோக மாட்டார்கள். இந்த நாட்டில் சம உரிமைகளுடன் வாழவே அவர்கள் ஆசைப்படுகின்றார்கள்.
எனவே, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நாட்டில் மூவின மக்களும் சம உரிமைகளுடன் பாதுகாப்புடன் வாழக்கூடியமையை உறுதிப்படுத்தும் அதிகாரப் பகிர்வை வழங்குவதே எமது நிலைப்பாடாக உள்ளது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை" - என்றார்.
No comments:
Post a Comment